(Reading time: 24 - 48 minutes)

 

ணக்கம் நேயர்களே... இது உங்கள் வெற்றி படிகள் நிகழ்ச்சி... எப்பவும் போல் இன்னைக்கும் ஒரு பிரபலத்தின் வாழ்க்கை படிகளை பற்றி தான் நம்ம பார்க்க போவது ஆனால் இன்னைக்கு நம்ம சந்திக்க போவது கொஞ்சம் வித்தியாசமாக ஒரு பெண்மணியை... பெரும்பாலும் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண்மணி இவ்வளவு உயரத்துக்கு வந்திருப்பதை பார்ப்பதே அதிசயம் அதுவும் ஒரு தனி ஆளாக எந்தவித துணையும் இன்றி முன்னேறி வந்திருக்கும் crazy trends என்கிற ஆடை அணிகலன்களுக்கு பெயர்பெற்ற நிறுவனத்தின் உரிமையாளர் நர்மதா அவர்களை தான் சந்திக்க போகிறோம்” என்று கூறி எழுந்து நிற்க ஒரு பெண்மணி நுழைந்தார்..

அவள் கேட்டறிந்த வெற்றிகளை தொட்டிருக்கும் பெண்மணி குறைந்தபட்சம் ஒரு 45 வயதெனினும் கடந்திருக்க கூடும், மேலும் ஆடை அணிகலன்களுக்கு பெயர்பெற்ற நிறுவனத்தின் உரிமையாளர் என்ற எண்ணமே அவரை மிகவும் நவநாகரிக பெண்மணியாக எதிர்நோக்க செய்தது. ஆனால் அவள் கண்ணெதிரே வந்த பெண்மணியோ 35 தில் இருந்து 40 வயதிற்குள் இருந்தார். ஆடை அணிகலன்கள் என்று பார்க்கையில் ஒரு சாதாரண காட்டன் புடவைதான் ஆனால் அந்த ஆடையும் தகுதிக்கேற்ற மிடுக்கினை தந்தது. குறைத்து இடை போடவும் முடியாது ஆடம்பரம் என்று கூறவும் முடியாது.

கொஞ்சம் ஆச்சர்யபட்டு போனாலும் பேட்டி துவங்கியது. இயல்பான கேள்விகள்...

“உங்களின் inspiration யார்?”

“எப்போது இந்த திறமையை கண்டுகொண்டு அதை வளர்த்துக்கொண்டீர்கள்?”

“எப்போது துவங்கிய நிறுவனம்? எப்படிப்பட்ட போட்டிகளை சந்தித்தீர்கள்?” என்று ஒவ்வொன்றாக கேட்டுக்கொண்டே இருந்தாள். எதற்கும் சளைக்காமல் எந்த வித வேறுபாடும் காட்டாமல் மெல்லிதான ஒரு புன்முறுவல் அதுவும் தேவை என்றால் காட்டி, கண்களில் மட்டும் சில கேள்விகளுக்கு மின்னல் வெட்ட பதில் தந்தார் நர்மதா. அவரது கணீர் குரல் மற்றவர்களைவிட வித்தியாசப்படுத்தி காட்டினாலும், பெரும்பாலும் அது மனதில் உள்ள திடத்தை காட்டியது. இப்படியே பேட்டி சென்றுக்கொண்டிருந்தது.

“இவ்வளவு உயரத்திற்கு வளர்ந்திருக்கீங்க, உங்கள் குடும்பம் எந்த அளவிற்கு உங்களுக்கு உறுதுணையாக இருந்தது?” என்று அவள் கேட்கவும் ஒரு நொடி முகம் வேறுபாட்டை காட்டி  மறுநொடியே சுதாரித்து பதில் வந்தது.

