(Reading time: 10 - 20 minutes)

தன் நிலையையும்,தன்னைக் காணாமல் தன் குடும்பம் அடையும் தவிப்பினையும் துடிப்பினையும் எண்ணி எண்ணி மிகுந்த கவலையுடனே நடந்தாள். சிறிது கவனத்துடன் இருந்திருந்தால் இத்தகைய இன்னலில் சிக்கியிருக்க மாட்டோமே என்று தன்னையே நொந்து கொண்டாள்.

எந்தக் காட்டு மிருகத்திடமும் சிக்கி விடாமல் பத்திரமாக அகம் திரும்ப வேண்டுமென்று உளமார உலகில் உள்ள தெய்வங்கள் அனைத்தையும் வேண்டிக்கொண்டாள்.

அப்பொழுது திடீரென்று இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் இவள் முன் தோன்றினர்.எங்கிருந்து வந்தனர் என்றே தெரியவில்லை.

அவர்கள் வித்தியாசமான ஆடைகள் அணிந்திருந்தனர் .இலைதழைகள்,பூக்கள்,வேர்கள் இவற்றைக்கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆடைகள். ஆடை வடிவமைப்புக் கலைஞர்கள் பார்த்தால்,அள்ளிச் சென்றுவிடுவர்.￰அவ்வாறாக மிகுந்த கலை நயத்துடன்,வண்ணமயமாக கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இவள் சற்றே அதிர்ந்து மீண்டு,உதவிக்கு ஆள் கிடைத்துவிட்டார்கள் என்று மகிழ்ந்து வாய் திறக்கும் முன்,அந்த நால்வரும் இவள் முன் சட்டென்று மண்டியிட்டு கண்ணீர் மல்க பேசத் துவங்கினர்.

" ஒரு வழியாக வந்துவிட்டீர்கள் இளவரசி! தங்களைக் காண எங்கள் அனைவரின் விழிகளும் எத்தனை வருடங்களாக தவம் இருக்கின்றன தெரியுமா.அந்த எட்டுக் கை அம்மன் எங்களைக் கைவிடவில்லை .கண் திறந்துவிட்டாள்.

வாருங்கள் இளவரசி! நமது அரண்மனைக்குச் செல்லலாம்.தங்களைக் கண்டால்,அனைவரும் மகிழ்ச்சியில் மான் போல் துள்ளுவர்.இளவரசரின் இத்தனை வருட காத்திருப்பு,நம்பிக்கை,தியாகம் எதுவும் வீண்போகவில்லை!இனி யாதும் யாவர்க்கும் நலமே! "

அவளும் பாவம் எத்தனை அதிர்ச்சியைத்தான் தாங்குவாள்.அரண்டு மிரண்டு போய்,திரும்பி ஓடத் துவங்கினாள்.ஆனால் என்ன பயன் .நொடியில் பிடித்துவிட்டனர்.

அதிர்ச்சி,பயம்,சோர்வு இவற்றால் துவண்டு போயிருந்தவளால் அவர்களின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை.

" நீங்கலாம் யாருனே எனக்கு தெரில.நீங்க நெனைக்கற பொண்ணு நான் இல்ல.என் குடும்பம்,என்னை காணாம தவிச்சு போயிருப்பாங்க ,நான் எங்க வீட்டுக்கு போகணும் ,என்னை விட்ருங்க" என்று கெஞ்சிக் கதறிப் பார்த்தாள்.ஆனால் அவர்கள் விடுவதாக இல்லை.

" அச்சம் கொள்ளத் தேவை இல்லை இளவரசியாரே ! தங்களின் குடும்பத்தினர் இந்நேரம் அரண்மனையில் இருப்பார்கள்.இன்னும் சற்று நேரத்தில் அனைத்தும் தெளிவடைந்துவிடும்.சிறிது நேரம் அமைதியாக வாருங்கள் " என்று கூறினர் .

மேலும் அவர்கள்," தங்களை இவ்வாறு துன்புறுத்துவதற்கு மன்னித்துவிடுங்கள் இளவரசி.தங்களின் இந்த 10 நிமிட துயரத்திற்குப் பின் எத்தனையோ பேரின் துன்பம் தொலையும் இளவரசி " என்று கூறினர்.

எப்படி உணர வேண்டும் என்று கூடத் தெரியாமல் ஏதோ ஒரு உணர்வில் இருந்தாள் மித்ரா.

பத்து நிமிடத்தில் ஒரு அரண்மனை வந்தது.அது முன்னர் அவள் கைபேசியில் பார்த்து,பயந்து மயங்கினாளே,அதே அரண்மனை.

மரங்கள்,வேர்கள்,இலை தழைகள்,பூக்கள் மட்டுமே கொண்டு கட்டமைக்கப்பட்ட அரண்மனை அது.இவளது கற்பனைக்கு அப்பாற்ப்பட்ட அதீத அழகோடு இருந்தது அந்த அரண்மனை.மேலும் அவள் இதுவரை முகர்ந்து அனுபவித்திராத ஒரு சுகந்த நறுமணம் அங்கு வீசியது.

அதன் பிரம்மாண்டத்தில் பிரமித்துப் போய்,வாயடைத்துப் போய் நின்றாள்.

அப்பொழுது, இளவரசி!என்று விளிக்கும் ஒரு குரல் கேட்டது.பல வருட அன்பயும்,ஏக்கத்தையும் தேக்கிய மிக மெல்லிய இதம் தரும் குரல்.திரும்பிப் பார்த்தாள்.

அங்கே அதே இலை தழை ஆடையுடன்,ஆனால் இளவரசன் என்று தெரியும் படியான ஆடை அணிந்து நின்றிருந்தான் .

கண்ணில் ஆனந்தக் கண்ணீரோடும் ,சிரிப்போடும் ,தொலைத்துவிட்ட பொக்கிஷம் கிடைத்துவிட்டது போன்றதொரு பூரிப்போடும் ஒரு ஆழமான பார்வை வீசினான்.

அவனைப் பார்த்தவுடன் ஏனோ,அவளுக்கும் பயம்,பதட்டம் அனைத்தும் அடங்கிவிட்டது .பலவருடம் பழகினது போன்றதொரு உணர்வு பிறந்தது .தானாக அவன் மேல் அன்பு பொங்கியது.இவளது இத்தகைய உணர்விற்கும் சேர்த்துக் குழப்பமுற்றாள்.

அவளது கண்ணில் இருந்த குழப்பத்தைக் கண்ட அவன் கூறினான்.

"இளவரசி! ஒரு இரண்டு நிமிடம் விழி மூடுங்கள்.தங்களின் அனைத்துக் குழப்பங்களுக்கும் விடை பிறக்கும் "

என்று கூறினான்.அவளும் விழி மூடினாள்.

அதன்பின் 

" ய் எரும,கண்ணைத் திற "

இப்டி குரல் கேட்டு திடுக்கிட்டு முழிச்சு பார்த்தா,

அங்க அவ ரூம் மேட் & உயிர்த்தோழி ஆங்கிரி பேர்ட் போல உட்கார்ந்திருந்தா.

" போன் அடிக்கறது கூடத் தெரியாம எப்படிடி இப்டி தூங்கற எரும மாடு.எவ்ளோ நேரமா எழுப்பறது .கண்டமேனிக்குக் கண்ணை மூடிட்டே உளறிட்டு இருக்க."

அப்போதான் புரிஞ்சுது இது எல்லாம் கனவுனு .இப்போ திட்றது இவ டர்ன் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.