தந்தாயே, மனிதனாக நடந்துகொள்ள உதவினாயே, சுயநலமாக நடந்துகொள்ளாமல் இருக்கச் செய்தாயே, உன் கருணையே கருணை!"
மனதில் நிம்மதியுடன் அன்றிரவு சோமு உறங்கினார், வீட்டிலிருந்த மற்றவர்களோ நேர்மாறாக புரண்டு புரண்டு தூக்கம் கொள்ளாமல் கவலையுடன் படுத்திருந்தனர்.
மறுநாள் பொழுது விடிந்ததும், பிள்ளைகள் இருவரும் தாயுடன் கலந்தாலோசித்தனர்.
" இப்ப என்னம்மா செய்வது? வேற வழியிலே பணம் புரட்டமுடியுமா?"
" உங்கப்பா, நண்பனுக்கு நல்ல சந்தர்ப்பத்திலே உதவியதுபோல, யாராவது உங்கப்பாவுக்கு இப்ப உதவி செய்வாங்களா? இதை ஏன் உங்கப்பா யோசிக்க மாட்டேங்கறாரு, ஏதோ சந்யாசி மாதிரி, வாழறாரு....."
" திரும்பத் திரும்ப அப்பாவைப் பற்றியே பேசி, நேரத்தை வீண் அடிக்கவேண்டாம். சரி, நான் எங்க ஆபீஸ் கூட்டுறவு சொசைடியிலே கடன் தருவாங்களான்னு விசாரிக்கிறேன்......"
" ரவி! நானும் என் பிடித்தல் பணத்திலிருந்து ஆபீஸிலே கடன் தருவாங்களான்னு விசாரிக்கிறேன்....."
" குழந்தைங்க நீங்க ரெண்டு பேரும் விசாரியுங்க! என் பங்குக்கு, நான் இன்னிக்கி நகைக்கடைக்குப் போய், என் நகைகளை விற்றால், எவ்வளவு பணம் புரட்டலாம்னு விசாரிக்கிறேன்......"
அப்போது, தியாகுவின் கைபேசி சிணுங்கியது. எடுத்துப் பேசினான்.
" தியாகு, ஹியர்!"
"............."
" அப்படியா! ஓ.கே., நான்மட்டும் ஒரு மணி நேரத்திலே க்ளினிக் வந்துசேருகிறேன், தேங்க்ஸ்"
தியாகு முடித்ததும், ரவியும் காயத்ரியும் பதறிப்போய், " யாரு, டாக்டரா? என்னவாம்? ஏன் உன்னைமட்டும் தனியா வரச் சொல்றாரு? தியாகு! நெஞ்சு படபடன்னு அடிச்சிக்குதுடா!"
" அம்மா! அவசரப்படாதே! பயப்படும்படியா ஒண்ணுமில்லே, முதல்லே ட்ரீட்மெண்டுபற்றி விவரமா என்னிடம் பேசணுமாம், பிறகு எல்லாருமா வரலாம்னு சொல்றாரு......."
"சரி, போய்ட்டு விவரமா தெரிஞ்சிகிட்டு வா! மொத்தமா, எவ்வளவு செலவாகும், முழு பணத்தையும் முதல்லே தரணுமா, இல்லே, கொஞ்சம் கொஞ்சமா தரலாமான்னு விசாரிச்சிகிட்டு வா!"
தியாகு வீட்டை விட்டு வெளியே வந்ததும், "நல்லவேளை! அம்மாவிடம் டாக்டர் சொன்னதை தெரிவிக்காமல், பொய் சொல்லி தப்பித்தேன், உண்மையை சொல்லியிருந்தால், அம்மா மயக்கம் போட்டு விழுந்திருப்பாள்......" என பெருமூச்சு விட்டான்.