“நான் நினைத்ததிற்கு மாறாக எதிர்ப்புதான், சரியாகிவிடும் என்று நினைத்தேன் ஆனால் நான் சாதிக்கும் வேளையில் அவர்கள் என்னோடு இல்லை” என்ற பதில் தந்தார். இதை கூறிய போது அவர் விழிகள் பிரதிபலித்த வலி ரிஷிகாவை மேலும் அந்த கேள்வியை தொடரவிடாமல் செய்தது. அவரது வலி ரிஷிகாவை என்னவோ செய்ய பரிதாபப்பட்டாள். பேட்டியும் ஒருவழியாக முடிந்தது. இந்த உரையாடலின் மூலம் நர்மதாவை பற்றிய அவளின் கணிப்பு, நம்பிக்கை அதிகம் உள்ள, தன் மனதை வெளியே காட்டவிரும்பாத திடமான பெண்மணி பாவம் அவரது குடும்பமும் அவருடன் இப்போது இல்லை.

யோசனைகள் வேறுபுறம் அவளை கொண்டு சென்றாலும்... அதன்பின் வேலையில் மூழ்கிவிட அவையனைத்தையும் முடித்து ஓய்வாக தன் இருக்கையில் வந்தமர்தாள் ரிஷிகா.. கைகால்களை நீட்டி களைப்பை அகற்றியவளின் கைப்பட்டு பேனா கீழே விழுந்துவிட,குனிந்து எடுக்க சென்றவளின் கையில் அந்த காகிதம்பட்டது. அது ரோஸ்லின் தந்த அதே காகிதம் பிரித்து பார்த்தவளின் கண்கள் சங்குசக்கரம் சுற்றும் பொழுது விரிவது போல் விரிந்து பார்க்க, அந்த எழுத்துக்களை அவளால் நம்பமுடியவில்லை.

மீண்டும் மீண்டும் படித்து பார்த்தாள் தாம் தான் தப்பாக படிக்குறோமோ அல்லது அப்படிதான் உள்ளதா? என்றெல்லாம் குழம்பினாள். குழப்பங்கள் வேலைகளை தடுக்க, விரைவாக வீடு திரும்பிவிட்டாள். குழப்பத்திலேயே இருக்க பிடிக்காமல் தன் குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டாள். உணவு வேளை முடிந்து படுக்கை அறை சென்றுவிட்டு அங்குள்ள தன் மடிக்கணியை உயிர்பித்தாள். மூளை சொல்ல சொல்ல கைகள் தானாக தந்தி அடித்தது.

கூகுள் சென்று, “Ms.Narmadha the owner of crazy trends technology limited”  என்று தேடினாள். முதல் வந்த வரிகள் எல்லாம் அவர் புகழ் பாட, பின்பக்கங்கள் செல்ல செல்ல, அவரை அவதூறாக பேசியும் சில தளங்கள் இருந்தது. அவற்றை திறந்து பார்த்தவளுக்கு மனதே எனவோ போல் ஆனது. இதில் இருக்கும் செய்திகள் உண்மை தானா? இல்லை இட்டுகதைகளா? என்று மனம் மேலும் குழம்பியது. என்னதான் அந்த செய்திகள் பார்த்து மனம் ஒருபுறம் குழம்பினாலும் மறுபுறம் முன்னேறி வந்தவர்களை இப்படியா இழிவுபடுத்தி காட்டுவது என்று மனம் கூசியும் போனது. சோர்ந்துபோய் தன் மடிகணினியை மூட சென்றவள் தனக்கு பின்னால் நிழல் ஆடுவதை உணர்ந்து திரும்பினாள். அங்கு அவள் தம்பி மனோ நின்றிருந்தான்...

ரிஷிகா விளக்கம் தர முனையவும் இல்லை, அதை கேட்க மனோவும் விரும்பவில்லை. சின்னதாக முனுகிவிட்டு படுக்க சென்றான். “வேலை வெட்டி இல்லாமல் முன்னேறியவர்களை பலிப்பதே இவர்களின் வேலை.... திறமைக்கு எங்கே இங்கு மதிப்புண்டு?!” என்று புலம்பி சென்றான்.

சென்ற தன் தமயனையே வித்தியாசமாக பார்த்தாள். அவள் அறிந்த சிறுவனா இவ்வளவு அறிந்திருப்பது, இது தலைமுறை மாறுதலின் பிரதிபலிப்பா? அல்லது தமையன் வளர்ந்துவிட்டானா? என்று சற்றே குழம்பினாலும் கொஞ்சம் பெருமையாகதான் இருந்தது அவளுக்கு.

