விட்டாள் குழந்தை 'பிளாஸ்டிக்' பெட்டி தானே? சுக்கு சுக்காக உடைந்து போயிற்று. நீலாவுக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. குழந்தையின் கன்னத்தைத் திருகிக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கீழே வந்தாள்.
"பாருங்கள் மன்னி! உங்கள் பெண் செய்திருக்கிற வேலையை! குழந்தைகளுக்குச் சிறு வயசிலிருந்தே நல்ல 'டிரெய்னிங்' கொடுக்க வேண்டும்!" என்று படபடப்பாகப் பேசி விட்டுப் போனாள் நீலா.
"மாமா வீட்டிற்குப் போய்விட்டு வந்த பிறகு விஷமக் கொடுக்காக ஆகி இருக்கிறது!" என்று பாட்டியும், அத்தையும் வேறு 'ஸர்ட்டிபிகேட்' கொடுத்தார்கள்.
"கிடக்கிறது விடு, நாலணா பெட்டிதானே? வீட்டில் எத்தனையோ இரைபடுகிறது” என்று தாத்தா சிபாரிசுக்கு வராமல் இருந்தால் அவர்கள் இன்னும் ஏதாவது சொல்லி இருப்பார்கள்.
கண்களில் கண்ணீர் தளும்ப ஒரு பக்கமாக நின்று கொண்டிருந்த குழந்தையை மறைவில் போய்ச் சம்பகம் அணைத்து கொண்டாள். "இனிமேல் மாடிப் பக்கம் போகாதே, அம்மா!" என்று கண்ணீர் வடித்தாள்..
முன்பு ஒரு நாள் வாசனைத் தைல புட்டியைக் கீழே போட்டு உடைத்து விட்டாள், நீலா. அதைப் பற்றி வீட்டில் எல்லோருக்கும் கோபமாக இருந்தாலும், "போகிறது போ. கை தவறிப் போய்விட்டது. பூமிதேவி ஆசைப்பட்டாள்!” என்றெல்லாம் மீனாட்சி அம்மாள் பேசினாள். 'குழந்தை யைக் கண்டாலும் தான் இவர்களுக்கு ஆகவில்லை. என்னைக் கண்டாலும் பிடிக்கவில்லை' என்று அதைக் கேட்டதும் சம்பகம் உருகினாள்.
தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கைகளை அன்புடன் வருடினாள் சம்பகம். தூக்கத்தில், தாயை ஆவலுடன் கட்டிக் கொண்ட பானுவின் ஸ்பரிசம், நொந்து போன சம்பகத்தின் மனத்துக்கு ஆறுதலாக இருந்தது. கண்களை அழுத்தி மூடிக் கொண்டாலும் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே இருந்தாள்.
கூடத்தில் மாட்டி இருந்த கடிகாரம் 'டாண், டாண்' என்று இரண்டு அடித்தது. கோடை காலமாதலால் இறுக்கமாக இருக்கவே, பானுவுக்குப் போர்த்திவிட்டு விட்டு, சம்பகம்