(Reading time: 26 - 51 minutes)

ன்ன நொன்னண்ணே..??... மனுஷன் பல தலைமுறையா  வேட்டையாடிதான் வாழ்க்கை நடத்தினானாம்... அப்படி வேட்டைக்கு போறது பெரும்பாலும் ஆம்பிளைங்க வேலையா இருந்திருக்குது.... அந்த வேட்ட புத்தி இன்னும் ரத்தத்துல இருக்குது.... அதான் ஜீன்னு சொல்றாங்களே அதுல வருது போல.... எதாவது ஒன்னு அந்த வேட்ட புத்திய சீண்டி விட்டுதுன்னா...அத அடையாம சும்மா இருக்க முடியல இன்னும் இந்த ஆம்பிள்ளைங்களுக்கு.... அவ கிறிஸ்டி  முதல்ல உனக்கு கிடைக்கமாட்டான்னதும் உனக்குள்ள அந்த வேட்ட புத்தி.... அவள அடஞ்சே தீரனும்னு கொம்பு சீவிருக்கும்.... அதான் அவளை துரத்தி இருக்க.... அப்ப அவ கிடைக்க போற மாதிரி உனக்கு கிடச்ச சின்ன அறிகுறிகளும் பெரிய ஆனந்தமா  இருந்திருக்கும்.... கிடைக்க மாட்டாளோன்னு தோணுறப்ப ரொம்ப மன வேதனையா ப்ரெஷரா தோணி இருக்கும்.... அத காதல்னு தப்பா புரிஞ்சிகிட்ட.... அந்த வேட்ட புத்தி உன்னை விஷம் குடிக்க வரைக்கும் வச்சிருக்குது... அப்புறம் அவ கிடச்சவுடனே.... மனச பொறுத்த வரைக்கும் வேட்டை முடிஞ்சாச்சு.... எந்த தேடலும் ஓடலும் இல்ல.... முன்னால சந்தோஷமா தெரிஞ்ச சின்ன விஷயங்கள் இப்ப சப்புன்னு தெரியும்... அதான் உன் காதல் கலர் போக காரணம்... அவளுக்காக சாக கூட துணிஞ்சவன்னு நினைச்சு உன்ன சந்தோஷமா கல்யாணம் செய்து வந்திருப்பா கிறிஸ்டி.. இப்ப அவ கேட்டாங்கிற ஒரே காரணத்துக்காக அது நியாயமான விஷயமா இருந்தா கூட செஞ்சு தரமாட்டேன்னு சொன்னா அவளுக்கு வலிக்காம என்ன செய்யும்.....?”

“.................”

“கிறிஸ்டி பார்க்க இன்னும் சின்ன பிள்ளையாதான் தெரியுறா...பேசாம அவளுக்கு இன்னொரு  மாப்பிள்ள பார்ப்போம்...”

“அண்ணா...!!!!!”

“பிறகு....? நீயும் வேற கல்யாணம் பண்ண மாட்ட....அவளும் வேற யாரையும் பண்ணகூடாது....இதுக்கு பேரு என்னடா...?”

“கல்யாணத்துக்குள்ள காதலுக்கு நிறம் மனமெல்லாம் கிடையாது...இப்படித்தான் இருக்கும்....போய் அவட்ட பேசி கூப்பிட்டுட்டு வர வழிய பாரு....அவ அப்பா சின்ன வயசுல அவ அம்மாவ விட்டுட்டு போன மாதிரி இப்ப நீயும் விட்டுட்டு போறன்னு தான அவளுக்கு இருக்கும்.....”

“ம்...சாரி அண்ணா....”

“ நீ உன் வீட்டுகாரிய எப்படி வச்சுகிடுறியோ அப்படிதான்டா உன பிள்ளைகள அவங்கள கட்டிகிறவங்களும் வச்சுபாங்க.... எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் அளக்கபடும்னு கேட்டதில்ல....”

“இன்னைக்கே கிறிஸ்டி வீட்டுக்கு போறேண்ணா...”

“ஏய்...அது கிறிஸ்டி அம்மா வீடுடா....உன் வீடுதாண்டா கிறிஸ்டி வீடும்....”

“ம்...ஆமாண்ணா...”

“ஹஃஸ்பண்ட் அன்ட் வைஃப் தலையும் உடம்பும் மாதிரி...தலை சொல்றதுக்கெல்லாம் உடம்பு ஆடனும்னா.... உடம்பு தான் தேவைன்னு எதலாம் சொல்லுதோ அதை தலை புரிஞ்சி அதுக்கு ஏத்த மாதிரி முடிவெடுக்கனும்...... ஒருத்தர் இல்லாம ஒருத்தர் கிடையாது....  தன் மனைவியை நேசிக்கிறவன் தன்னில் தானே அன்பு கூறுகிறான்னு பைபிள்ள இருக்கு....... இதுல அவ கேட்டதை நீ செஞ்சு கொடுத்தா நீ அவளை விரும்புறன்னு தான் அர்த்தம்... கண்டுகாம போறவந்தான் டம்மி பீஸ்..... அவ நியாயமில்லாம எதாவது கேட்டான்னா...அப்ப நோ சொல்லு...எனிவே நல்லா ஜெபம் பண்னிகோ... இந்த புத்தி மாறனும்னு...”

சித்தி வாழ்க்கை சீராகிவிடும் என்று நம்ம்பிக்கை வந்திருந்தது மஹிமாவிற்கு. ஆனால் அவள் காதலை குறித்துதான் பல கேள்விகள்.

நவீன் உண்மையில் காதலிக்கிறானா? அல்லது இது சீண்டிவிடப்பட்ட வேட்டை புத்தியா?

