(Reading time: 23 - 46 minutes)

ந்தக் குரலைக் கேட்டதும் போதும், படுக்கையலிருந்து எகிறி குதித்து ஓடினேன்.  

அப்பா மடியில் அந்தப் பையுடன் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தார்.

பையைப் பிரித்தார். கண்கள் விரிய அதையே பார்த்தேன்.

பைக்குள் அவரது வாட்ச்மேன் யூனிஃபார்ம் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.அதை வெளியே எடுத்துப் போடவும் அந்தப் பையே காலியானது. எனது நம்பிக்கையும் தான்.

“இந்தா..சட்டைய மட்டும் தொவச்சுரு..பேன்ட் இன்னொரு தடவைக்குப் போட்டுக்கலாம்” என்று அம்மாவிடம் சொன்னார்.

“இந்தாடா..” என்று பைக்குள்ளிருந்து ஒர் எண்ணையில் ஊறியிருந்த ஒரு செய்தித்தாள்  பொட்டலத்தை எடுத்து நீட்டினார். வாங்கிக் கொண்டேன்.

“பஜ்ஜி வேணும்னு கேட்டியே,,அதான்” என்று சொல்லிக்கொண்டே அந்தப் பெரிய பாலிதீன் கவரை மடித்தார். என் ஆசைகளும் அதனோடே மடிந்தன. பட்டாசுமில்லை, புதுத்துணியுமில்லை.

கண்ணில் நீர் துளிர்த்துத் திரண்டது. பொட்டலத்தில் ஒரே ஒரு வாழைக்காய் பஜ்ஜி இருந்தது தேங்காய் சட்னியுடன்.  கண்ணீரை அப்பா பார்த்து விடக் கூடாது என்பதால் பஜ்ஜியை முகர்வது போல அந்த பொட்டலத்தை முகத்தருகே வைத்து மறைத்து கொண்டே,திரும்பி படுக்கை அரைக்கு வந்து கட்டிலில் சரிந்தேன்.

அந்த சில நொடிகள் அடக்கி வைத்திருந்த அழுகையும் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. கண்ணீர் பிரவாகம் எடுத்தது. சத்தம் வராமல் விம்மி விம்மி அழுதேன். ஜன்னல் வழியே அந்த பஜ்ஜியை தூக்கி எறிந்தேன்.

“டேய்,,வந்து சாப்புடு டா..சாப்புடுற நேரத்துல கண்டதையும் திங்காத. வா” என்றாள் அம்மா.

இந்த நிலையில் எங்கே எனக்கு பசிக்கப் போகிறது? அப்பாவின் திட்டுக்கு பயந்து சாப்பிட வேண்டியதாய் இருக்கிறது.

“ம்ம்..வரேன்” என்று சொல்லக் குரலெடுத்த போது, என்னையும் மீறி விம்மி விட்டேன்.

“என்னடா” என்றாள் அம்மா.

வாயைப் பொத்திக் கொண்டுவிட்டேன்.

“ஒன்னும் இல்லமா..விக்கல்” என்று சொல்லிவிட்டு, மேலும் இரண்டு போலி விக்கல்களை வரவழைத்தேன்.

“வந்து தண்ணியக் குடி” என்றாள்.

 கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு, கண்களத் துடைத்துக்கொண்டு வெளியே சென்றேன்.

ருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். நானும் உட்கார்ந்து சாப்பிடத் துவங்கினேன். கண்ணீர்த் தடம் தெரிந்து விடக் கூடாதென ,முகம் தெரியாதவாறு,நன்றாகக் குனிந்து குனிந்து சாப்பிட்டேன்.

“திருட்டுப் பசங்க.லட்ச லட்சமா சம்பாரிக்குறானுக. ஆனா அவிங்களுக்கு ஒழைக்குற ஆளுகளுக்கு ஒரு ஆயிரம் ரெண்டாயிரம் குடுக்க காசில்லையாமா. எல்லாம் அந்த சாமிக்கே பொறுக்காது” எனறார் அப்பா.

“சரி விடுங்க. என்னா பண்றது? சம்பளத்தையாவது குடுக்குறானுங்களே. இல்லைன நம்ம பொழப்பு அவ்ளோ தான்” என்று அம்மா வருந்திக் கொண்டாள்.

அதற்குபின் யாரும் எதுவும் பேசவில்லை.

அப்போது தூரத்தில் யாரோ எங்கேயோ ஒரு வெடியை வெடித்தார்கள் போல. சத்தம் காதைப் பிளந்தது.

“அட்த்தூ...அறிவுகெட்ட மூதேவிக.. இந்நேரத்துக்குத்தா வெடிக்கனுமா? மனுச நிம்மதியா ஒரு நிமிஷம் இருக்க முடியுதா? ஒரு நூறு ரூவா காசு சம்பாரிக்க உசுரு போய் உசுரு வருது. ஆனா இவிங்க நூறு நூறா வெடி வாங்கிக் கரியாக்குறானுக” என்று அப்பா பொங்கினார்.

அந்த வார்த்தையிலேயே உறுதியாகி விட்டது நாளைக்குப் பட்டாசும் கிடையாதென்று.

வேக வேகமாக சாப்பிட்டுவிட்டு,நேராக ஓடிப் போய் கட்டிலில் விழுந்தேன். ஒரு போர்வையை இழுத்து முகத்தை மூடிக் கொண்டு அழத் தொடங்கினேன்.  என் வேதனை முழுவதும் கரைந்து கண்ணீராய்ப் பெருகியது. யார் யாரையோ திட்டினேன். பணக்கார வீட்டில் பிறந்ததற்காக சங்கரனையும், ஏழை வீட்டில் பிறக்க வைத்ததற்காக பிள்ளையார் சாமி என எல்லோரையும் திட்டினேன்.அந்த வரிசையில் அப்பா மனதில் தோன்றினார்.

