(Reading time: 20 - 39 minutes)

நாளை - 25 ஆண்டுகளுக்குப் பின்

(இதில் வரும் அனைத்தும் என் சொந்தக் கற்பனையே…அறிவியல் உண்மைகள் முரண்பாடாக அமைந்திருப்பின் மன்னிக்கவும். கற்பனையாய் மட்டுமே எடுத்தக் கொள்ளுங்கள்)

ன் விரலில் இருந்த மோதிரம் போன்ற கருவியில் சிவப்பு ஒளி தெரிய தன் இரண்டு வயது மகள்

(பூமியின் காலத்தின் படி நான்கு வயது) யாழினியை அழைத்து வர "மங்கள்" சூட் அணிந்து தன் "மார்ஸ் இந்தியா ஹோம் 5" விலிருந்து  வெளியே வந்தாள் வர்ஷினி.

வர்ஷினி தன் இரண்டு (நான்கு) வயது மகள் மற்றும் கணவன் ப்ரித்வியோடு வசிப்பது செவ்வாய் கிரகத்தில்.

செவ்வாயில் ஒரு வருடம் பூமியின் 687 நாட்களுக்கு சமம். அங்கு கார்பன் டைஆக்சைட் (கரியமிள வாயு) அதிகம் என்பதாலும், விசை ஈர்ப்பு பூமியின் மூன்றின் ஒரு பகுதி என்பதாலும் பூமியின் மனிதர்கள் சிறப்பு சூட் அணிந்தே செவ்வாயில் உலா வர முடியும். அந்த சூட்டை ஆராய்ச்சி மூலம் தயாரித்ததே ப்ரித்வி  தான். வர்ஷினி வேற்று கிரக ஜீவ ராசிகள் பற்றிய ஆராய்ச்சி செய்யும் ரிசர்ச் சைண்டிஸ்ட்.

2014 ல் மங்கல்யான் வெற்றிக்குப் பிறகு செவ்வாயில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அங்கு முதன் முதலில் நமது விண்வெளி வீரர்கள் கால் பதிக்க அங்கு ஜீவ ராசிகள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

அங்குள்ள உயிரினங்களோடு தொடர்பும் நல்லுறவும் ஏற்படுத்த தற்போது செவ்வாயில் மார்ஸ் இந்தியா என்ற ஒரு வசிப்பிடம் அமைத்து  ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

மகள் M2 வுடன் பயோ லேபில் இருக்க அங்கு சென்ற வர்ஷினி தமிழில்," யாழி.. நம்ம பூமியில் இருந்து தாத்தா பாட்டி, ஹாரி மாமா எல்லாம் சாட்டிலைட் பப்பில்ல ( SATTELITE BUBBLE) இருக்காங்க.. வா பேசலாம்" எனவும்

யாழினி M2 விடம், "………………………………..." என தன் உள்ளங்கை ஸ்க்ரீனில் தட்டினாள் . ( இது செவ்வாய் ஜீவ ராசிகள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் கோடிங் மொழி. அவள் M2 விடம் தன் தாத்தா பாட்டிகள்  மாமா எல்லோரிடமும் பேசப் போவதாக கூற, பதிலுக்கு M2 “..................” என்றான். (நானும் வரவா என்று கேட்டான்).

"அம்மா அவனுக்கும் எல்லோரையும் பார்க்க ஆசையா இருக்காம் வர்றானாம்" எனவும் வர்ஷினி,"இரு உன் அப்பாகிட்ட பர்மிஷன் கேக்கணும்" என தன் கணவனுக்கு சிக்னல் அனுப்பி அனுமதி பெற்றாள்.

கிட்டத்தட்ட 1000 பூமியின் நாட்கள் (செவ்வாயில் ஒரு வருடத்திற்கும் மேல்) அங்கு ஆராய்ச்சி செய்ய வசித்து வருகிறார்கள் வர்ஷினி ப்ரித்வி. வர்ஷினி அங்குள்ள ஜீவ ராசிகள் பற்றி நிறைய தெரிந்து கொண்டிருந்தாள்.

அங்கு வசிக்கும் ஜீவ ராசிகள் செல் டிவிஷன் மூலம் இனப்பெருக்கம் செய்பவை. உறவுகள் என்றெல்லாம் கிடையாது. ஒவ்வொரு உயிரும் தனித்தனி..பூமியில் இருப்பது போல் விலங்குகள் பறவைகள் மனிதர்கள் என்று இல்லாமல் எல்லோரும் ஒரே மாதிரி ஆச்சு அசலாய் இருப்பார்கள். ஆண் பெண் வித்தியாசம் இல்லை. அவர்கள் கோடிங் முறை பின்பற்றுவதால் வர்ஷினி 1, 2 , 3 என எண்களால் அவர்களை அடையாளம் வைத்தாள்.

