(Reading time: 20 - 39 minutes)

னால் மறுநாள் சுமித்ரா அவளை அழைத்து இந்த கம்பானியன் வேலை பற்றி கூறினாள். பிரீதாவிற்கு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையை விட்டு விட்டு செல்ல வேண்டுமே என்று வருத்தமாக தான் இருந்தது... ஆனால் தெரிந்த குடும்பம், ரொம்ப நல்லவர்கள் என்று சுமித்ரா சொல்லவும், தற்போது இருக்கும் நிலைக்கு மேல் என்று தோன்றவும், சரி என ஏற்றுக் கொண்டு இந்த வேலையில் சேர்ந்தாள் பிரீதா.

“பிரீ இதை நான் சொல்லாமல் இருந்தால் தப்பு... இந்த கம்பேனியன் வேலை பற்றி எனக்கு சொன்னது வினய்... அவங்க அவருடைய தூரத்து சொந்தமாம்... பாட்டி முறை! அவரே முயற்சி செய்து உனக்கு வேற வேலை வாங்கி தரலாம் ஆனால் அப்போதும் கூட இதே பிரச்சனைகள் உனக்கு வர வாய்ப்பு இருக்கு... மற்றபடியும் நீ இப்போ இருக்கும் மனநிலையில் கொஞ்ச நாளுக்கு இப்படி ஒரு வித்தியாசமான சுழல் உனக்கு நல்லதுன்னு சொன்னார்... இந்த ஹெல்ப் அவர் செய்ததுன்னு சொல்ல வேண்டாம்னு தான் சொன்னார்... எனக்கு தான் மனசு வரலை...”

ங்கே செல்லம்மாவை அவளுக்கு மிகவும் பிடித்து விடவே, அவரை தனிமையில் விட்டு செல்ல அவளுக்கு மனம் வரவில்லை... அதனால் ஒரு சில மாதங்களுக்கு என்று ஏற்றுக் கொண்ட வேலை தொடர்ந்துக் கொண்டிருந்தது...

இன்று வரை வினய்யிடம் அவனின் உதவிக்கு நன்றி தெரிவிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை... அதேபோல் அவள் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் அந்த பழைய நாளில் அவள் நடந்துக் கொண்ட முறைக்கு ஒரு மன்னிப்பு கேட்கவும் தான்...

தை எதையோ யோசித்தபடி வந்தவள், வீட்டில் புது குரல் கேட்கவும், திகைத்து நின்றாள். செல்லம்மாவின் குரலோடு, வேறு இரண்டு புதிய பெண்களின் குரலும் கேட்டது...

குழந்தைகள் இல்லாத செல்லம்மாவை தேடி இன்று வரை யாரும் வந்ததில்லை... எப்போதேனும் அவருடைய தோழி ருக்மணியும் அவர் குடும்பமும் வருவது உண்டு... ஆனால் இது யார் புதிதாக?

கேள்வியோடு அவள் நுழையவும்,

“வாம்மா பிரீ, உன் செல்லம் எல்லோரும் நல்லா இருக்காங்களா?” எனக் கேட்டார் செல்லம்மா.

“ம்ம்ம்...” அங்கே இருந்த புதியவர்களை பார்த்து அவள் சங்கோஜத்துடன் தலை அசைத்தாள்.

ஏனோ அவர்கள் இருவரும் அவளுக்கு பரிச்சயமானவர்களாக தோன்றினர்!

“பிரீ, இது என் தங்கையோட மருமகள் தேவி... அவள் மகள் விஜி... சிங்கப்பூரில் இருக்காங்க... இப்போ லீவில் வந்து இருக்காங்க... உன்னை பற்றி தான் அவங்களிடம் பேசிட்டு இருந்தேன்...”

பிரீதா ஒரு புன்னகையை கொடுக்க, மற்ற இருவரும் பதிலுக்கு நட்புடன் புன்னகைத்தனர்.

“பிரீக்கு தோட்டம் செடின்னா ரொம்ப பிடிக்கும்... அவளே நிறைய செடி நட்டு வச்சிருக்கா... காலையில் அந்த ரோஜா செடிகளுடன் பேசா விட்டால் அவளுக்கு நாளே சரி படாது...”

