உணர்ச்சி வசப்படக்கூடும் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். ஆனால் அந்த அம்மாளிடம் அசாதாரணமான அமைதியே தெரிந்தது.
"ஏன்னா! அவன் மட்டும் தனியா வரலை போலிருக்கே?... இன்னும் யாரோ கூட வராங்கிற மாதிரி படிச்சேளே?...."
"ஆமாம்!... அது சரி உங்கிட்டக் கொடுத்த அந்தக் கவர்லே ஒரு படம் இருந்துதே;... அதை நீ பார்க்கலியா காமாட்சி?"
"இல்லையே? லெட்டரை மட்டும்தான் நீங்க படிச்சேள், கேட்டேன், படம் எங்கே இருக்கு?"
சர்மா அந்த உறையை மறுபடி வாங்கி அதிலிருந்த படத்தைத் தனியே எடுத்து அவளிடம் நீட்டினார். காமாட்சியம்மாள் படத்தை வாங்கிப் பார்த்தாள்.
"இந்தப் பொண் யாரு?"
"அதுதான் எழுதியிருக்கானே,... கமலீன்னு... படிச்சேனே நீ கேழ்க்கலியா?"
"யாரு இவ?"
"ரொம்ப லட்சணமா இல்லை?"
"வயசுக்கு வந்து நல்ல கலரும் இருந்து உயரமும் வளர்த்தியுமா வந்தா எந்தப் பொண்ணும் அழகுதான். அழகுக்கு என்ன கொறைச்சல்? இது யாருன்னு சொல்லுங்களேன்...? புடவை பொட்டு எல்லாம் இருந்தாலும் நிறம், பார்வை ஒண்ணும் நம்மூர்ச் சாயல்லே இல்லியே?"
"ரவியோட சிநேகிதி... பிரெஞ்சுக்காரி...?"
"அவனோட இங்கே கூட வரதா எழுதியிருக்கானே... அது இவ தானே?"
"ஆமாம்."