தியாகு ஆச்சரியத்தில் சிலையாக நின்றான். அவனை உலுக்கி பிரக்ஞை பெறவைத்து வீட்டுக்கு அனுப்பினார், டாக்டர்!
அப்பாவின் நேர்மை, நான்கு வருஷங்கள் கடந்து, தற்போது பலன் தருவதை நினைத்துப் பார்த்து, தியாகு சத்தியத்தின் வலிமையையும் நேர்மையானவருக்கு ஆண்டவன் மறக்காமல் சரியான தருணத்தில் காப்பாற்ற ஓடிவருகிறான் என்பதையும் புரிந்துகொண்டான்.
பண பிரச்னை தீர்ந்தது, உயிர் பிரச்னை? அதற்கென்ன செய்வது? "ஆண்டவா! அதற்கும் நீயே ஒரு வழி காட்டு!" என தியாகு வேண்டிக்கொண்டான்.
தியாகு, தனக்கு எப்போது தீர்க்கமுடியாத பிரச்னை வந்தாலும், தன் நண்பன் கோபியிடம் மனம் விட்டுப் பேசி, மனச்சுமையை இறக்கிவைப்பான்.
கோபி பொறுமையாக பிறர் சொல்வதை குறுக்கிடாமல் கவனமாக கேட்பான், அமைதியாக யோசிப்பான், பிறகு தனக்கு தோன்றிய தீர்வை விவரமாக தெரிவித்து ஆலோசிக்கச் சொல்வான்.
" கோபி! என் இக்கட்டான நிலையில் நான் வேறென்ன செய்யலாம் என்று ஏதாவது வழி சொல்லேன், ப்ளீஸ்!"
" தியாகு! உனக்கும் உன் குடும்பத்துக்கும் இங்கிலீஷ் முறை வைத்தியம், அலோபதி முறையில்தான் நம்பிக்கை இருக்கும். உனக்கு மட்டுமல்ல, நாட்டில் எல்லோருக்குமே அப்படித்தான். ஆனால், என்னைப்போல சிலருக்கு ஹோமியோபதி, அகுபங்க்சர், ஆயுர்வேதிக், நேசுரோபதி முறைகள் ஏற்புடையதாக இருக்கும்.
தியாகு! எனக்கு நெருக்கமான ஒரு ஹோமியாபதி டாக்டர் இருக்கிறார், மாம்பலத்தில்! அவர் பெயர் கோபிகார்! இன்றுமாலை உன்னை அவரிடம் அழைத்துச் செல்கிறேன், அவரிடம் கேட்போம், அவர் சொல்படி செய்வோம், சரியா?"
அன்று மாலை இருவரும் கோபிகார் டாக்டரிடம் சென்றபோது, தியாகுவுக்கு அதிக நம்பிக்கையில்லை!
" கோபி! உன் நண்பரின் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில், எந்த நிமிஷமும் எதுவும் நடக்கலாம் எனும் இக்கட்டில், என்னிடம் வந்திருக்கிறீர்கள். என்னால் எந்தவித உத்தரவாதமும் தரமுடியாது, இப்போதே உங்களுடன் வந்து நோயாளியை பரிசோதித்துப் பார்க்கிறேன், மருந்து தருகிறேன், பார்ப்போம் போகப்போக!"
டாக்டர் கோபிகார் நோயாளி சோமுவை பரிசோதித்துப் பார்த்ததோடு, சோமுவின் அலோபதி சிகிச்சையில் இதுவரை நடந்த டெஸ்ட் ரிபோர்ட்டுகளையும் நிதானமாகப் பார்த்தார்.