(Reading time: 24 - 48 minutes)

வங்ககூடவே என்ன தங்கிக்க சொன்னாங்க, போக இடம் இல்லாததால நானும் தங்கிட்டேன். அவங்களை போலவே 7 திருநங்கைகள் சேர்ந்து இருந்தாங்க... அங்கதான் எனக்கு வர்ஷினின்ற திருநங்கை அறிமுகம் ஆனாங்க... எல்லாரும் சேர்ந்து இருந்தாலும் வர்ஷினி மட்டும் அவங்க கூட அதிகம் நேரம் செலவிட மாட்டாங்க. ஏதாவது படிப்பாங்க நிறைய கத்துக்கனும்கிற ஆர்வம் அவங்ககிட்ட அதிகம் உண்டு. எனக்கும் என்னவோ மத்தவங்களோட பழக அவ்வளவு எளிதா இல்ல. காலைல எல்லாரும் சேர்ந்து கிளம்புவாங்க எங்கேயாவது நான் பெரும்பாலும் வர்ஷினியை ஒட்டியே வருவே.. அவங்க ஒரு 5 அடி மத்தவங்களைவிட்டு தள்ளி தான் வருவாங்க. ஏன்னு முதல் நாள் நான் போனப்ப எனக்கு புரியலை. பொறுமையா அவங்க பண்ணுறதையெல்லாம் பார்த்துட்டே வந்தேன். சிலபேர் ஆண்கள்ட்ட தப்பா பேசினாங்க, மிரட்டி காசு வாங்கினாங்க, எனக்கு அவங்களோட ஒவ்வரு செயலும் உடல் கூச செஞ்சுது. அவங்களை பார்க்குற ஒவ்வரு ஆளுங்க பார்வைளையும் ஒரு ஏளனம் ஒரு அருவருப்பு.... எனக்கு அந்த பார்வை முதலில் கோவத்தை தூண்டுச்சு... அதே நேரம் சிந்திக்கவும் தூண்டுச்சு, இவங்க இப்படி நடந்துக்குரதால மத்தவங்க இப்படி ஏளன பார்வை வீசுராங்களா இல்லை மத்தவங்களோட ஏளன பார்வைதான் இவங்கள இப்படி நடக்க தூண்டுதானு... இது கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்ல முட்டையில் இருந்து கோழி வந்ததான்ற கதை மாதிரி தான் என்று உலக நடப்பை எளிய மொழியில் கூறியவரின் உதட்டில் அதே மாறாத முறுவல்.

இப்படி அவங்க கூட சுத்தியே ஒரு வருடத்தை வீணாக்கினேன் என் வாழ்க்கையை எப்படி அமச்சுக்கனும்னு தெரியாமலேயே... இந்த இடைப்பட்ட காலத்தில வர்ஷினியை நான் நல்லா புரிஞ்சிக்கிட்டேன். மத்தவங்களை போல அவங்க இருக்க விரும்பலை எதையோ சாதிக்க நினைச்சாங்க... அதை நோக்கியும் முன்னேறினாங்க. அவங்களை பார்த்துதான் நானும் அவங்களை போல இருக்க நினைக்குறது புரிஞ்சுது, அவங்களுக்கும் அது புரிஞ்சுது என்ன மாத்தினாங்க. என்னை ஒரு திடமான பெண்மணியாய் அவங்கதான் உருவாக்கினாங்க, ஸ்கூல் போக முடியாது. அந்த வயதை கடந்திட்டேன். ஆனால் உலக நடப்பை தெரிஞ்சுக்க பல வழிகள் இருந்திச்சு browsing center, செய்தித்தாள்னு நிறைய... வர்ஷினிக்கு தையல் கலை தெரிஞ்சுருந்தது ஒரு சிறிய கடை ஆரம்பிச்சாங்க. நான் சும்மா இருக்க நேரங்கள்ல பழையபடி வரைய ஆரம்பிச்சேன், அதை பார்த்த என்னை ஊக்குவிச்சாங்க. என்னதான் சொல்ல ரொம்ப எளிமையா தெரிஞ்சாலும் ஒவ்வரு நாளும் கஷ்ட்டப்பட்டு தான் நகர்ந்துச்சு. எங்களை தேடி யாரும் கடைக்கு வரலை அதுல அவங்க திறமையை பார்க்குறதை விட எங்களைதான் வினோதமா பார்த்தாங்க.