“நல்ல பழக்கம் தானே அத்தை... சைன்டிபிக்கா கூட இது போல் செடியோடு பேசுவது அந்த செடிகளுக்கு பிடிக்கும் அதனால் நல்ல செழிப்பா வளரும்னு சொல்றாங்க...”

“மம்மி போதும் மம்மி இந்த ப்ரூப் கதை எல்லாம்... எனக்கு பசிக்குது...”

தன் பின் நேரம் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது... செல்லம்மாவை போலவே விஜியும், தேவியும் கூட அவளுடன் உறவினர் போலவே சாதாரணமாக பேசி பழகவும், பிரீதாவிற்கு எந்த வித பிரச்சனையும் ஏற்படவில்லை.

அதிலும் விஜி அவளுடன் ரொம்பவே கலகலப்புடன் பேசி பழகினாள்... இருவரும் பிரீதாவின் தோட்டத்தை சுற்றி பார்த்து விட்டு வரும் போது, உள்ளே தேவி செல்லம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

“சிங்கப்பூரிலேயே இருந்தாலும் கூட நம்ம பிறந்த ஊர் பாசம் விட்டு போகுமா என்ன அத்தை? அது தான் இவளுக்கும், அவனுக்கும் நம்ம ஊரிலேயே வரன் பார்க்கலாம்னு இருக்கோம்...”

“நல்ல விஷயம் தானே தேவி...”

“நீங்க ப்ரீயா தானே இருக்கீங்க பிரீதா, பாட்டிக்கு தான் அம்மாவுடைய கம்பெனி இருக்கே, நீங்க என்னோட வாங்க...” என்றபடி பிரீதா பதில் சொல்லும் முன், அவளின் கை பற்றி அழைத்து சென்றாள் விஜி.

பல பல கதைகள் பேசி கொண்டிருந்தவர்கள்,

“இந்த போடோஸ் பாருங்க பிரீதா, இது தான் எங்க சிங்கப்பூர் வீடு... இது நானும் என் ப்ரெண்டும்... இது தான் என்னுடைய அப்பா... அப்புறம் இது அண்ணனும் நானும்...”

ஒவ்வொரு புகைப்படத்தையும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பிரீதா கடைசி போட்டோவை பார்த்து ஆச்சர்யப் பட்டாள். அதில் விஜியுடன் வினய் சிரித்துக் கொண்டிருந்தான்.

இது தானா அவளுக்கு இவர்கள் இருவரும் பரிச்சயமானவர்களாக தோன்றிய ரகசியம்?

பிரீதா அந்த புகைப்படத்தையே பார்த்தபடி இருப்பதை கண்ட விஜி,

“என்ன பார்க்குறீங்க பிரீதா, என் அண்ணன் பயங்கர ஸ்மார்ட்டா இருக்கான்னா? அவன் பார்க்க தான் அப்படி ஆனால் சரியான ப்ராடு!”

பிரீதா ஆச்சர்யமாக பார்த்தாள்.

“ஹா ஹா... என்னடா இப்படி சொல்றேன்னு பார்க்குறீங்களா? வேற என்ன செய்வது உண்மையை தானே சொல்ல முடியும்! அவன் ஒரு சரியான குரங்கு... பயங்கரமா கோபம் வரும்... கன்னாபின்னான்னு கத்துவான்... தண்ணி, சிகரெட் எல்லாம் உண்டு... ஆனாலும் என் அண்ணன் ஆச்சே அவனை பற்றி நான் தப்பா சொல்ல முடியுமா, ரொம்ப நல்லவன்...” என்றாள் விஜி புன்னகையோடு.

அவளின் விளையாட்டு பேச்சில் எது உண்மை எது பொய் என்று புரியாமல் குழம்பினாள் பிரீதா...

ஆனால் ஒரு விஷயம் மட்டும் புரிந்தது! அவனுக்கு இன்னமும் திருமணமாகவில்லை...

னோ திடீரென மனதினுள் ஒருவித மகிழ்ச்சி பரவுவதை பிரீதாவால் தடுக்க முடியவில்லை...

