(Reading time: 17 - 34 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

அப்படி அவர் திட்டுவதற்கும் கூப்பாடு போடுவதற்கும் கூடப் பல சமயங்களில் ஆழ்ந்த அர்த்தம் இருக்காது. அவள் மேல் தனக்கு இருக்கும் உரிமையையும், ஆதிக்கத்தையும் காட்டும் ஓர் உணர்ச்சி வெளிப்பாடாகவே சர்மாவின் இந்த விதமான கோபதாபங்கள் அமையுமே தவிர வேறு ஆழ்ந்த பொருளோ பொருத்தமோ அவற்றுக்கு இருக்காது. அந்த அம்மாளும் அதை அப்படித்தான் புரிந்து கொண்டிருந்தாள். பிரியமுள்ளவரிடத்தில் பெய்யப்படும் வசைச் சொற்களுக்குப் பொருளே இருப்பதில்லை. பிரியமும் உறவும் பாசமும் ஆகிய அன்புப் பெருக்கில் சொற்கள் கரைந்து போய் விடும்போது, அப்புறம் அவற்றுக்குத் தனியே பொருள் எங்கிருந்து கிடைக்கும்...?"

  

சர்மாவின் கோபமும், கூப்பாடும் அவர் தன்னிடம் அப்போது ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார் என்பதற்கும் அதிகமாகவோ, மேலாகவோ, வேறெந்தப் பொருளையும் காமாட்சியம்மாளின் மனதில் உண்டாக்கியதே இல்லை. அந்த அளவு கடுஞ்சொற்களைக்கூட அநேகமாக அவளறிந்தவரை அவர் வேறு யாரிடமும் உரிமையோடு உபயோகப்படுத்துவதில்லை. தன்னைத் தான் அவர் அப்படித் திட்டுவதற்கு உரிமை கொண்டாடுகிறார் என்பதே காமாட்சியம்மாளுக்கு உள்ளூறப் பெருமைதான். கணவனின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்கிறோம் என்பதற்காகவே பெருமப்படும் பழைய தலைமுறை இந்தியப் பெண்களில் ஒருத்தியாகத்தான் அந்த அம்மாளும் இருந்தாள். கணவன் என்னும் ஆதிக்கத்திலிருந்தோ குடும்பம் என்னும் ஆதிக்கத்திலிருந்தோ விடுபட விரும்பும் நவீன காலத்து நகர்ப்புற இந்தியப் பெண்களின் முனைப்பு அவர்கள் தலைமுறையின் கடைக்கோடியில் கூட இன்னும் எட்டிப் பார்க்க வில்லை. தங்களது சுதந்திரமும், பெருமையும், பீடும், சுகமும், துக்கமும், வீடு என்னும் எல்லைக்குள், குடும்பம் என்னும் சாம்ராஜ்யத்துக்குள் மட்டுமே இருப்பதாக எண்ணிக் கருமமே கண்ணாக அந்த தலைமுறையினர் உழைத்துக் கொண்டிருந்தனர். கன்னியாகத் தாயாகப் பாட்டியாக அந்த எல்லைக்குள்ளேயே அவர்கள் வளைய வளைய வந்து கொண்டிருந்தார்கள். அதை விடச் சுதந்திரமும், சுகமும் உள்ள வாழ்வு ஒன்று அந்த வட்டத்துக்கு வெளியே இருப்பதாக அவர்கள் ஒரு போதும் எண்ணிப் பார்த்து ஏங்கியதில்லை.

  

"என்னடி காமூ! பிள்ளையாண்டான் தூர தேசத்துக்குப் போய் வருஷக் கணக்கிலே ஆச்சே...? வரச் சொல்லி ஒரு கால்கட்டைப் போட்டு அனுப்பப் படாதோ...?" என்ற விசாரணையுடன் பக்கத்து வீட்டு முத்து மீனாட்சிப் பாட்டி திண்ணையில் வந்து உட்கார்ந்தாள். பாட்டி காமாட்சியம்மாளின் காதில் விழுவதற்காக உரத்த குரலில் பேசியது தெருவில் எதிர்ச்சரகத்து வீடுகள் வரை கேட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.