(Reading time: 21 - 42 minutes)

 

ணி ஏழைத் தொட்ட பின்பும் அவன் வராமல் போக அவரைக் கவலை பிடிக்க ஆரம்பித்தது.  சிறிது நேரத்தில் அழைப்பு மணி சத்தம் கேட்க கண்ணன்தான் வந்துவிட்டானோ என்று அவசர அவசரமாக சென்று கதவைத் திறக்க அங்கு அவரின் மனைவி நின்று கொண்டிருந்தாள்.

“என்னங்க கண்ணன் வந்துட்டானா? எங்க போய் இருந்தானாம்? அவன் வந்த உடனே போன் பண்ண சொன்னேனே ஏன் நீங்க பண்ணல?”, சுந்தரை பதிலே சொல்ல விடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டாள் ஷன்மதி. 

“ஒரு கேள்வி கேட்டேனா அதுக்கு பதில் சொல்ல டைம் கொடுத்துட்டு அடுத்த கேள்வி கேளு ஷம்மு.  இப்படி காப்பே விடாம கேக்காத.  உன் முதல் கேள்விக்கு பதில் இல்லை இன்னும் வரலை. அடுத்த கேள்விக்கெல்லாம் எனக்கே பதில் தெரியாது, போதுமா”

“என்னங்க இது மணி ஏழரை ஆகுது இன்னும் காணுமே?”

“ஹ்ம்ம் எனக்கும் கவலையாதான் இருக்கு.  எட்டு மணி வரைக்கும் பார்க்கலாம்.  அவனுக்கு இருட்டுன்னா பயம்.  அதனால ராத்திரி வீட்டுக்கு வந்துதான் ஆகனும்.  அப்படியும் வரலன்னா நான் போய் அவன் ப்ரிண்ட்ஸ் வீட்டுல எல்லாம் பார்த்துட்டு வரேன்”, என்று கூற அதுவும் சரியே என்று ஷன்மதி இரவு உணவு தயாரிக்க சமையலறை நோக்கி சென்றாள்.

எட்டு மணி கடந்த பின்னும் கண்ணன் வராமல் போக கொஞ்சம் கொஞ்சமாக கவலை ஏற ஆரம்பித்தது.

“என்னங்க இது இன்னும் கண்ணனைக் காணும்.  எனக்கு என்னவோ பயமா இருக்குங்க.  நீங்க அவன் ப்ரிண்ட்ஸ் வீட்டுக்கு வேணாப் போய் பார்க்கறீங்களா?”

“ஹ்ம்ம் எனக்கும் கவலையாதான் இருக்கு ஷம்மு.  நான் மொதல்ல அவன் ப்ரிண்ட்ஸ்க்கு போன் பண்ணிப் பார்க்கறேன்”

“சரிங்க அவன் க்ளோஸ் ப்ரிண்ட் ரகுதான்.  மொதல்ல அவனுக்குப் பண்ணுங்க”

சுந்தர் ரகு வீட்டிற்கு போன் செய்து விசாரிக்க ரகுவின் பெற்றோர் கண்ணன் அங்கு வரவில்லை என்று கூறி, மேலும் அவன் எங்கு சென்றிருப்பான் என்ற விவரமும் தெரியவில்லை என்று கூற, படபடப்புடன் மற்ற நண்பர்கள் வீட்டிற்கும் போன் செய்தார் சுந்தர். எல்லா இடங்களிலும் இதே பதிலே வர அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கணவனும், மனைவியும் திகைத்துப் போய் அமர்ந்து விட்டார்கள். 

“ஷம்மு இப்போ என்ன பண்றது.  இந்தப் பையன் எங்க போய் மாட்டி இருக்கான்னு தெரியலையே”

“எனக்கும் பயமா இருக்குங்க.  காலைல அவன் சொல்ல சொல்ல அவனை அடிச்சு இன்னைக்கு டான்ஸ் கிளாஸ் போய்தான் ஆகணும்ன்னு ரொம்ப கம்பெல் பண்ணினேன்.  அவன் அங்க போகவே மாட்டேன்னு அடம் பண்ணினான்.  ஒரு வேளை வீட்டுல இருந்தா அங்க அனுப்பிடுவோம்ன்னு பயந்து எங்கயானும் போயிட்டானா?”

