யாக்ஞவல்கியத்தை மேற்கோள் காட்டி இறைமுடிமணி பேசிவிட்டுப் போனபின்பும் சர்மாவின் மனதுக்குள் நெடுநேரம் வரை அந்த மேற்கோளைப் பற்றிய சிந்தனையே இருந்தது. பின்பு வீட்டுக்குள்ளே போய்க் காகிதமும் பேனாவும் எடுத்துக் கொண்டு வந்து இறைமுடிமணி கேட்ட காலி மனை விஷயமாக ஸ்ரீமடத்துக்குக் கடிதம் எழுதினார். சீக்கிரம் கிடைக்கச் சொல்லிக் கல்லூரிக்குச் செல்லும் தன் மகன் குமாரிடம் அந்தக் கடிதத்தை உடனே கொடுத்து அனுப்பினார்.
மனம் என்னவோ இடைவிடாமல் ரவியையும் அவனோடு வரப்போகும் அந்நிய நாட்டு யுவதியையும் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. "ராணி மங்கம்மாள் காலத்துத் தர்ம சத்திரம் மாதிரிப் பிரைவஸியே இல்லாத உம்ம வீட்டிலே அவாளை எப்பிடித் தங்க வைக்கப் போகிறீர்" - என்று வேணு மாமா கேட்டிருந்த கேள்வியும் கூடவே ஞாபகம் வந்தது. ரவியையும் அவனோடு வருகிற பெண்ணையும் வேணுமாமா வீட்டு மாடியில் தங்க வைப்பது சரியாகவும் பொருத்தமாகவும் இராதென்று அவர் நினைத்தார். சாதாரணமாகவே வம்பு பேசக் கூடிய ஊர் இன்னும் அதிகமாக வம்பு பேசுவதற்குத் தான் அது வழிசெய்யும் என்று அவருக்குத் தோன்றியது. 'குடும்பத்துக்கும் அவனுக்கும் பெரிய மனஸ்தாபமாம்; அதனாலே தான் அப்பா அம்மாவோடு சொந்த வீட்டில் தங்காமல் வேணு மாமா வீட்டில் போய் தங்கியிருக்கிறானாம்' - என்று ஊரிலே உள்ளவர்கள் பேசத் தொடங்கி விடுவார்கள்.
சர்மாவின் யோசனை சிறிது கலைந்தது. பார்வதி புத்தக அடுக்கும் கையுமாகப் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டிருந்தவள் தெருவாசலில் படியிறங்குமுன் அவரிடம் சொல்லிக் கொண்டு போனாள். அவர் மனத்தினுள் ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவராக வீட்டின் உட்புறம் எழுந்து சென்றார். கூடத்திலும், மாடியிலும் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். மாடி ஹாலில் கால் அடியினாலேயே நீள அகலத்தை ஒரு முறை அளந்தார்.
அப்போது அவருடைய மனைவி காமாட்சி அம்மாள் சமையலறையில் காரியமாக இருந்தாள். அந்த வீட்டில் குளியலறை இணைப்புடன் தனியாக ஓர் அறை கட்டிக் கொள்ள ரவிக்கு எல்லா உரிமையும் இருந்தது. சில ஆண்டுகளாக மாதாமாதம் அவன் அனுப்பியிருந்த பணமேகூட வட்டியுடன் சேர்த்து ஒரு பெருந்தொகையாக பாங்க் கணக்கில் இருந்தது. ஆனால் அப்படியெல்லாம் இருந்தும்கூட அவன் கைப்படக் கடிதத்தில் 'எனக்கு அந்த வசதி செய்துதர வேண்டும், இந்த வசதி செய்து தர வேண்டும்' என்று எதுவும் அவருக்கு வற்புறுத்தி