ஞானமுள்ளவளாகவும் இருக்கிறாள் என்று சர்மாவுக்குத் தோன்றியது. சின்ன வயதிலிருந்தே ரவிக்கும் லிங்விஸ்டிக்ஸிலும் - கம்பேரிட்டிவ் லிங்விஸ்டிக்ஸிலும் ஒரு பைத்தியம் உண்டு என்பது அவருக்கு ஞாபகம் வந்தது.
அவர்கள் சென்ற கார் வீட்டு வாசலில் போய் நின்ற போது நன்றாக விடிந்திருந்தது. கார் வந்து நின்ற ஓசை கேட்டு அக்கம் பக்கத்திலும் எதிர் வரிசை வீடுகளிலும் பலர் வாசலில் வந்து நின்று எட்டிப் பார்த்தார்கள். காமாட்சி மாமி திண்ணையோரமாக வந்து சற்றே ஒதுங்கினாற் போல் நின்று கொண்டிருந்ததை வசந்தி கவனித்தாள்.
காரிலிருந்து இறங்கிய ரவியையும், கமலியையும் பார்த்துக் குறும்புத்தனமாகக் கண்களைச் சிமிட்டிச் சிரித்த படி, "ரவீ! கமலியையும் அழைச்சிண்டு இப்படி இந்தச் செம்மண் கோலத்திலே வந்து கிழக்கைப் பார்த்து நின்னுக்கோ! ஆரத்தி சுத்திக் கொட்டிடறேன்" என்றாள் வசந்தி. சர்மா காரில் இருந்து இறங்கி நின்று கொண்டிருந்தார்.
வசந்தி வேண்டியபடி ரவியும், கமலியைக் கைப்பற்றி அழைத்து வந்து செம்மண் கோலத்தில் நின்று கொண்டான். வசந்தியும் பார்வதியும் ஆரத்தி எடுத்தார்கள்.
"மங்களம் மங்களம் ஜெயமங்களம்
ஸ்ரீராமச் சந்திரனுக்கு சுபமங்களம்
மாதர்கள் மகிழும் மங்கள ஹாரத்தி
கோதையர் மகிழும் கற்பூர ஹாரத்தி
தங்கத் தாம்பாளத்தில் பஞ்சவர்ணங்கள் போட்டு
நல்முத்துக் கமலத்தில் நவரத்தினங்கள் போட்டு
சீதை மணாளருக்கு மங்களம் மங்களம்