றுநாள் நவீனை சந்தித்தவள் முடிவாக சொல்லிவிட்டாள் “ நான் கோர்ஸ் முடிச்சதும் பொண்ணு கேட்டு வாங்க.... நான் காத்துகிட்டு இருப்பேன்.... பட் அதுவரைக்கும் நமக்குள்ள எந்த கம்யூனிகேஷனும் வேண்டாம்.... திரும்ப சென்னைக்கே போயிடுங்க...”

அவனுடைய எந்த கெஞ்சலுக்கும் இளகவில்லை அவள்.

“இனி நான் கோர்ஸ் முடிக்க முன்ன நீங்க என்ன பார்க்க ட்ரை பண்ணுணீங்கன்னா உங்க இன்டென்ஷன் காதல் இல்ல....”

திரும்பி வருவேன் என்று சத்தியம் செய்துவிட்டு சென்றான் நவீன்.

அதுதான் அவள் அவனை கடைசியாக சந்தித்ததும். அவளுக்கு நவீன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வந்திருந்தது.

ரண்டு வாரம் கடந்திருந்தது. தொலை காட்சியில் சுவாரஸ்யமின்றி நியூஃஸ் பார்த்துக் கொண்டிருந்தாள் மஹிமா.

பல பெண்களிடம் பல்வேறு நாடகமாடி கடத்தி சென்று விபசாரத்திற்கு விற்ற ஒருவனை கைது செய்திருந்தது காவல் துறை. காட்சி தொகுப்பில் அந்த கயவனை காண்பித்தார்கள். அவன் நவீன்.

எந்த தழும்பும் இல்லை அவன் முகத்தில். அப்படியானால்...?????

இவளது பணத்திற்காக குறிவைத்தானா? அல்லது இந்த ஈனத்திற்கா? கோயம்புத்தூர் என்றவன் பின் சென்னை என்றானே..... எந்த அலுவலகத்தில் தினம் மாலை 3.30க்கு வீட்டுக்கு செல்ல அனுமதிக்கிறார்கள்? தினமும் அந்நேரம் முதல் இவள் கல்லூரி வாசலில் தவம் கிடந்தானே... எத்தனையோ புரிந்தது மஹிமாவிற்கு.

சில மாதங்கள் தேவைப்பட்டது மஹிமாவிற்கு. அந்த அதிர்ச்சி, பயம், குழப்பம், ஏமாற்றம் எல்லாவற்றிலுமிருந்து மீண்டு சற்று இயல்புக்கு வர.

படிப்பு முடிய வீட்டில் திருமண பேச்சு. ஆசிட் வார்ப்புகளாய் உணர்ந்தாள் அவைகளை. முதலில் தவிர்த்துப் பார்த்தவள் மெல்ல சம்மதித்தாள்.

தோ திருமணம் முடிந்து முதலிரவு அறை. சில மணி நேரம் முன்பு கணவன் என கைபிடித்து உறுதி மொழி எடுத்த அந்த வினோத்.

மென்புன்னகை இவளது பார்வைக்கு பதிலாக. உள்ளே நுழைந்த இவளிடமாக வந்தான் அவன். சில நொடி இவளுக்கு என்ன செய்ய வேண்டும் எப்படி உணர வேண்டும் என்றே புரியவில்லை.

கைபிடித்து அழைத்து சென்று படுக்கையில் அமர்த்தி அருகில் அமர்ந்தான்.

“நீ ரொம்ப கலகல டைப்னு முன்னால நினைப்பேன்....ஆனா நம்ம கல்யாணம் ஃபிக்ஸ் ஆனப்பிறகு பேச டிரை பண்ணப்பல்லாம் நீ சரியா பேசுன மாதிரியே இல்ல... எப்படியும் தூரத்துல இருந்து பார்கிறதுக்கும் நிஜத்துக்கும் வித்யாசம் இருக்கும்தானே...”

“ஏதோ எங்கோ நெருடியது. அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன சொன்னீங்க...? உங்களுக்கு முன்னமே என்னை தெரியுமா...?”

மென்மையாக புன்னகைத்தான்.

“ம்....உன்னை ஃபர்ஸ்ட் டைம் அல்லி குளத்துல ஒரு மேரேஜ்ல தான் பார்த்தேன்.”

கொதி அமிலம் கொட்டியது அவளுள். அவள் மொத்தத்தில் அல்லிகுளத்தில் கலந்துகொண்ட கல்யாணம் அந்த ஒரே கல்யாணம் தான். அங்கு இவனும்....

“பார்த்ததும் உன்னை ரொம்ப பிடித்தது. பரிச்ச வச்ச ரோஜாப்பூ மாதிரி.....ஒரு இன்னொசன்ஸ்சோட.... மண் தொடாத மழை தூரல் போல...”

“ஸ்டாப் இட்......ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்....!!!”

அலறினாள் மஹிமா.

“ஹேய்...என்னடா...என்னாச்சு...எதுனாலும்...மெதுவா மெதுவா....வெளிய ஆள் இருக்காங்கடா....”

“ஷட் அப்...என்ன டா...டீன்னு கொஞ்சல் வேண்டி கிடக்கு....”

“என்னமா....சாரி என்ன மஹிமா....என்ன ப்ரச்சனைனு சொல்லு....சொன்னாதான புரியும்”

உள்ளிருந்த உட்காயமும், ஏமாற்றமும், மீண்டும் ஏமாந்துவிட்டோம் என்ற பயமும் பரிதவிப்பும் சேர்ந்து நடந்த அனைத்தையும் அவனிடம் சொல்ல வைத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.