(Reading time: 20 - 39 minutes)

நம் குடும்பம் - மது

This is entry #22 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest.

நேற்று (25 ஆண்டுகளுக்கு முன்)

வாசலில் சைக்கிள் மணி சத்தத்தைத் தொடர்ந்து "சார் போஸ்ட்!!!" என்று ஒலித்தக் குரலில் துள்ளி குதித்துக் கொண்டு," ஹையா!! நந்து குத்திக்கு லெத்தர் வந்துச்சு" என மழலையாய் மொழிந்த படியே வாசலுக்கு ஓடி வந்தாள்  நான்கு வயது குட்டிச் செல்லம் நந்தினி.

" மாமா! லெத்தர் குதுங்க!!" என கை நீட்டியவள் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ளி," ராஜேந்திரன் சார்க்குத் தான் லெட்டர் வந்திருக்கு. அவர்கிட்ட தான் குடுப்பேன்" என்று வேண்டுமென்றே வம்பு வளர்த்தார்.

"அப்பா பேத்ரி ( பாக்டரி ) போயாச்சு...நான் கித்த லெத்தர் குதுங்க" அவள் கொஞ்சும் மழலையை ரசித்த படியே ," மாமாக்கு பிளைங் கிஸ் குடு. அப்போ தான் " என்றார்.

Nam kudumbam

உடனே தன் பிஞ்சு கைகளில் உதடுகள் குவித்து “ப்பூ” என்று ஊதி," நந்து கிச்  குத்துதா.. லெத்தர்" என்றவளிடம் இன்லண்ட் லெட்டரைக் கொடுத்து," குட்டி கிழிக்காம அம்மாகிட்ட குடுக்கணும் சரியா" என்று கூற," சரி மாமா" என்று தலையை ஆட்டினாள்.

எதிர் வீடு வாசலில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சீனுவிடம்," "நானுக்கு லெத்தர் வந்துச்சே" என கையில் இருந்த தபாலை ஆட்டி ஆட்டி காண்பிக்க, ஐந்து வயது பாலகன் சீனு தபால்காரரிடம்," எனக்கும் லெட்டர் தாங்க மாமா" என்று கையை நீட்டினான்.

தபால்காரர் பாடு தான் திண்டாட்டம் ஆகி விட்டது. தபால் காரர் வரும் நேரம் பெரியவர்களே  ஆவலுடன் வாசலைப் பார்த்திருக்கும் போது குழந்தை  ஏங்குவது அவருக்குப் புரியாமல் இல்லை. அதுவும் நந்து வீட்டிற்கு வாரம் தவறாமல் தபால் வரும். சீனு வீட்டிற்கோ எப்போதோ ஒரு முறை. இதை நன்கு உணர்ந்தவர்," நாளைக்குக் கட்டாயம் தருகிறேன்" என சொல்லிவிட்டு நகர்ந்தார்.

நந்தினி வேண்டுமென்றே சீனுவிடம்," நந்து குத் கார்ல். அதான் காத் ( god ) லெத்தர் குத்தார்( கொடுத்திருக்கிறார்). பேத் பாய்க்கு லெத்தர் கிதையாது" என்று சொல்ல சீனு ஓவென அழத் தொடங்கினான்.

அவன் அழுகுரல் கேட்டு வாசலுக்கு விரைந்த பத்மினி," சீனு ஏன்பா அழற. நந்து என்ன சொன்னே நீ " என தன் மகளை அதட்டினார்.

அதற்குள் சீனுவின் தாய் சாரதா," என்னடா ஆச்சு.. நந்து குட்டி உங்க பிரண்ட் ஏன் அழறான். நீங்க கூட இருக்கும் போது அவனை யார் திட்டினா" என நந்தினியிடம் வினவினாள்.

சாரதா எப்போதுமே எந்த ஒரு விஷயத்தையும் மிக அழகாக புத்திசாலித்தனமாக கையால்பவள்.

அவள் கூறியதைக் கேட்ட நந்துவிற்கு நாம்  தான் சீனுவை அழ வைத்து விட்டோம் என்ற குற்ற உணர்வு தோன்ற," போச்த்மென் மாமா சீனுக்கு லெத்தர் தரல அத்தே . அதான்” எனக் கூறி தன் கையில் இருந்த லெட்டரை " நீ வச்சுக்கோ" என அவன் கையில் திணித்தாள்.