“ஹ்ம்ம் நீ சொல்றா மாதிரிதான் இருக்கும்.  ஆனால் ஏன் டான்ஸ் கிளாஸ் போக மாட்டேன்னு திடீர்னு ரொம்ப அடம் பண்ணினான்?”

“அவனுக்கு அங்க இருக்கற girls கூட எல்லாம் ஆட சொல்றாங்கன்னு கோவம் அப்பறம் அந்த மாஸ்டர் ஏதோ தப்பா நடந்துக்கறார்ன்னு வேற சொன்னான்.  இதுல எது உண்மைன்னே தெரியல.  அவரை பார்த்தா அந்த மாதிரி நடக்கறா மாதிரி தெரியலை.  சரி நீங்க எதுக்கும் ரகு வீட்டுக்கு நேரப் போயிட்டு வந்துடுங்க.  அவன்கிட்ட இன்னைக்கு கண்ணன் ஸ்கூல்ல எப்படி நடந்துகிட்டான்னு கேளுங்க”

“சரிம்மா, நான் போயிட்டு வந்துடறேன்.  நான் போய் இருக்கற சமயத்துல கண்ணன் வீட்டுக்கு வந்துட்டான்னா உடனே எனக்கு கால் பண்ணு”, என்று மனைவியிடம் விடை பெற்று ரகு வீட்டை அடைந்தார் சுந்தர்.  அங்கு ரகு வீடு பூட்டப்பட்டிருக்க அதிர்ச்சியுடன் நின்றார் சுந்தர்.

“ஷம்மு இங்க ரகு வீடு பூட்டி இருக்கு.  உனக்கு அவங்க செல் நம்பர் தெரியுமா?”

“அச்சோ என்னங்க இது.  எனக்கு அவங்க லேன்ட்லைன் நம்பர் மட்டும்தான் தெரியும்.  அதுகூட அவங்கதான் ரெண்டு முறை போன் பண்ணி கிளாஸ் வொர்க் பத்தி டவுட் கேட்டாங்க.  நான் அவங்களுக்கு பண்ணினது கூட இல்லை”

“சரிம்மா, இனியும் நேரம் கடத்திட்டு இருக்க முடியாது.  கண்ணன் போட்டோ ஒண்ணு எடுத்து வைய்யி.  நான் வீட்டுக்கு வந்துட்டு பக்கத்துல இருக்கற போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வந்துடறேன்”, போனை அணைத்துவிட்டு வீட்டை நோக்கி வண்டியை விட்டார் சுந்தர்,

ன் மகன் கிடைத்துவிட வேண்டும் என்று உலகத்தில் உள்ள அத்தனை தெய்வங்களிடமும் முறையிட்டபடியே அவனுடைய தற்போதைய புகைப்படத்தை எடுத்து வைத்தார் ஷன்மதி.  வீடு வந்த சுந்தர் அவளிடம் புகைப்படத்தை வாங்கிக்கொண்டு. “ஏம்மா இன்னைக்கு அவன் என்ன டிரஸ் போட்டிருந்தான்னு தெரியுமா?  அதையும் சேர்த்து சொல்லிட்டா இன்னும் கொஞ்சம் வசதியா இருக்கும்”

“ஹ்ம்ம் ஞாபகம் இருக்குங்க.  நான் அவனுக்கு ரூம்ல ட்ரெஸ் எடுத்து வச்சுட்டுதான் கிளம்பினேன். கருப்பு பாண்ட்டும், நீலக் கலர் சட்டையும் எடுத்து வச்சேன்.  இருங்க அந்த டிரஸ் போட்டு எடுத்த போட்டோவே இருக்கு, அதையும் தர்றேன்.  ரெண்டுமே எடுத்துட்டு போங்க.  நானும் உங்ககூடவே வரவா?  எனக்கு இங்கத் தனியா இருக்கவே முடியலை.  ஒரு ஒரு நிமிஷமும் கண்ணனுக்கு என்ன ஆச்சோன்னு கவலையா இருக்கு.”, என்று அழுதபடியே கேட்டாள் ஷன்மதி.

