பார்வதி அவசர அவசரமாகச் செம்மண் கரைத்துக் கொண்டு வந்தாள். கிழக்கு வெளுக்கிற நேரம். அப்போது கிணற்றடியில் கணீரென்ற இனிய குரலில் ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டிருந்தாள் காமாட்சி மாமி.
"துளசி ஸ்ரீசகி சுபே பாபஹாரிணி புண்யதே
நமஸ்தே நாரத நுதே நாராயண மந; ப்ரியே"
மாமியின் உச்சரிப்பிலிருந்த தெளிவும் துல்லியமும் வசந்தியை மெய் சிலிர்க்க வைத்தன. வீட்டுக் காரியங்கள் நிறைய இருப்பதாகச் சொல்லிய ஒரு காரணம் பொருந்தினாலும் மாமி தான் வற்புறுத்தியும் தங்களோடு காரில் ரெயில்வே ஸ்டேஷனுக்கு வர மறுத்ததில் வேறு மனத்தாங்கல் ஏதோ இருப்பது போல பட்டது வசந்திக்கு.
கல்யாணக் கோலம் போல் பார்வதி செம்மண் பட்டைகளைப் போட்டு நிறுத்தியிருந்தாள். வசந்தி கோலப் பொடிக் கொட்டாங்கச்சியை எடுத்துக் கொண்டு போய் அந்தச் செம்மண் பட்டையைச் சுற்றி வெண்ணிறக் கோடுகளால் அழகுபடுத்தி அலங்கரித்து விட்டுப் படிக் கோலங்களையும் போட்டு முடித்தாள். அவள் கோலத்தை முடித்து விட்டு தலை நிமிரவும் பார்வதி ஆரத்திக்கு மஞ்சள் நீர் கரைத்துக் கொண்டு உள்ளேயிருந்து வரவும் சரியாயிருந்தது.
சங்கரமங்கலம் ரெயில் நிலையத்திலிருந்து ஊருக்குள் வருகிற வழியில் பிரம்மாண்டமான அரசமரம் ஒன்றின் கீழ் புராதனமாக பிள்ளையார் கோயில் ஒன்று இருந்தது. அந்தப் பிள்ளையாருக்கு 'வழித்துணை விநாயகர்' என்று பெயர். ஊரிலிருந்து வெளியூருக்குப் போகிறவர்களோ, வெளியூரிலிருந்து ஊர் திரும்புகிறவர்களோ இந்தப் பிள்ளையார் கோவிலில் கும்பிட்டு தேங்காய் விடலைப் போட்டு விட்டுப் போவது நீண்ட கால வழக்கமாகயிருந்தது. சர்மா கூட ஏதோ யோசனையில் மறந்து பேசாமல் இருந்து விட்டார். பிள்ளையார் கோவில் வாசலுக்கு வந்தவுடன் ரவி ஞாபகமாகக் காரை நிறுத்தச் சொன்னான்.
காலணிகளைக் காருக்குள்ளேயே கழற்றி விட்டு ரவியும், சர்மாவும் இறங்கிய போது, அதேபோல் செய்தபின் அவர்களைப் பின் தொடர்ந்து கமலியும் கீழே இறங்கினாள். தேங்காய் வாங்கி விடலைப் போட்டு விட்டுப் பிள்ளையாரை கும்பிட்டுப் பிரதட்சிணம் வந்த பின்