சாரதா நந்துவை தூக்கி," சமத்து என் தங்கம்" என முத்தமிட்டு," சீனு, பத்மினி அத்தைகிட்ட லெட்டர் குடு. அவங்க படிச்சு சொல்வாங்க" என்றாள்

சீனு தன் கையில் லெட்டர் வந்துவிட்ட சந்தோஷத்தில் அழுகையை நிறுத்தி இருந்தவன் பத்மினியிடம் லெட்டரைக் கொடுக்க அவர் அதன் அனுப்புனர் முகவரி பார்த்து முகம் மலர்ந்தார்.

"யார்கிட்ட இருந்து லெட்டர்" சாரதா கேட்க ,"பாலா அண்ணாவிடம் இருந்து" என கூறியவாறே பிரித்து விரைவாகப் படித்தவள்," பொங்கலுக்கு ஊருக்கு வரச் சொல்லி தான் லெட்டர் போட்டிருக்காங்க" என்றாள்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த நந்தினி," அம்மா... நானும் பதிக்கிறேன் குதுங்க" எனக் கேட்க. " நந்து.. பாலா மாமா தான் லெட்டர் போட்டிருக்காங்க. நாம தாத்தா வீட்டுக்குப் போகிறோம் பொங்கலுக்கு.. நீ சீனுவோட விளையாடு. அம்மாக்கு சமையல் வேலை இருக்கு" எனவும்

"நாங்க தாத்தா வீத்துக்குப் போறோமே!! நீ போலையா உங்க தாத்தா வீத்துக்கு" என சீனுவிடம் கேட்டாள்.

அவன் இல்லை என தலை ஆட்ட," அங்க தாத்தா, பாத்தி, சங்கர் அண்ணா , வெங்கி அண்ணா , பாலா மாமா, வாசு மாமா, சாந்தி அத்தை, கனி அத்தை" ... ஒவ்வொரு பெயரையும் விரல் விட்டு எண்ணிக் கொண்டே ஒப்பித்தவள், "ம்ம்ம் அப்புறம் ராஜி சித்தி, அத்த பாத்தி எல்லோருமே இர்க்காங்க" என்றாள்.

த்மினியின் தாய் வீடு கிராமத்தில் பெரியக் கூட்டுக் குடும்பமாகவே இன்னும் வசித்து வருகிறார்கள்.

சாரதா, சேகர் இருவருமே  வெவ்வேறு  ஆசரமத்தில் வளர்ந்தவர்கள். தங்கள் முயற்சியால் நன்றாக படித்து சாரதா ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளியில் சேகர் அலுவலக மேனேஜராக இருந்தார். இருவருக்குமே பிடித்துப் போக திருமணம் செய்துக் கொண்டனர். சொந்தம் என சொல்லிக் கொள்ள யாரும் இல்லாமல் இருந்த குறையைத் தவிர தங்கள் ஐந்து வயது மகனோடு மகிழ்ச்சியாக வசித்து வந்தனர்.

இன்று நந்துவின் சொந்தங்களைக் கேட்டு அவளின் சந்தோஷத்தை ஏக்கமாக பார்த்த மகனைக் கண்டு சாரதா கலங்கி தான் போனார்.

"சாரதா, நீங்களும் எங்களோட ஊருக்கு வரலாமே. அம்மா , அண்ணிங்க, ராஜி எல்லோருமே உங்கள பார்த்தா சந்தோஷப் படுவாங்க. எங்க ஊர்ல பொங்கல் விசேஷமா நாலு நாள் கொண்டாடுவோம்" என பத்மினி கூ 

"இல்லை பத்மினி , பரவாயில்லை" என தயங்க அந்த சமயம் மதியம் உணவிற்கு அங்கு வந்தார் சேகர்.

வாசலிலே ஏதோ முக்கியமாக உரையாடிக் கொண்டிருக்கும் பெண்களைப்  பார்த்து," ஹோட்டலுக்குப் போய் சாப்பாடு வாங்கி வரட்டுமா. உங்களுக்குமா பத்மினி. ராஜ் வரலை இன்னும்" என கேலி செய்ய

"சேகர் அண்ணா... சாரதா உங்களுக்குப் பிடிச்ச வத்தக் குழம்பு செஞ்சு வச்சிருக்காங்க... வேண்டாம்னா சொல்லுங்க. நான் எடுத்துட்டுப் போறேன். எனக்கு வேலை மிச்சம்" என்றாள்  பத்மினி.

