"நம்ம தேசம் ஊரு எல்லாம் சுத்திப் பார்க்கறத்துக்காக வராளாக்கும்."
"ஆமாம்! அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன்."
இதற்கு மேல் காமாட்சியம்மாள் அவரிடம் எதுவும் கேட்டுக் கொண்டு நிற்கவில்லை. கடிதத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போய் விட்டாள். தனக்கும் கமலிக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பிட்டு முன்பு ரவி எழுதிய கடிதத்தை வேணு மாமாவுக்கும் அவர் மகள் வசந்திக்கும் மட்டும் காட்டி விட்டு இரும்புப் பெட்டியில் ரகசியமாக வைத்துப் பூட்டிய மாதிரி இந்தக் கடிதத்தைச் சர்மா பத்திரப்படுத்தவில்லை. கூடத்தில் உள்ள மாடப்பிறையில் மற்றெல்லாக் கடிதங்களையும் சாதாரணமாகப் போட்டு வைப்பது போல் போட்டு வைத்திருந்தார். சாயங்காலம் கல்லூரியிலிருந்து வந்த பின் குமார், பார்வதி எல்லாருமே அந்தக் கடிதத்தைப் படித்தார்கள். படத்தைப் பார்த்தார்கள். தீக்குச்சியை உரசிச் சுடர் தோன்றி அந்தச் சுடர் விரலைச் சுடுகிற எல்லைக்கு வந்ததும் குச்சியை சுடரோடு அவசர அவசரமாகக் கீழே போட்டு விடுகிற மாதிரிக் குழப்பத்தைத்தான் இனி உண்டாக்கும் என்ற எல்லையை அடைந்துவிட்ட அந்த ரகசியத்தை இப்போது மனத்திலிருந்து உலகுக்காக வெளியேற்றினார் சர்மா. தொடக்கத்தில் அவர் மனத்திலிருந்த விகல்பமும் வெறுப்பும் கூட இப்போது மெல்ல மெல்ல அமுங்கிப் போயிருந்தது. சில ஆயிரம் ரூபாய்களைச் செலவழித்துத் தனியறை - குளியல் வசதி இணைப்பு, வாஷ்பேஸின் - கண்ணாடி, சாப்பாட்டு மேஜை நாற்காலிகள்... எல்லா ஏற்பாடும் அந்தக் கர்நாடகமான பழைய வீட்டில் செய்யப்பட்டிருந்தன. பம்பாயில் இரண்டு தினங்களும் சென்னையில் நான்கு தினங்களும் தங்கிய பின் சென்னையிலிருந்து இரயிலில் புறப்பட்டுச் சங்கரமங்கலம் வருவதாக ரவி எழுதியிருந்தான். முதலில் மெதுவாக நகர்ந்த நாட்கள் அவனும் கமலியும் வருகின்ற தினம் நெருங்க நெருங்க விரைவாக ஓடின. யாரும் பம்பாய்க்கோ, சென்னைக்கோ எதிர்கொண்டு வர வேண்டாம் என்றும் தானே சங்கரமங்கலம் வந்து சேர்ந்து விடுவதாகவும் ரவியே கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான்.
"உம்ம வழக்கம்போல இரட்டைமாட்டு வண்டி கட்டிண்டு அவாளை வரவேற்க ரெயில்வே ஸ்டேஷனுக்குப் புறப்பட்டுடாதேயும். என்னோட கார் தவிரவும் பக்கத்து எஸ்டேட்காரரான சாரங்கபாணி நாயுடு கிட்ட இன்னொரு கார் இரவல் கேட்டிருக்கேன். வரவாளை அழைச்சிண்டு வர எல்லாருமே ரெண்டு கார்லே ஸ்டேஷனுக்குப் போகலாம். அன்னிக்கு முகூர்த்த நாள்.