“போலீஸ் ஸ்டேஷன்க்கு நீ வரவேண்டாம் ஷம்மு.  நான் போயிட்டு சீக்கிரம் வந்துடறேன்.  ரெண்டாவது, வீட்டுல ஒருத்தர் இருக்கறது நல்லது.  நாம ரெண்டு பெரும் வெளிய போய் இருக்கும்போது ஒரு வேளை கண்ணன் திரும்பி வந்துட்டாலோ, இல்லை அவனை  கண்டுபிடிச்சு யாரானும் போன் பண்ணினாலோ தெரியாமப் போய்டும்.  நீ அழாம தைரியமா இரு”, என்று ஆருதல் அளித்தபடியே கிளம்பினார் சுந்தர்.  என்னதான் மனைவியை அழ வேண்டாம் என்று சொன்னாலும், அவராலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.  கண்கள் கலங்கியபடியே போலீஸ் ஸ்டேஷன் சென்று புகாரை அளித்து அவர்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளித்து நொந்து நூலாகி ஒரு வழியாக இரவு பதினோரு மணிக்கு வீடு வந்து சேர்ந்தார்.

ன்னங்க இவ்வளவு நேரம்.  நான் பயந்து போயிட்டேன்.  போன் பண்ணினாலும் நீங்க எடுக்கவே இல்லை”’

“இல்லமா அங்க ஆயிரத்தெட்டு கேள்விகள்.  எக்கச்சக்க ப்ரோசீஜர்ஸ் எல்லாத்தையும் முடிச்சு வர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுச்சு.  நாளைக்கு காலைல திரும்ப வந்து பார்க்க சொல்லி இருக்கார் இன்ஸ்பெக்டர்.  அங்க இங்க அலைஞ்சிட்டு இருந்ததால போனை சைலன்ட்ல போட்டுட்டேன்.  அதுதான் எடுக்க முடியல”

“என்னங்க நம்ம பையன் கிடைச்சுடுவான் இல்லை.  நான் காலைல அவன் சொல்லும்போது ரொம்ப சீரியஸ்ஸா எடுத்துக்கவே இல்லைங்க.  ஏதோ பாடாம இருக்க சாக்கு சொல்றான்னு நினைச்சுத்தான் கொஞ்சம் கண்டிச்சு சொன்னேன்.  இந்த மாதிரி அவன் வீட்டை விட்டுப் போவான்னு தெரிஞ்சு இருந்தால், அவன் பாடவே வேண்டாம்ன்னு சொல்லி இருப்பேன்”, என்று கூறியபடியே கதறி அழ ஆரம்பித்தாள்.  இதைத்தான் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் பண்ணுவது என்று சொல்கிறார்களோ.  அவள் சொல்ல சொல்லத்தான் கண்ணனைப் போன்ற ஒரு நல்ல குழந்தை  இப்படி வீட்டை விட்டு வெளியில் போகும் அளவிற்கு வந்திருக்கிறதென்றால் தாங்கள் எந்த அளவு அவனை மனதளவில் துன்புறுத்தியிருக்கிறோம் என்று தானும் கலங்க ஆரம்பித்தார் சுந்தர்.

“அந்த டான்ஸ் ஸ்கூல்ல அவன் மனசை பாதிக்கறா மாதிரி ஏதோ நடந்திருக்கு ஷம்மு.  அது என்னன்னு தெரியலை.  ஏன்னா டான்ஸ் ஸ்கூல் போக ஆரம்பிச்சப்புறம்தான் அவன் பாட மாட்டேன்னு அடம் பண்ண ஆரம்பிச்சான்”

“ஆமாங்க காலைல அவன் வந்து சொல்லும்போதே என்ன ஆச்சுன்னு விளக்கமா நான் கேட்டு இருந்து இருக்கணும்.  அதை விட்டுட்டு அவனைப் பிடிச்சு அடிச்சு, கொடுமை பண்ணிட்டேன்”, அழுதபடியே கூறினாள் ஷன்மதி.

“சரி விடு அழாதே.  கண்ணன் கண்டிப்பா கிடைச்சுடுவான்.  கடவுள்கிட்ட வேண்டிக்கலாம்.  இப்போ வந்து படு.  காலைல எதுக்கும் இன்னொரு வாட்டி அவனோட ப்ரிண்ட்ஸ் வீட்டுக்கெல்லாம் ஒரு முறை நேர்லயே போயிட்டு வரேன்”, இருவரும் படுக்க செல்ல கண்ணனைப் பற்றிய கவலையிலேயே அவர்களுக்கு அந்த இரவு தூங்கா இரவானது. 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.