இரண்டு வருடங்களுக்கு முன் அவள் அவனிடம் பேசிய விதத்திற்கு அவன் அவளுக்கு உதவி செய்ததே பெரிது... அதன் பின் ஒரு முறை கூட என்ன எது என்று அவன் கேட்காமல் இருப்பதில் இருந்தே அவன் மனதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது...

இது எல்லாம் தெரிந்திருந்தாலும் புரிந்திருந்தாலும் கூட அவள் மனதில் அவனுக்கு இன்னமும் திருமணமாகவில்லை என்ற செய்தி ஒரு விதமான இன்ப உணர்வை தந்தது...

“உங்க அண்ணா இங்கே வரலையாங்க விஜி?” மனதில் ஏற்பட்டிருந்த படபடப்பை வெளிக் காட்டதிருக்க முயன்றபடி கேட்டாள் பிரீதா.

அவளை ஒரு பார்வை பார்த்த விஜி,

“அவன் நாளைக்கு இங்கே வரான்... அவனிடம் கொஞ்சம் கேர்புலா இருங்க பிரீதா... அவன் ஒரு மாதிரி... இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க... உங்க நல்லதிற்காக தான் சொல்றேன்... அவனை கெட்டவன்னு சொல்ல முடியாது, நிறைய ஹெல்ப் எல்லாம் செய்வான் ஆனாலும் கூட...”

விஜி கொடுத்த எச்சரிக்கை பிரீதாவை குழப்பியது!

அவள் அறிந்த வரையில் வினய் மிகவும் கண்ணியமாக நடந்துக் கொள்பவன்... ஆனால் அவளுக்கும் அவனை பற்றி எவ்வளவு தெரியும்?

என்ன தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அவன் செய்த உதவி மிக பெரிய விஷயம்! அவனிடம் நன்றியாவது சொல்ல வாய்ப்பு கிடைததிருக்கிறதே...

ரண்டு வருடங்களுக்கு பின் அவளை பார்க்கும் போது அவன் முகத்தில் எந்த விதமான உணர்வுகள் தோன்றும்? இன்னமும் அவனுடைய இதயத்தில் இடம் பெற்ற காதல் ராணியாக பார்ப்பானா இல்லை உன்னை பார்க்கவும் பிடிக்கவில்லை என்று பேசிய கோபக்காரியாக பார்ப்பானா?

அன்றிரவு முழுவதும் ஏதேதோ சிந்தனைகள், கனவுகள், கேள்விகள், குழப்பங்கள் என்று தூக்கமின்றி தவித்தவள், காலையில் சீக்கிரமே எழுந்து குளித்து தன்னுடைய செல்லங்களை பார்க்க சென்றாள்.

திரும்பி வீடு நோக்கி வந்தவள், உள்ளே இருந்து வந்த குரலைக் கேட்டு தவிப்புடன் நின்றாள்...

வினய்யின் குரல்! அவளுக்கு இன்னமும் அவனின் குரல் நினைவிருக்கிறதே...

இரண்டு ஆண்டுகள் கழித்து அவனை பார்க்க போகிறாள்... அவனிடமிருந்து காதல் பார்வை வருமா இல்லை கோபப் பார்வை வருமா?

இதய துடி துடிப்பு அதிகரிக்க... மனதினுள் இருந்த ஆர்வத்தை வெளிக் காட்டாதிருக்க முயன்றபடி உள்ளே சென்றாள் பிரீதா!

வினய் அங்கே தான் இருந்தான்... அவனிடம் எந்த மாறுபாடும் அவளுக்கு தெரியவில்லை... இரண்டாண்டுக்கு முன் பார்த்தது போன்றே இருந்தான்...

அவன் அவளை கவனித்ததாக தெரியவில்லை, கையில் இருந்த போனில் எதையோ நொண்டிக் கொண்டிருந்தான்...

“பிரீதாம்மா... வா வா... இவன் தான் என் மகன் வினய்... வினய் இது தான் பிரீதா...”

பலவித எதிர்பார்ப்போடு வினய் பக்கம் புன்னகையுடன் பார்த்த பிரீதா திகைத்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.