(Reading time: 23 - 46 minutes)

ட்டு வீடு அங்கங்கே ஒழுகியது. கட்டில் போட்டிருந்த இடத்தில் கொஞ்சம் அதிகமாகவே ஒழுகியதால் அதை நகர்த்தி கதவுக்கருகே போட்டார் அப்பா. நான் படுத்துக்கொண்டேன். அம்மாவும் அப்பாவும் என் பக்கத்தில் உட்கார்ந்து மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டு பழைய கதைகளை பேசிச் சிரித்துக் கொண்டனர். அது மனதிற்கு இதமாக இருந்தது. இப்படி மூன்று பேரும் நெருங்கி உட்கார்ந்து எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டது. தாயோடே ஒட்டித்திரியும் ஒரு கங்காருக் குட்டியைப் போல பாதுகாப்பாய் உணர்ந்தேன். அந்த சந்தோசத்திலேயே திளைத்து அப்படியே தூங்கிவிட்டேன்.

கண்விழித்த போது மணி மாலை ஐந்து. தீபாவளி கிட்டத்தட்ட முடிந்து போயிருந்தது. முகத்தைக் கழுவிக்கொண்டு தெருவுக்கு வந்தேன். பாதம் மூழ்கும் அளவு தண்ணீர் தேங்கி நின்றது.

இந்த சங்கரன் எங்கே? பட்டாசெல்லாம் வெடித்து முடித்திருப்பானோ? மழை வராமல் போயிருந்தால் நிச்சயம் வந்து கூப்பிட்டிருப்பான். நல்ல வேளை மழை வந்து காப்பாற்றியது. இனி கவலை இல்லை. அவன் வர மாட்டான். நாளைக்குக் கேட்டால் பட்டாசு வெடித்ததாக சொல்லி நம்ப வைப்பதில் ஒன்றும் சிரமமிருக்காது. பிள்ளையாருக்கு நன்றி சொல்லிக்கொண்டேன்.

கட்டுத்தறியில் கட்டப்பட்டிருந்த ஆட்டுக்குட்டி பசியால் கத்தியது. அதனருகில் சென்று அன்பாகத் தடவிக் கொடுத்து முத்தமிட்டேன். புல்லை அள்ளிப் போடவும் தின்னத் தொடங்கியது. மேலும் கொஞ்ச நேரம் வாஞ்சையோடு அதைக் கொஞ்சி நேரத்தைப் போக்கினேன்.

மாலை நேர இருள் லேசாகப் பரவத்தொடங்கியது. சமையலறைக்குள் போய் இன்னும் இரண்டு முறுக்குகளை எடுத்துக் கொண்டு கட்டிலுக்குப் போய் படுத்துக்கொண்டே கொறித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது “கார்த்தி...சங்கரு வீட்டுக்கு போய் பால குடுத்திட்டு வந்துரு” என்றாள் அம்மா.

என்னது? சங்கர் வீட்டுக்கா? அய்யயோ! பதற்றம் கவ்விக்கொண்டது. வழக்கமாக நான் தான் அவர்களின் வீட்டுக்கு பால் கொண்டு செல்வேன். அப்படியே ஒரு ஒரு மணி நேரம் அவனோடு பேசிவிட்டு வருவேன். ஆனால் இன்றைக்கு?? போனால் அவன் தீபாவளியை பற்றித் தானே பேசுவான். போகக் கூடாது.

“என்னடா? சொன்னது காது கேக்கல?”

“அம்மா,,கால் வலிக்குதுமா..நான் போகலமா” என்றேன் கெஞ்சலாக.

“அடி வாங்காம போயிட்டு வந்துரு” காட்டமாக ஒரே பதில்.

கிளம்பிவிட்டேன் பால் கேனுடன்.

எங்களின் வீடுகளுக்கு இடையேயான அந்த இருநூறடி தூரத்தை மெதுவாகக் கடந்தேன். பல திட்டங்களையும்,பொய்களையும் தயார் செய்ததது மனது. அவற்றில் ஒன்றை முடிவு செய்வதற்குள் அவன் வீட்டை அடைந்து விட்டேன்.

வாசலிலிருந்து எட்டிப் பார்த்தேன். யாரையும் காணோம். அவனுக்குத் தெரியாமல் அவனது அம்மாவிடம் பாலைக் கொடுத்துவிட்டு ஓடிவிடலாமென முடிவெடுத்தேன். அப்போது உள்ளே இருந்து சங்கரனின் அழுகுரல் கேட்டது.

‘இவன் எதுக்கு அழுறான்? மழை பேஞ்சதால பட்டாசு வெடிக்க முடியாம போயிடுச்சுனு அழுறானோ?’ யோசித்துக்கொண்டே குரல் கேட்ட திசையில் நடந்தேன்.

அங்கே ஹாலில் தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்தான். பக்கத்தில் அவனது அம்மா.

என்னைப் பார்த்ததும்,’வா கார்த்தி,,எங்க இன்னும் பாலக் காணோம்னு பாத்தேன். இவனப் பாரு. நாலு மணிலேருந்து ஒரே அழுக.” என்றார்.

“என்னடா ஆச்சு?” என்றேன்.

