வெறுப்பாகக் கேட்டுண்டீர்! இங்கே வந்து பார்த்தால் ரொம்ப ஜரூரா எல்லா ஏற்பாடும் பண்ணியிருக்கீரே!"
"மனசுக்கு பிடிக்கிறதோ, பிடிக்கலையோ செஞ்சு ஆகணுமே?"
"அப்படியெல்லாம் சொல்லப்படாது சர்மா. மனசுக்குப் பிடிக்காமப் போறாப்பல இப்ப ஒண்ணும் நடந்துடலே" என்று சொல்லி வேணு மாமா அவரை உற்சாகப்படுத்திவிட்டுப் போனார்.
பத்து நாட்களுக்குள் எல்லா வேலைகளும் முடிந்து விட்டன. தனியறை - தங்குவதற்கு வசதிகள் எல்லாம் செய்யப்பட்டாயிற்று. வேணுமாமாவும் அவர் பெண் வசந்தியும் கூட வந்து பார்த்துவிட்டுச் சர்மாவுக்கு நற்சான்றிதழ் வழங்கி விட்டார்கள்.
அந்த வேலைகள் முடிந்து வெள்ளையடித்துச் சுத்தம் செய்த தினத்தன்றுதான் ரவியிடமிருந்து அவனும் கமலியும் புறப்பட்டு வருகிற தேதி முதலிய விவரங்கள் பற்றிக் குறிப்பிட்டுக் கடிதமும் வந்திருந்தது. அதிகம் செலவழித்து விமானத் தபால் உறையில் வைக்கப்பட்டிருந்த அந்தக் கடிதத்தோடு இன்னோர் ஆச்சரியமும் இணைந்திருந்தது. தமிழக முறையில் அழகிய புடவையணிந்து திலகமிட்டுக் கொண்டு ரவிக்கு அருகில் கமலி அமர்ந்திருக்கிற வண்ணப் புகைப்படம் ஒன்றும் அந்த உறையில் இருக்கக் கண்டார் சர்மா. வருகிற தேதி முதலிய விவரங்களை எழுதிவிட்டு, "இதனுடன் உள்ள படம் இங்கே இந்தியத் தூதரக நண்பர் ஒருவர் எங்களுக்கு அவர் வீட்டில் விருந்தளித்த போது எடுத்த படம். அவர் வீட்டுப் பெண்களே கமலிக்குப் புடவை அணிவித்துப் பொட்டுவைத்து அழகு பார்த்து மகிழ்ந்தார்கள். இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்" என்பதாக அந்தப் படத்தைப் பற்றியும் விவரம் குறிப்பிட்டிருந்தான் ரவி. உண்மையில் அந்தப் படத்தில் அந்தக் கோலத்தில் கமலி மிகமிக இலட்சணமாகத் தோன்றினாள். சர்மாவுக்கு அந்தப் படம் மிகவும் பிடித்துப் போயிற்று. காமாட்சியிடம் விஷயத்தைச் சொல்லி விடுவதற்கு அதுதான் சரியான சமயம் என்று அவருக்குப் பட்டது.
முன்னுரை, பீடிகை எதுவும் போடாமல், "அடியே உன் பிள்ளை எழுதியிருக்கான்...படிக்கிறேன் கேளு!" என்று இரைந்து படித்துவிட்டு மாடப் பிறையில் வைக்கச் சொல்லி உறைக்குள் இருந்த படத்துடன் சேர்த்தே கடிதத்தைக் காமாட்சி அம்மாளிடம் கொடுத்தார் சர்மா. படத்தை அவள் பார்க்க வேண்டுமென்று எண்ணினார் அவர். படத்தைப் பார்க்க நேர்ந்தால் காமாட்சியம்மாள்