காலையில் இருந்து நடந்தவையெல்லாம் மனதில் ஓடிக்கொண்டே இருக்க, நர்மதாவை நினைத்து ஒருபுறம் பெருமையாகவே இருந்தது. ஆனால் அவரை பற்றிய செய்தியில் இருந்து மீளத்தான் அவளால் முடியவில்லை. அதையே நினைத்து படுத்திருந்தவள் சிறிது நேரத்திலேயே உறங்கிப் போனாள்.

றுநாள் எப்போதும் போல் இந்த நாள் இனிய நாளாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதளிலேயே எழுந்தாள். மனம் ஏதோ யோசனையிலேயே இருக்க, தன் நிறுவனத்திற்கு அழைத்து பாதி நாள் விடுப்புக்கூறி அருகில் உள்ள கோவிலை அடைந்தாள் ரிஷிகா. மனதில் என்ன உறுத்துகிறது என்றே புரியாமல் வேண்டுதலை முடித்து கோவில் படியில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவள் கிளம்ப எத்தனிக்க, எதிரில் அவளையே பார்த்தவண்ணம் நர்மதா வந்தார். முன்பறியாத ஏதோ ஒரு தடுமாற்றம் பேசலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏன் இந்த தடுமாற்றம் என்றே புரியவில்லை அவளுக்கு. கால்கள் முன்னும்பின்னும் தடுமாற, தலையை தாழ்த்தி இருந்தவள் தன்னையே நொந்துக்கொண்டு நிமிர்ந்தாள். அவள் நிமிர்வதற்காகவே காத்திருந்தார் போல் அவள் எதிரில் நின்ற நர்மதா அவளை கண்டு புன்னகைத்தார். அந்த புன்னகை ரிஷிகாவை மேலும் குன்ற செய்தது. பதிலுக்கு அவளும் ஒரு புன்முறுவல் பூக்க, நர்மதா வாய்திறந்தார்.

“என்ன இப்போதான் விஷயம் தெரிந்தது போல?” என்று அவள் கண்களை ஊடுருவியபடி கேட்டார்.

அவர் கேட்ட “அந்த விஷயம்” எது என்று புரிந்தமையால் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். நர்மதா மேலே பேச துவங்கினார். “எனக்கு உங்கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா இல்லை......?” என்று கேள்வியாகவே முடிக்க, அவசரமாக “பேசலாம் மேடம்” என்று பதில் தந்து தன் விருப்பத்தை தெரிவித்தாள் ரிஷிகா. அவளுக்கும் நர்மதாவை பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்துக்கொண்டேதான் இருந்தது.

“சரி, இங்கே வேண்டாம் பக்கத்தில் இருக்க பூங்காக்கு போகலாம்” என்று கூறவும் அமைதியாக பின்தொடர்ந்தாள். தான் ரசித்த ஒரு பெண்மணி அவருடனே இருக்கும் தருணம் எப்படி ஒரு உணர்வு இருக்க வேண்டும் ஆனால் ஏன் இப்படி ஏதோ முழுமை அடையாதது போல் ஒரு உணர்வு தோன்றுகிறது என்று நினைத்துக்கொண்டே வந்தவள் இருவரும் ஓரிடத்தில் அமரவும் மனதை கட்டுபடுத்தி அவரை கவனிக்க துவங்கினாள்.

அவள் இப்போதும் என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் அமைதியாய் இருக்க, “என்ன நீ அன்னைக்கு பேட்டி எடுக்கும் போது படபடன்னு பேசிட்டு இப்போ வாய்பேசா மடந்தையா இருக்க” என்று அவரே கிண்டல் செய்து மீண்டும் தொடர்ந்தார்.

