(Reading time: 19 - 38 minutes)
Verukku neer - Rajam Krishnan
Verukku neer - Rajam Krishnan

இரத்தப் புரட்சி செய்து சமத்துவம் கண்டிருக்கும் நாடுகளில் அச்சமில்லாத - ஐயமில்லாத - அவநம்பிக்கையில்லா அமைதி இருக்கிறதா என்று நீங்கள் நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொண்டு சொல்லுங்கள். புரட்சி செய்ய வேண்டும்; நான் ஒப்புகிறேன். ஆனால் இப்படி வேண்டாம். ஊரூராய்ப் படை திரண்டு போய் மக்களின் மனங்களின் அன்பு நெறியை வளர்க்கப் பாடுபடுவோம். அந்தப் படையின் முன்னணியில் நிற்க நான் வருகிறேன். இது... இது... வேண்டாம்"

   

அவன் கருமை படர்ந்த மோவாயைக் கையால் தேய்த்துக் கொண்டு சிரிக்கிறான்.

   

"இந்த நாட்டின் பேதைமை எல்லாம் ஒன்று சேர்ந்த உருவம் ஒன்று எப்படியிருக்குமோ, அப்படி இருக்கிறது உன்னைப் பார்த்தால்! இவ்வளவு படிப்புப் படித்து கண் முன் நடக்கும் இத்தனை அநீதிகளையும் பார்த்து, ஏமாற்று மோசடிகளுக்குக் காந்தி என்ற கவசத்தைப் போட்டுக் கொள்ளும் சந்தர்ப்பவாதிகளைத் தெரிந்து கொண்டு, யமு... எனக்கு ஒரு பெரிய ஏமாற்றமாக நீ காட்சி கொடுக்கிறாய்..."

   

"நீங்கள் அந்த முதலை வாயில் விழுந்து விட்டீர்கள். தப்பி வர முடியாமல் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். என்னைப் பேதை என்று சொல்லும் உங்களை, நான் அறிவாளி, மிகுந்த செயல் திறமையும், வாக்குவன்மையும் உடைய தலைவர் என்று நினைத்துத் தான் பார்க்கிறேன். இந்த வழியைச் சரி என்று நம்ப முடியவில்லை. கையில் இரத்தக் கறையைத் தோய்த்துக் கொண்டு எளியரை அச்சுறுத்துவது, தொண்டையைக் கிழிப்பதும், குடலை எடுப்பதும், நாகரிகமடைந்த மனிதன் ஒப்பும் செயல்களா?"

   

அவன் விழிகள் பெரியதாக உறுத்துப் பார்க்கின்றன. அவளுக்குப் புல் நுனிகளாய்க் கைகள் நடுங்குகின்றன. ஆனாலும் சமாளித்துக் கொள்கிறாள். குபீரென்று பயங்காட்டிச் சிரிப்பது போல் சிரிக்கிறான்.

   

"பரவாயில்லை யமு... நீ பயங்கொளி இல்லை. உன்னைப் போன்றவர்கள் ஒரு முனையில் நின்றால் நூறு நூறாய்ப் படை திரண்டெழுவார்கள். இந்த நாட்டின் ஆற்றலனைத்தும் இப்படி அஹிம்சை என்ற ஆஷாடபூதித் தனத்திலும், அன்பு என்ற போலிப் புரட்டிலும் சிறை இருக்கிறது. தளைகளை உடைத்தெறியுங்கள்! புரட்சிக்கு வழிகோலுங்கள்! யமுனா, ஆற்றுத் தண்ணீர் போகட்டும் போகட்டும் என்று விட்டுக் கொண்டே இருந்தால், அதுவாக இந்தா என்று 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.