இவன் ஒடிக்கொண்டே ஒருதரம் திரும்பிப்பார்த்தான். பெரும் புகைமண்டலமொன்று மழையை விலக்கிச் செல்லும் கரும் பூதமென மேலெழுந்து கொண்டிருந்தது. மூச்சுத் திணறும் கந்தகநெடி எங்கும் சட்டெனப் பரவிற்று.
இவன் மூளை செயலற்றுப் போய்விட்டது. கண்கள் நேரே வெறித்தன. கால்கள் மட்டும் தம்பாட்டில் இவளை கனவேகமாக எங்கோ இழுத்துச்சென்றன.
கோணாமலை!...பெருமாள்!...கேதா¡¢....பொ¢யண்ணன்!....கைக்கேல்!...அன்பரசன்!....
அவ்வளவுதான்!...இனியென்ன?...அவ்வளவுதான்...துண்டு துண்டாகப் போயிருப்பார்கள்.
இனி?
இவன் செய்யவேண்டியது என்ன? எப்படியாவது தெற்கு ரோட்டுக்கு பத்திரமாகப் போய்ச்சேர வேண்டும். 'சாமான்' வரும். அவர்களைத் திசை திருப்பி விடவேண்டும். வருகிறவர்களுக்குச் செய்தி தொ¢ந்து திரும்பிப் போயிருப்பார்களோ?....செய்தி சொல்லுவது யார்? இந்தக் காற்றும் மழையுமா?
இவன் தெற்கு ரோட்டுக்குப் போய்ச்சேரவேண்டும்! சனியனே! மழையே! நீ நிற்க மாட்டாயா!.....
வானம் கடைசித்தடவையாக பெருமிடியன்றைக் கொடுத்து ஓய்ந்தது. மழைவேகம் குறைய ஆரம்பித்தது, இவனுக்கு பன்னீர் தெளிப்பதென மெதுவாக தூற்றல்களைப் போட்டது.
இவன் வெகுதூரம் ஓடிவந்து விட்டான். இனிப் பயமில்லைப் போல் இருந்தது. இவன் பெருநடையாக நடக்க ஆரம்பித்தான். இன்னும் மூன்று மைல்களாவது கடக்க வேண்டியிருந்தது. இவன் கடந்துவிடுவான்...எப்படியாவது!
மழை முற்றாக ஓய்ந்தது. மயான அமைதி நிலவிற்று மரங்கள் மழையில் நடுங்கி அஞ்சிப்போய் ஆடாமல் அசையாமல் கண்ணீர் சிந்தின. வெள்ளம் மட்டும் இவனுடன் கூட வந்தது.