“இதுவரை நான் தந்த பேட்டி எல்லாத்திலும் என் சாதனையை தெரிந்து கொள்ள முயற்சி செய்ததைவிட என் கடந்த காலத்தையே கேட்பாங்க, ஒரு தருணத்தில பேட்டிகள் என்றாலே வெறுத்து போய்தான் பேட்டிகளை நிறுத்திட்டேன். நீ அந்த பேட்டியில் எதுவும் கேட்கவில்லைனதும் உன்மேல் ஒரு தனி ஈர்ப்பு வந்தது ஆனால் இப்போவல்ல தெரியுது நீயும் தெரிந்திருந்தால் எல்லா தொலைக்காட்சி போலவே மீண்டும் என் வரலாற்றை கேட்டிருப்ப போல....” என்று கூறியவரின் குரல் இது எனக்கு பழகிய ஒன்று என்ற உணர்வினை வெளிபடுத்தியது.

“எனக்கு முன்பே தெரிந்திருந்தாலும் கண்டிப்பாக அங்க கேட்டிருக்க மாட்டேன் மேடம்” என்று அவள் தன்பக்க நியாயத்தை கூற அவசரபட்டாள்.

மெல்லியதாக புன்முறுவல் பூத்தவர், “அப்போ இப்போ கேட்பன்னு சொல்லு...” என்று அவள் பதிலையும் தானே கூறிவிட்டு அமைதியாக இருந்தார். மெதுவாக குரல் எழும்ப ஆரம்பித்தாள் ரிஷிகா....

உண்மை அதுவென்று புரிந்தமையால் அவளால் பதில் கூற முடியவில்லை அமைதியாக இருந்தாள்...அவரும் பதில் எதுவும் பேசாவிட்டாலும் அவரது கண்கள் மட்டும் ஒரு நிமிடம் நீயும் மற்றவரை போலதானே என்ற பொருள் இருந்தது. அதை உணர்ந்து பதறியவள், “கண்டிப்பாக இது மற்றவரை போல காயப்படுத்தும் எண்ணத்தில் இல்லை மேடம் நான் அறிந்து வியந்த பெண்மணியை பற்றி மேலும் புரிந்துகொள்ள அவ்வளவுதான்... உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் வேண்டாம்” என்று கூரியவளின் பிற்பாதி ஏமாற்றத்தை காட்டியது.

அமைதியாக அவளை அளந்தவர், “நீ கேட்காவிட்டாலும் என்னவோ உன்னிடம் பகிர்திக்கணும் போலதான் தோணுது... if you don’t mind” என்று கூறினார் புன்முறுவலோடு.

அதன்பின் அவர் கூற கூற கேட்ட ரிஷிகாவின் மனம் ஏனோ நிறைந்தது அது தன்னை கவர்ந்த பெண்மணியை பற்றி தெரிந்துக்கொண்ட திருப்தியாக கூட இருக்கலாம். ஆனால் அவர் கூறிய ஒவ்வொன்றும் அவர் மீது மதிப்பை அதிகரித்தது... பொறுமையாக கேட்டவளின் முகம் இப்பொது தெளிந்திருக்க, “மேடம் நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா உங்க வாழ்க்கை பயணத்தை ஒரு கதையாய் நான் எழுதலாமா?” என்று சற்று தயக்கம் இருந்தாலும் தீர்க்கமாக வினவினாள்.

அவள் கேட்ட விதமோ அல்லது அவர் மனமும் அதை எதிர்பார்த்ததோ என்னவோ அவருக்கே தெரியவில்லை ஆனால் மறுக்கவில்லை ஒப்புக்கொண்டார்.

சில உறங்கா இரவுகளின் விளைவாக அவளது முதல் கதை வெளிவந்தது வாரபத்திரிக்கையில்.... முதல் கதை... அனைவருக்கும் இருக்கும் பரபரப்பு தானே?! எத்தனை பேர் அவள் எழுத்தினை ரசிப்பர், எத்தனை பேர் இதை எதிர்பர்... முந்தின நாள் உறக்கமும் இந்த நினைவிலேயே போயிற்று. காலை எழுந்தவுடன் ஆவலோடு சென்று தன் மகளின் கைவண்ணத்தை பார்க்க வாரஇதழை வாங்கிவந்தார், கலெக்டர் தந்தை ரகு.

பல கைகள் மாறி கடைசியாக அவள் அந்த இதழை திறந்து தன் முதல் எழுத்தினை ரசித்து படிக்க துவங்கினாள்....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.