"பத்மினி பொங்கலுக்கு நம்மளையும் அவங்க ஊருக்குக் கூப்பிடிராப்ள" என சொல்லத் தொடங்கியவளை பத்மினி முந்திக் கொண்டு," சேகர் அண்ணா... நீங்க என்ன உங்க தங்கச்சியா நினைக்கிறதா இருந்தா வாங்க" என அன்புக் கட்டளை இட்டாள்.

அங்கு வந்து சேர்ந்த ராஜேந்திரனும் விஷயம் அறிந்து சேகர் சாராதவை வற்புறுத்த அவர்கள் சம்மதித்தனர்.

மதுரை அருகில் அழகர் கோவில் மலை அடிவாரத்தில் பசுமை நிறைத்த அந்த கிராமம் மனதிற்கு மிக ரம்மியமாக இருந்தது.. ஏற்கனவே தன் வீட்டினருக்கு சேகர் குடும்பமும் உடன் வருவாதாக தகவல் கொடுத்திருந்தாள் பத்மினி.

அனைவரையும் வரவேற்று உபசரித்த பத்மினியின் தாய் தந்தை லக்ஷ்மி மணியனை சாரதாவிற்கு மிக பிடித்துப் போயிற்று.

அவர்களை எப்படி அழைப்பது என தயங்கிய சாராதவை," அத்த மாமான்னு கூப்பிடுமா சாரு.. பத்மினிக்கு சேகர் அண்ணன்னா எங்களுக்கு மகன் தானே" எனவும் சாரதா ,"அத்த " எனக் கட்டிக் கொண்டாள்.

"சாரு! அந்த தேங்கா எடுத்து வச்சியா" சாந்தி குரல் கொடுக்க அந்த வீட்டில் ஒருவராய் ஆகிப் போன சாரதா "வச்சிட்டேன் அக்கா" என பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே," "சாருண்ணி!! எனக்கு புடவை கொசுவம் வச்சு விடுங்க" என்ற ராஜிக்கு உதவி செய்தாள்.

நந்தினி அந்த குடும்பத்தில் ஒரே பேத்தி என்ற அந்தஸ்தோடு இளவரசியாக வலம் வந்துக் கொண்டிருந்தாள். அவளை விட நான்கு ,ஐந்து வயது மூத்த மாமன் மகன்களின் செல்லமாக இருந்தவள் தன்னோடு சீனுவையும் இணைத்துக் கொள்ள சீனுவிற்கு ஒரே மகிழ்ச்சி.

தன் தந்தையிடம்," அப்பா.. சங்கர் அண்ணாவோட பட்டம் விட்டேன்பா. அப்புறம் அங்க மீனெல்லாம் பார்த்தேன்.. கையில் பிடிச்சேனே" சந்தோஷமாக கூறிய தன் மகனைப் பார்த்துப் பூரித்துப் போயிருந்தார் சேகர்.

"சீனு, சீனு வா தையர் வந்தி ஒத்தலாம்" என அவனை இழுத்துக் கொண்டு சென்றாள் நந்தினி.

"சேகர்.. ஒரு கை பிடிப்பா.. இந்த மேஜையை அந்த பக்கம் நகர்த்த" என வாசு சொல்ல," இதோ வரேண்ணே" என ஓடினார் சேகர்.

கோயிலின் அர்ச்சனையின் போது எல்லோர் பெயரையும் வரிசையாக சொல்லிக் கொண்டிருந்த லக்ஷ்மி அம்மா, " பாலமுரளி - சாந்தி, பேரன் சங்கர், வாசு - கனி , பேரன் வெங்கடேஷ் , சேகர் - சாரதா, பேரன் ஸ்ரீநிவாசன்" என சொல்லிக் கொண்டே போக ,சேகர் சாரதா நெகிழ கோவில் மணி "ததாஸ்து" அப்படியே ஆகட்டும் என பலமாக ஒலித்தது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.