மனிதர்கள் போலவே அவர்களுக்கு உணர்வுகள் உண்டு. ஆனால் அன்பு, பாசம், நேசம், நட்பு, காதல் என இன்னதென்று உணரவில்லை அவர்கள்.. மற்ற கிரகங்களில் முக்கியமாக பூமியில் உயிர் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்யும் செயல் திறனும் உண்டு. மனிதர்கள் அங்கு வந்து வசிப்பதை வரவேற்றனர். மனிதர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அவர்களுக்கு உண்டு.

மகளுக்கும் சூட் அணிவித்து தங்கள் மார்ஸ் இந்தியா ஹோம் 5 சென்றனர். நமக்குத் தான் செவ்வாயில் நடமாட சிறப்பு உடை ஆக்சிஜன் தேவை படுகிறது. ஆனால் செவ்வாயில் வசிக்கும் ஜீவராசிகள் பூமியின் சூழலிலும் வாழ விசேஷ அமைப்பைப் பெற்று இருக்கின்றனர்.

"சாட்டிலைட் பப்பில்" என்பது ஒரு புறக் கதிரால் ஆன குமிழி. இதில் நுழைந்து பூமியோடு தொடர்பு கொள்ள முடியும். அதாவது ஒரு நீர்க்குமிழிக்குள் இருந்து பூமியில் இருப்பவர் எதிர் நின்று முகம் பார்த்து பேச முடியும். ஆனால் அது ஒரு பிம்பம்.

அதில் தான், தன் மகள் மற்றும் M2 நுழைய," நந்து பாத்தி, ரோஸி பாத்தி, சீனு தாத்தா,சந்து தாத்தா, ஹாரி மாமா" என எல்லோரையும் அழகாக தமிழில் அழைத்து வணக்கம் சொன்னாள் யாழினி.

"பாட்டி, மகள், பேத்தி மூன்று தலைமுறையிலும் "டா" தகராறு போல" என சீனு சொல்ல பின்னிருந்து நந்தினி அவனை செல்லமாய் அடித்தாள்.

"பாத்தி, சீனு தாத்தாவ அதிக்காத" எனவும் சீனு," என் செல்லக் குட்டி" என யாழினியை கொஞ்சினார்.

ஹாரி," வர்ஷு எப்படி இருக்க " என கேட்க," நல்லா இருக்கேன். பொங்கல் அண்ட் உன் கல்யாணத்திற்கு வருகிறோம். பர்மிஷன் கிடைச்சாச்சு" என உற்சாகமாக சொன்னாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருத்த M2 என்ன பேசிக் கொள்கிறீர்கள் என யாழினியிடம் தனது மொழியில் கேட்க அவள் தன் மாமாவிற்கு கல்யாணம் அதான் பூமிக்குப் போகிறோம் என்றும் தன்னை எல்லோரும் செல்லம் கொஞ்சியதையும் கூறினாள்.

செல்லம் என்றால் என்ன என M2 கேட்க, தன் கன்னம் கிள்ளி விரல்களை உதட்டில் வைத்து "உம்மா" என்றாள். அவள் முத்தத்தைத் தன் உறவுகளுக்குப் பறக்க விட M2 வும் அதே போல் செய்தான். ( ஆண் பெண் வித்தியாசம் இல்லை என்னும் போதும் பொதுவாக ஆண் பாலில் M2 வைக் குறிப்பிடுகிறேன்). உரையாடல் முடிந்து குமிழி மறைந்து போனது.

செவ்வாயில் உள்ள தனது பயோ லேபில் வர்ஷினி ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க அங்கு வந்த M24 தங்கள் கோடிங் மொழி மூலம் வர்ஷினி பூமிக்கு எப்போது செல்கிறாள் என கேட்டார். அவர் அங்கு பூமி வாழ் உயிரினங்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி.

வர்ஷினி இன்னும் 5 மார்ஸ் டேஸ் (அதாவது பத்து பூமி நாட்கள்) எனவும் தானும் M2 வும் உடன் வரலாமா எனக் கேட்டார்.

வர்ஷினி மிகுந்த சந்தோஷத்தோடு அதற்கு உண்டான ஏற்பாடுகள் செய்வதாக கூறினாள்.