ரே ஊருல காலத்தை நகர்த்த முடியலை எனக்கு 20 வயசு இருக்கும் போது நானும் வர்ஷினியும் மட்டும் கேரளா பக்கம் வந்தோம் அங்க சில வருஷம் இருந்தோம். அதிஷ்டவசமாய் ஒரு டெலிபோன் பூத்ல எனக்கு வேலை கிடைச்சது. இரவு அங்க வேலை செஞ்சு பகல்ல ஒரு சின்ன ஆடை நிறுவனத்தில வேலை கிடைச்சுது. அதுவும் ஸ்டோர் ரூம்ல துணிகள் அடுக்கும் வேலை தான். காலத்தை ரொம்பவே கஷ்ட்டபட்டு நகர்த்தினோம். வர்ஷினிக்கு இருந்த தைரியத்துல துளிகூட எனக்கு கிடையாது. அவங்க பகல்ல அந்த துணிக்கடைல வேலை செஞ்சுட்டு மாலை நேரத்துல எப்படி எப்படியோ கெஞ்சி டியூஷன் center போய் டிப்ளோமா முடுச்சாங்க, அதோட நிறுத்தாம அவங்க அறிவ என்கூட பகிர்ந்துகிட்டாங்க. கூடிய சிகரமே இப்படி பஞ்ச பாட்டு பாடாம ஒரு நல்ல வேலையும் கிடைச்சுது என்று கூறியவர் இடைவெளி விட்டு அதிசயம்தான் என்று ஒரு விரக்தி புன்னகையோடு முனுகிக்கொண்டார்.

எனக்கு கொஞ்சம் ஏக்கம் அதிகம் ஆச்சு, கொஞ்ச வர்ஷம்தானாலும் நான் conventல படுச்சதெல்லாம் வீணானு ஏங்கிருக்கேன். அதிஷ்டம் என்பக்கமும் வந்திச்சு. ஒரு நாள் வாடிக்கையா வந்த customer ஏதோ ஆங்கிலத்துல கேட்க புதுசா சேர்ந்த பொண்ணுக்கு ஒண்ணுமே புரியலை பாவமா இருக்கேன்னு நான் அவங்களுக்கு என்ன தேவைன்னு கேட்டு இந்த பொண்ணுக்கு சொன்னேன். அது என்னவோ ரொம்ப சின்ன விஷயம்தான், ஆனால் இதையெல்லாம் என்னோட மேலாளர் கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்துட்டு இருந்திருக்கார். பார்த்திட்டு என்னை வரசொல்லி பேசினார். முதலில் கொஞ்சம் நடுக்கமா தான் இருந்திச்சு அப்பறம் வர்ஷினி சொல்லித்தந்த தைரியம் எங்கிருந்தோ வர திடமாவே அவரை பார்க்கப் போனேன்.

நான் பயந்ததுக்கு எதிரா என்னை பத்தி நிறைய கேட்டார் மேலாளர் நானும் சொல்ல ஆரம்பிச்சேன்... என்று சொல்லிக்கொண்டிருந்தவர் திடுரென என்னை பார்த்து இப்போ படத்தில் வருதே வசனம் “வாய்ப்புகள் அமையாது நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்”னு அது எவ்வளவு சாத்தியம்ன்னு எனக்கு தெரியாது ஆனால் அமைந்த வாய்ப்புகளை கெடுத்துவிட கூடாதுன்னு மட்டும் அந்த நேரம் உணர்ந்தேன்... எனக்கு என்னவெல்லாம் தெரியும் இந்த ஆடை வடிவமைப்பில் இருக்க ஆர்வம் இதுவரை நான் வரைந்தது என்று எல்லாத்தையும் காட்டினேன். எல்லாத்தையும் பார்த்தவருக்கு என்ன சொல்வதுனே தெரியலை கண்கள்ளமட்டும் அவ்வளவு ஆச்சர்யம் தெரிஞ்சது. அதுக்கப்பறம் என் வாழ்க்கை மாறி போச்சு. அந்த நிறுவனத்திலேயே ஆடை வடிவமைப்பாளர் ஆனேன். எனக்கு தெரிஞ்சதை திறம்பட செய்தேன், தெரியாததை நிறைய கத்துகிட்டேன். அங்க வேலை செஞ்ச 7 வருடம் என் திறமைகளை வளர்த்துக்க ரொம்பவே உதவிச்சு.

