நிலங்களுக்குப் பாயாது; மின்சாரத்தைக் கொடுக்காது; வெள்ளமாய் ஊரை அழிக்கும். இல்லையேல் கடலில் போய்ப் பாழாகும். அதைத் தடுத்துக் குப்புற விழச்செய்துதான் பலன் பெற வேண்டும். ஒரு சிலரே திரும்பத் திரும்ப நாட்டின் செல்வங்களை அநுபவிக்கும் இந்த முறை ஒழிய வேண்டும். அது ஒழியாது; ஒழிக்க வேண்டும். யமுனா நாற்பத்தேழில் கிடைத்த சுதந்திரம் கொழுத்த முதலாளிகளுக்குத்தான் என்று தெரிந்து கொள். ஐந்தாண்டுத் திட்டங்கள் இந்த நாட்டின் ஒரு சில முதலாளிகளையே கொழுக்க வைத்திருக்கிறதென்றுணர்ந்து கொள்! உன்னுடைய காந்தியின் அஹிம்சை, கோழைகளின் சாக்கு. அதை விட்டெறிந்து விட்டு உண்மையான புரட்சிக்கு எங்களுடன் வா. உனக்குப் பயங்கள் துச்சம் என்பது எனக்குத் தெரியும்..." சம்பங்கிப் பூவிலிருந்து பொன் பொறிகள் சிதறினாற் போல் இருக்கிறது.
"உன்னைப் போன்ற இளம் தலைமுறையின் கைகளில் தான் இந்த நாட்டுக்கு விமோசனம் வரப்போகிறது. கைராட்டையிலும் பண நாயகத்திலும் விமோசனம் வர முடியாது; புரட்சியானாலேயே வரும்..."
தான் கோழையாக நிற்பது போன்ற உணர்வை அவளுக்கு அந்த கணத்தில் அவன் தோற்றுவிக்கிறான்.
'செய் அல்லது செத்துமடி' என்று காந்தியடிகள் முழங்கிய போது இந்நாட்டு இளைஞர்களும் யுவதிகளும் எப்படி எழுந்தார்கள்? எப்படி ஆவேசமாக முன் வந்தார்கள்?
அதைத் தாயும் தந்தையும் ஜோசஃப் அம்மாவனும் சொல்லித்தான் அவள் அறிந்திருக்கிறாள். அப்போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் புரட்சியில் இறங்கினார்கள். அது என்ன புரட்சி?
இப்போது... அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
அந்த சில விநாடிகளில் வியப்பும் மருட்சியும் கொண்ட விழிகள் அவன் மீது நிலைக்கின்றன. பின்வாங்கத் துணியாத சாவை மதியாத, கொள்கையையே தருமம் என்று இரத்தக் குழம்பில், நெருப்புக் குழிக்குள் அடி வைக்கும் துணிவு... அது பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டிருக்குமா?