"என் பூமி" என மண்ணை முத்தமிட்டனர் வர்ஷியும் ப்ரித்வியும். யாழினியும் அதைப் பின்பற்ற அவர்களைப் பார்த்த M2 வும் M24 ம் நமது பூமித்தாயை முத்தமிட்டனர்.

(இங்கும் கோடிங் மொழியில் வர்ஷினி மொழி பெயர்த்ததாக உரையாடலில் கற்பனை செய்து கொள்ளுங்கள்)

M2 வையும் M24 யையும் வரவேற்றனர் நந்தினி மற்றும் சீனு குடும்பத்தினர். எல்லோரும் சாப்பிட அமர ரோஸி ," இவங்களுக்கு என்ன உணவு கொடுப்பது " என அழகு தமிழில் கேட்டாள்.

"உணவாக செவ்வாயில் வசிக்கும் ஜீவன்கள் உட்கொள்வது நமது ஆக்சிஜனைத் தான்" என ப்ரித்வி கூற,"அவர்களைப் பார்க்க வைத்து எப்படி சாப்பிடுவது" என சந்தோஷ் வருந்தினான்.

மனிதர்களின் முக பாவனைகள் மாறுபடுவதைக் கண்ட M24 என்ன என கேட்க வர்ஷினி எடுத்துச் சொன்னாள்.

M2விற்கோ எல்லாம் புதுமையாக இருந்தது. மரம், செடி, பறவை, விலங்குகள் எல்லாமே. அதுவும் ஹாரி யாழினியை மடியில் தூக்கி வைத்துக் கொஞ்சுவதைப் பார்த்து தானும் அவன் மடியில் அமர வேண்டும் என கேட்டு அந்த ஸ்பரிசத்தை உணர்ந்தான்.

இதற்கிடையில்“M2”என்ன இப்படி கூப்பிட்டுக் கொண்டு.. அழகாய் தமிழில் தன் அப்பா, மாமா இருவரின் நினைவாக ராஜசேகர் என பெயர் வைத்து விட்டாள் நந்தினி.

யாழினி அதை M2 விடம் உன் பெயர் ராஜசேகர். ராஜா என்று கூப்பிடுவோம் என மகிழ்ச்சியாக சொல்ல M2 விற்கு சந்தோஷம் என்ற உணர்வு பிறந்தது.

M24ரும் வர்ஷினி குடும்பத்தினர் பொழிந்த அன்பு மழையில் பாசம் பந்தம் என்ன என்பதைப் புரிந்து கொண்டதாகக் கூறினார்.

திருமணத்திற்கு பாதுகாப்பின் காரணமாக இவர்களை அழைத்துச் செல்ல அனுமதி இல்லை என்பதால் அவர்களை ஆராய்ச்சி நிலையத்தில் விட்டு விட்டு திருமண ஏற்பாடுகளில் மூழ்கினர்.

புறப்படும் நாள் வர M2 விற்கும் M24 க்கும் கிளம்ப மனம் இல்லை. இந்தப் பிரிவென்னும் உணர்வையும் உணர்ந்தார்கள். “எங்களோடு சில நாள் இங்கு தங்கிருந்து எங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாமே” என ஹாரி கூற வர்ஷினியும் அதை M24யிடம் கூறினாள். இதைக் கேட்ட M24, M2 இருவருக்குமே மகிழ்ச்சி.

வர்ஷினி உடனே இதை ஆராய்ச்சி நிலையத்தில் தெரிவித்தாள்.

அனுமதி கிடைத்ததும் இல்லாமல் வர்ஷினி ப்ரித்வியும் தங்கள் குடும்பத்தில் M2, M24 இருவரையும் இணைத்துக் கொண்டு இங்கேயே தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளலாம் என உத்தரவு வந்து விட அங்கு எல்லோருக்கும் குதூகலம். அதை தாங்களும் வரவேற்றது போல் பறவைகள் சங்கீதம் பாட மரங்கள் தலையசைத்து பூமழை தூவின.

அன்று ஊரில் தொடங்கி, இன்று கண்டம் தாண்டி, நாளை வேற்று கிரகத்திலும்....எனது வீடு, எனது சொந்தம் என்று வாழாது, ஊர்,உலகு மட்டுமல்ல, பிரபஞ்சமே நம் குடும்பம் என அன்போடு சொந்தமாய் அரவணைக்கும் நம் தமிழ் பண்பாடு.

          "யாதும் ஊரே யாவரும் கேளிர்"

This is entry #22 of the current on-going short story contest Please Visit Contest Page to know more about the contest.

        

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.