வேறென்ன வழியிருக்கு என யோசித்துக் கொண்டே, சிக்கில் சிங்காரம் கடைத்தெருவுக்கு காரை ஓட்டினார்.
பட்டறையின்முன், காரை நிறுத்திவிட்டு, இறங்கி, வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தவர்களில் யார் கடை முதலாளி போலத் தெரிகிறார் என நோட்டம் விட்டார்.
அங்கு வேலை செய்த ஊழியர்கள் அனைவருமே ஏற்றத்தாழ்வின்றி தோற்றம் அளித்தனர். அது மட்டுமல்ல, எல்லோரும் எல்லா வேலையும் செய்து கொண்டிருந்தனர்.
கடைக்கு அருகில் சென்று, " வணக்கங்க!" என்று பொதுவாக சொன்னார்.
அருகாமையில் இருந்தவர், தலை நிமிர்த்தி,
" வாங்க! உட்காருங்க! உங்களுக்கு என்ன வேணும்?" என பணிவுடன் கேட்டார்.
சிங்காரம் தயங்கியவாறே "முதலாளியை பார்க்கணும்......." என இழுத்தார்.
கடையிலிருந்த அனைவரும் சிரித்தனர்.
" அப்படி யாரும் இந்தக் கடைக்கு கிடையாதே! எல்லோருமே இங்கு தொழிலாளிகள்தான்....."
" இல்லே, கடைக்கு சொந்தக்காரனா ஒருவர் இருப்பாரே, அவரை......."
" இந்தக் கடை, இங்குள்ள எல்லாருக்கும் சொந்தம்......"
"வந்து.....வடிவழகியின் தந்தை வையாபுரி செட்டியாரை....."
உடம்பெல்லாம் வியர்வையில் நனைந்திருக்க, நடுத்தர வயதுடைய ஒருவர் தலை தூக்கிப் பார்த்தார்.
" கொஞ்சம் இருங்க! கை கழுவிக்கொண்டு வரேன்...." என்று சிறிது நேரத்தில், சிங்காரத்தின் முன் அமர்ந்தார்.
" வந்து....உங்களிடம் கொஞ்சம் தனிமையில் பேசணுமே......"
" ஐயா! இங்கிருக்கிற எல்லோரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவங்க, எங்களுக்குள்ளே எந்த ரகசியமும் கிடையாது....நீங்க சொல்லுங்க......"
சிங்காரம் தயங்குவதை கவனித்த ஒருவர், வையாபுரி செட்டியாருக்கு கண்ஜாடை காட்டி, தனியே போய் பேசுமாறு கூறியதும், வையாபுரி செட்டியார் கடைக்கு வெளியே வந்தார்.
சிங்காரம் அவரை காரில் ஏற்றிக்கொண்டு அருகிலிருந்த ஓட்டலுக்கு அழைத்துச் சென்று " என்ன சாப்பிடறீங்க?" எனக் கேட்டார்.
" நாங்க எப்பவுமே வீட்டுச் சாப்பாடுதான் சாப்பிடுவோம், வெளியிலே சாப்பிடறதில்லே, நீங்க சாப்பிடுங்க......"
" உங்களிடம் பேசுவதற்காகத்தான் இங்கே அழைத்து வந்தேன்......."