அங்க வேலை செஞ்சு நான் சேமித்த பணமும் புத்தியும் என்னை தனியாக ஒரு நிறுவனத்தை நிறுவ தூண்டுச்சு. ஆனால் பின்புலம் இல்லாமல் ஆரம்பிக்க முடியாதே?! திரும்பி வர்ஷினியின் உதவிக்கு வந்தாங்க. அவங்களுக்கு அமைந்த உண்மையான நட்பு, அவங்களை அவங்களாக மதிச்ச சிலபேர் எனக்கும் உதவினாங்க. என்னதான் யாதும் ஊரே யாவரும் கேளிர்ன்னு சொல்லிகிட்டாலும் சொந்த மண்ணின் வாசனை விடலை திரும்பி தமிழ்நாடு வந்தேன் சென்னையில் ஒரு நிறுவனத்தை உருவாக்கினேன். முதலில் சிறு சிறு ஆர்டர் கிடைச்சுது அதன்பின் ஆடைகளை பார்த்து நிறைய பேர் வந்தாங்க... படி படியா முன்னேறி 15 வருட காலத்துல இந்த நிலைமைக்கு வந்திருக்கேன். சொல்ல ரொம்பவே எளிமையாத்தான் இருக்கு, ஆனால் இந்த துறையில் நான் கண்ட மனிதர்கள், எதிர்கொண்ட சூழ்நிலைகள் எல்லாமே என்னோட இயல்பையும் மீறி ஒரு முகமூடி போட்டுக்க சொல்லுச்சு. வெளியே என்னதான் திடமா காட்டிகிட்டாலும் இத்தனை வர்ஷத்துல எத்தனை கேலிபேச்சு எத்தனை ஏளன பார்வை அப்பப்பா.... இந்த சமூகம் வளர்ந்த விதமே அப்படிதான் போல, திருநங்கைகளை பார்த்தால் மனதில் தானாக ஒரு நடக்கம் தோன்றிவிடுகிறது... என்று கூறியவரின் கண்கள் என்னை நேராக பார்த்து நீ கோவிலில் பயந்தியே அதைப்போல... என்று அவர் கூற ஏன் மனம் நிறையவே கூசி போனது.

ஒரு பெண்ணின் வலிமை மனதிடம், ஒரு ஆணின் வலிமை உடல்திடம்... அப்போ இந்த இரண்டுமே என்னிடம் இருக்கும் போது எந்த வகையில் நான் தாழ்ந்து போனேன்??? அவரது பேச்சை ஒரு கேள்வியோடு முடித்தார் crazy trends என்கிற நிறுவனத்தின் உரிமையாளர் நர்மதா என்கிற வினோத்.... இது என்னிடம் மட்டும் கேட்கும் கேள்வியா? இந்த கேள்விக்கு பதில் உண்டா? இந்த கதை யாரையேனும் மாற்றுமா? இந்த கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை, ஆனால் இதை படிக்கும் ஏதாவது ஒரு உள்ளத்தில் 1 சதவிதம் நல்ல மாற்றம் ஏற்பட்டாலும் அது என் எழுத்துக்கு மட்டுமல்ல, தன் முகமூடியை சில மணிநேரம் கலட்டிவைத்து தன் நிஜ முகத்தை காட்டிய  நர்மதாவுக்கும் கிடைத்த வெற்றியே...

-    ரிஷிகா


 

 

பொறுமையாக படித்து முடித்த ரிஷிகாவின் மனம் தன் “கதையின்” முடிவிற்காக(result) காத்திருந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.