‘அய்யோ..அப்படி நினைப்பது தப்பு. அப்பா இல்ல. நல்லவரு. எல்லாம் அந்த சாமி தான்”என சொல்லிக்கொண்டே திட்டி அழும் படலத்தைத் தொடர்ந்தேன்.

அப்போது வெளியே படிக்கட்டில் உட்கார்ந்து அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

“இன்னிக்கு சாயங்காலம் பூரா அந்த சங்கரு பையன் புதுத் துணி வாங்கிருக்கான்,பட்டாசு வாங்கிருக்கான்னு எங்கிட்ட சொல்லிக்கிட்டே இருந்தான். பாவம். நீங்க வரும் போது ஏதாச்சும் வாங்கிட்டு வருவிங்கனு பாத்துட்டே இருந்தான் போல”

‘இந்தத் தீவாவளி,பொங்களெல்லாம் காசிருந்தாத்தான். நமக்கு திங்க மூனு வேளை நல்ல சோறு கிடைச்சாலே அன்னைக்கு தீவாவளி தான். இவன் வயசுல நானெல்லாம் ஓரு வேளை சோறு தின்னுட்டு ஒரு நாள் பூரா மாடு மேச்சுக்கிட்டுத் திரிஞ்சேன். ஏதொ இப்போ அந்தக் கொடுமையில்லனு சந்தோசப் படு.நானும் என்ன வச்சுகிட்டா இல்லேங்குறேன். இருந்தா எதுனாலும் செய்யலாம் புடிக்கலாம். இல்லாட்டி இருக்குறத வச்சு நிம்மதியா இருக்கப் பழகிக்கனும். நானும் ஒரு ஐனூறு ரூவாய் நாலஞ்சு பேருகிட்ட கேட்டுப் பாத்தேன். எங்கயும் கெடைக்கல. எல்லாம் தலையெழுத்து” என்றார் அப்பா.

“நமக்கு புரியும். ஆனா அவ வயசுப் பசங்களோட சுத்தும் போது,அவனுக்கும் ஆசையாத் தான இருக்கும். ஒரு முன்னூறு ரூவா இருந்திருந்தாக் கூட ஒரு ரெடிமேடு துணி எடுத்திருக்கலாம். “ இது அம்மா.

“இப்பத் தான் குமாரு கல்யாணத்துக்கு எடுத்தோ. ரெண்டு மாசந்தான ஆச்சு. அதயே போட்டுவுடு. புதுசாத்தா இருக்கும்.. இந்த தங்கராசு வந்தானா? மொதலாளி தேடிக்கிட்டு இருக்காரு” என்று பேச்சை மாற்றிவிட்டார் அப்பா. அம்மாவும் அதற்கு மேல் ஏதும் முயற்சிக்கவில்லை. அன்றைக்கு அப்பாவை விட அம்மாவைப் பிடித்தது.

பின் அவர்களின் பேச்சை கவனிப்பதில் எந்தப் ப்ரயோஜனமுமில்லை என்று ஆனதும், திரும்பி சுவரை பார்த்துப் படுத்துக் கொண்டே யோசிக்கத் துவங்கினேன். இப்போது பிரச்சினை துணியும் பட்டாசும் இல்லை என்பதல்ல. ஏமாற்றமும் ஏக்கமும் பழகிப்போனவைகள் தான். ஆனால் நாளைக்கு இந்த சங்கரனிடம் என்ன சொல்லி சமாளிப்பது? காலையில் எட்டு மணிக்கெல்லாம் வந்துவிடுவானே. புதுசு போடலயா? பட்டாசு எங்கே? என பல கேள்விகள் கேட்பானே. வாங்க காசில்லை என்று சொல்ல அவமானமாக இருக்குமே. என்ன சொல்வது? என்ன சொல்வது? என்ன சொல்வது?

அந்தக் கேள்வியை எத்தனை முறை என்னை நானே கேட்டுக் கொண்டேனோ தெரியவில்லை. அப்படியே தூங்கிப்போனேன்.

“தடார்” என்ற காதைப் பிளக்கும் ஓசை கேட்டு திடுக்கிட்டு கண்விழித்தேன்.

வானம் லேசாக வெளுத்திருந்து. வந்துவிட்டது அந்த தீபாவளி.

‘சங்கரன் வெடிச்ச வெடியா இருக்குமோ? இவ்வளவு சத்தமா வெடிக்குதே..அய்யயோ.. இப்போ அவன் வருவானே? என்ன சொல்லப் போறேன்?” கவலை மனதைப்பற்றிக் கொள்ள, மெதுவாய் படுக்கையை விட்டு எழுந்தேன்.

ஜன்னலின் வழியே எட்டிப் பார்த்தேன். வெட்டவெளியான பரந்த பசுமையான நிலப்பரப்பு. கண்ணுக்கெட்டும் தூரம் வரை எங்கும் வீடில்லை. அவ்வப்போது மின்னல் வெட்டிக்கொண்டிருந்தது.

அம்மா வாசல் பெருக்கும் சத்தம் சத்தம் ‘சரக் சரக்’ என கேட்டுக்கொண்டிருந்தது. பக்கத்தில் படுத்திருந்த அப்பாவைக் கடந்து வெளியே சென்றேன்.

‘என்னடா அஞ்சரைக்கே எந்திருச்சிட்ட?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.