ஆறிப்போன ரொட்டி; அதுவும் சுப்பையாவுக்கு ரொட்டி செய்யத் தெரியாது போலும்! தோல் போல் இழுக்கிறது. தாடைகள் அசைய அசைய அதைக் கடித்து அவன் மெல்லுகிறான்.
"என்ன யமு, பார்க்கிறே?"
"ஒண்ணுமில்லே..."
"என்னமோ பேசணும்னியே? நான் சாப்பிடறப்ப நீ பேசு; நான் கேட்கிறேன்."
"என்ன பேசறதுன்னு புரியவில்லை. பேச எனக்கு வாயில்லாம அடிச்சப்புறம் பேச்சு எழும்புமா?"
மேசையில் அவளுடைய விரல் கோலமிடுகிறது. அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.
"யமு, உன்னைப் பார்க்கும் போது எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது..."
"ரொம்ப நன்றி."
அவன் தட்டில் கைகழுவிட்டுத் தண்ணீரை மடக்மடக்கென்று குடிக்கிறான். பிறகு கைகளைத் துடைத்துக் கொண்டு எழுந்திருக்கிறான்; ஒரு சிகரெட்டைக் கொளுத்திக் கொண்டு அவளருகில் நாற்காலியை இழுத்துக் கொண்டமருகிறான்.
"யமு நீ பேசலியா?"
"உங்களிடம் என்ன பேசுவது? என் அம்மா, 'குட்டி சினந்து வீட்டைக் கொளுத்துவதாகப் பயமுறுத்தினால் சிரிக்கத்தானே தோன்றும்' என்றாள். என்னால் அப்படி நினைக்க முடியவில்லை. நான் எப்படிப் பொருட்படுத்தாமலிருப்பேன்? இரத்த வெறிக்கு ஒன்றுமறியாத மக்களைத் தூண்டி விடுவதால் உங்களுடைய சித்தாந்தம் நிறைவேறி விடுமா? உலகம் தோன்றிய நாளிலிருந்து எவரும் வன்முறையில் சாந்தியும் இன்பமும் காணலாம் என்று கூறியிருக்கவில்லை. அது அன்பு நெறியினாலும் கொல்லாமையினாலும் தான் வளர முடியும்.