(Reading time: 18 - 36 minutes)

சிறுகதை - என் கடமை முடிந்தது! - ரவை

ந்த வீடே, தெருவே, ஊரே, தமிழ்நாடே, கோலாகலமாக நிறைந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடியது, சரித்திரம் படைத்த அந்த பெண்ணின் சாதனையை!

 நிச்சயமாக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவேண்டிய சாதனை!

 நாடு முழுவதும், எத்தனையோ நிறுவனங்கள், ஊடகங்கள், பல வருஷங்களாக, நடத்திவரும் அந்த கோடீஸ்வரி நிகழ்ச்சியில், இதுவரை யாருமே அடையாத, அடையமுடியாத, அந்த ஒரு கோடி ரூபாய் பரிசை தட்டிப் பறித்த அந்த இளம் பெண்ணின் பேட்டியை, புகைப்படத்துடன், வெளியிட்டு ஊடகங்கள், பாராட்டின.

 பல தொழில் நிறுவனங்கள், அந்தப் பெண்ணுக்கு, கௌரவமான உத்தியோகம் வழங்கவும் தயாரென அறிவித்தனர்!

 வார, மாத சஞ்சிகைகளும், குறிப்பாக பெண்கள் இதழ்கள், பெண் இனத்தின் வெற்றியாக கொண்டாடினர்.

 இத்தனை பாராட்டு, கொண்டாட்டம், மகிழ்ச்சிக்கு காரணம், பணத்தின் மதிப்பு மட்டுமல்ல; ஆண்கள்கூட சாதிக்கமுடியாத ஒன்றை, ஒரு பெண் சாதித்துவிட்டதும் அல்ல;

 அந்தப் பெண், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள் என்பது மட்டுமல்ல!

 அந்தப் பெண், நான்கு ஆண்டுகள் முன்பு, சாதாரண முனிசிபல் தமிழ் மீடியம் பள்ளியில், பத்தாம் வகுப்பு தேறியவள்! கல்லூரி படிக்கட்டில் கால் வைக்காதவள்! நகரத்திலோ, பெரிய மாவட்ட தலைநகரிலோகூட, வாழ வழியின்றி, ஒரு சாதாரண டவுனில் மத்தியதர வர்க்க குடும்பத்தில் வாழ்கிற பெண்!

 அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்ததெல்லாம் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் ஆங்கில நாளிதழும் தான்!

 அவள் பெற்றோர் படிப்பறிவற்றோர்! தங்க நகை சுத்தம், ரிபேர் செய்யும் பட்டறை நடத்துவோர்! அது தலைமுறை தலைமுறையாக வந்த தொழில்!

 அந்தப் பெண், போட்டியில் கேட்கப்பட்ட அத்தனை வினாக்களுக்கும் தயக்கமின்றி தெளிவாக உடனுக்குடன் விடை தந்ததோடு, அதற்கான விளக்கங்களையும் தந்தபோது, அரங்கமே அசந்துபோய், பேச்சுமூச்சற்றுப் போயின!

 இத்தனை உலக நடப்பு பற்றிய செய்திகளும், இலக்கியத்தில் கூர்மையான அறிவும், முக்கியமாக, நினைவாற்றலும் அந்தப் பெண்ணுக்கு எப்படி கிடைத்தது?

 எவருக்கும் பதில் தெரியவில்லை. பெரும்பாலோர், அவளுக்கு அது முற்பிறவியின் நற்பலன் என நம்பின அதே சமயத்தில், பகுத்தறிவுவாதிகளும் அந்த நம்பிக்கையை தவறென சொல்லமுடியாமல் விழித்தனர்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.