"வரட்டோ?...நானும் வரட்டோ!...."
மெல்ல ஓடிக்கொண்டே கேட்டான்.
"வா...வா...ஓடி வா!..." விசித்திரமான வேற்றுப் பாணியில் ஒரு குரல் கூப்பிட்டது.
இவன் நெருங்கிக் கொண்டிருந்தான். வெற்றுடம்புடன் சிலபேர் இருந்தார்கள். எல்லோரும் ஆண்கள். எங்காவது கோயிலுக்கு போய் வருகிறார்களோ?
இவன் மிகவும் நெருங்கிவிட்டான்.
வான் நின்றுவிட்டது. பழகாத புதிய முகங்கள் போலும்! வேறு புறம் திரும்பி அசட்டையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இல்லை....இல்லை...இல்லவே இல்லை! சட்டென்று சொல்லி வைத்தாற்போல இவன் முகம்பார்த்து எல்லாரும் திரும்பினார்கள். கண்களில் சொல்லொனா வன்மம் தொனித்தது.
ஒரே சமயத்தில் குதித்தார்கள். கைகளில் 'பளபள' எனக் குத்தீட்டிகளுடன் துப்பாக்கிகள் மின்னின. இவன் இதயம் சடக்கென நின்றுவிட்டது ஒருகணம்.
தொலைந்தான்! இவன் எதிர்பார்க்கவில்லை....கனவில் கூட...."அவர்கள்" இப்படி ஒரு கோலத்தில் தந்திரமாக உலாவுவார்களென!
துப்பாக்கிகள் இவனை பசியுடன் நெருங்கிச் சூழ்ந்தன. மார்பை நோக்கி ஒரு இடி இறங்கிற்று. பிறகு தொடைகளில் நடுவே குறிபிசகாத ஒரு உதை.
சுருண்டு விழுந்தான். தலைமயிரைப் பற்றி இழுத்து வானுக்குள் எறிந்தனர்.
இரத்தமும் நிணமும், குமட்டும் வாசனையைப் பிறப்பித்துக் கொண்டிருக்க சிதறிப்போன தசைத்துண்டுகளாக.....