தபாலாபீஸ் வரை பார்வதியையும் உடனழைத்துச் சென்றே அந்தக் கடிதத்தைப் பெட்டியில் போட்டாள் வசந்தி. தபாலாபீஸ் வாசலில் இருந்தே வசந்தியும், பார்வதியும் அவரவர் வழிகளில் பிரிந்து சென்றனர்.
பார்வதி வீட்டிற்கு திரும்பிச் சென்றபோது அவள் தந்தை விசுவேசுவரசர்மா பூமிநாதபுரத்துக்குப் புறப்பட்டுப் போயிருந்தார். அம்மா வாசல் திண்ணைப் பிறையில் அந்தி விளக்கு ஏற்றி வைத்து விட்டு உட்கார்ந்திருந்தாள். பிறைக்குக் கீழே திண்ணையில் தண்ணீர் தெளித்து அழகாகச் சிறிதாகத் தாமரைப்பூக் கோலம் போட்டிருந்தாள் அம்மா. வயதாகியும் கை சிறிதும் நடுங்காமல் அம்மாவால் எப்படி இத்தனை அழகாக அளவாகக் கோலம் போட முடிகிறதென்று பார்வதி ஒவ்வொரு முறையும் அம்மாவின் கோலத்தைப் பார்க்கும் போது ஆச்சரியப்படுவதுண்டு. தாமரைப்பூ, தேர் எதைப் போட முயன்றாலும் கோலம் போடும் போது தனக்குக் கைகோணி விடுவதும், அம்மாவுக்கு அச்சுப் போல் கச்சிதமாக வரைய வருவதும் சேர்ந்தே நினைவு வரும் அவளுக்கு. இதற்காக அம்மாவிடம் அவள் பொறாமைப் படுவது கூட உண்டு. பார்வதி பாத்திரக்கடையில் தகரத் தகட்டில் தாமரைப் பூ போலவும், தேர் போலவும் செய்த கோல அச்சுக்களையும் கோலக் குழலையும் வாங்கப் பணம் கேட்ட போது அம்மா மறுத்து விட்டாள்.
"எங்க நாளிலே இதெல்லாம் ஏதுடி...? கன்னியாப் பெண்களோட மனசுலேயும் கைகள்ளேயும் லட்சுமி கடாட்சமும், சரஸ்வதி கடாட்சமும் போட்டி போட்டுண்டு நிற்க வேண்டாமோ...? சிரத்தையும் அக்கறையும் இருந்தாக்க மனசு நெனைச்சப்படி கை கோடு இழுக்காதோ...? கோலத்துக்கு அச்சும், குழலும் வந்திருக்குன்னு சொன்னா அந்த நாளிலே சிரிப்பாடீ... சிரிப்பா... அதெல்லாம் ஒண்ணும் வாங்க வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாகப் பழகு. எல்லாம் தானாக வந்துடும்..."
சங்கரமங்கலம் அக்கிரகாரத்தின் மூன்று தெருக்களிலும் தேடிச் சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்தால் தேறக்கூடிய முதல் தரமான குடும்பத் தலைவிகளில் முதல் இடம் விசுவேசுவர சர்மாவின் மனைவி காமாட்சி அம்மாளுக்குக் கிடைக்கும். 'கிருகலட்சுமி' என்ற பதத்துக்குத் தனியாக இலட்சணம் சொல்லி விளக்கிக் கொண்டிருப்பதைவிட அந்த அம்மாளை அப்படியே சுட்டிக் காட்டி விடலாம். ஆனாலும், அவளுக்குக் காது கொஞ்சம் மந்தம் என்ற ஒரே காரணத்துக்காக சர்மா அவளிடம் திட்டுவதும் கூப்பாடு போதுவதும் வழக்கமாக இருந்தது.