“பட்டாசப் பூரா பீரோ மேல கொண்டுபோய் வச்சிருக்கான். மழ பேய்ஞ்ச போது ஓட்டு வழியாத் தண்ணி எறங்கி பூராப் பட்டாசும் ஊறிப் போச்சு. இவன அங்க யாரு வெக்க சொன்னாங்க? நாளைக்கு வேற வாங்கிக்கலாம்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்குறான். சரி பேசிட்டு இருங்க..போகும் போது பால் கேன கையோட வாங்கிட்டே போயிடு” என்று என் கையிலிருந்த பால் கேனை வாங்கிகொண்டு உள்ளே சென்றார்.

எனக்கு உண்மையில் அதை கேட்டதும் மனதிற்குள் சொல்ல இயலாத ஆனந்தம்.  சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு அவன் பக்கத்தில் அமர்ந்தேன்.

“டேய் விடுடா...நாளைக்கு வெடிக்கலா. இல்லேனா கார்த்த்திக தீபத்துக்கு வெடிக்கலா. இன்னிக்கு இல்லேனா என்ன?” என்றேன்.

அவன் அழுகை நின்றபாடில்லை.

“அழுகாதடா..வேற வெளாட்டு ஏதாது ஆடலாம். பட்டாசு வருச வருசம் வெடிச்சிட்டுத் தான இருக்கோம்”

“போடா..நீயெல்லா நல்லா வெடிச்சிருப்ப,.நா மட்டும் “ என அழுகயைத் தொடர்ந்தான்.

பக்கத்தில் நனைந்த பட்டாசுப் பெட்டி கிடந்தது. ராக்கெட் ஊறிப் போய் சுருண்டு கிடந்தது.

“டேய்.. உனக்கொன்னு தெரியுமா? நேத்து எங்கப்பா நூத்தம்பது ரூவாய்க்கு பட்டாசு வாங்கிட்டு வந்தாரு. நானும் இதே மாதிரி பரண் மேல வச்சிருந்தேன். இப்போ சாயங்காலம் பாத்தா பூராமே மழையில வீணாப் போச்சு. எல்லாத்தயும் தூக்கி எறிஞ்சிட்டு நேரா உன்னப் பாக்க வந்தா, நீ இங்க அழுதுட்டு இருக்க” என்றேன்.

“நெஜமாவா?” என்றான் மலர்ச்சியாக.

“பின்ன? அவ்வளவு வெடியையும் தூக்கி போட்டுட்டுத் தான் வரேன். நமக்கு இன்னிக்கு நேரம் நல்லால டா.”

இதைக் கேட்டதும் இன்னும் கொஞ்சம் ஆறுதல் அடைந்தான். கண்களைத் துடைத்துக்கொண்டான். நம்பிவிட்டான். எனக்கும் உள்ளூர ஒரு மகிழ்ச்சி. ஒரு வாரமாய் உறுத்திய மனபாரம் நீங்கியது. உற்சாகமானேன். அவனும் ஓரிரு நிமிடங்களில் சகஜமானான்.

அவன் “சரி,,துப்பாக்கி இருக்கு. திருடன் போலிஸ் வெளையாடலாமா? ஆமா..உன்னோட துப்பாக்கி எங்க?” என்றான்.

“ம்ம்..அது...ஆ..அதான் நீ துப்பாக்கி வாங்கிட்டியே.. ரெண்டு பேர் கிட்டயும் துப்பாக்கி இருந்தா ரெண்டு பேரும் போலிஸ் ஆயிருவோமே. அப்புறம் திருடனுக்கு என்ன பண்றது. அதான் துப்பாக்கி வேணாம்னு அப்பாகிட்ட சொல்லிட்டேன். அடுத்த தீபாவளிக்கு நான் போலிஸ்,நீ திருடன். ஓ.கே?” என்றேன்.

“ம்ம்,,ஓ,கேடா.. இப்போ நான் தான் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் பாண்டியன்..” என்று துப்பாக்கியை என் நெற்றியில் வைத்தான்.

“சார்,,என்ன சுடாதிங்க சார்” என்று இரண்டு கைகளயும் மேலே உயர்த்துவது போல தூக்கி, அவன் வயிற்றில் மெதுவாக குத்தினேன். அவன் பறந்து போய் விழுந்தான்.

“இப்போ என்னய புடிடா போலிஸ்காரா..ஹஹா” என்று சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தேன்.

“டேய் திருடா நில்லு” என்று கத்தியபடியே துரத்த ஆரம்பித்தான்.

வீட்டிலிருந்து வெட்டவெளிக்குத் தாவினோம்.

“டேய்,,ஓடாதிங்கடா..கார்த்தி,,இந்தாட பால் கேனு”  அவன் அம்மாவின் கூச்சலை சட்டை செய்யாமல் ஓடினோம்.

“யேய்ய்ய்ய்ய்” எனக் கத்திக் கொண்டே தேங்கியிருந்த தண்ணீர் குட்டையைத் தாண்டினேன். கால்கள் சக்கரமாய் சுழன்றன. இனம்புரியாத சந்தோஷத்தில் மிதந்தபடியே ஓடினேன்.

அன்று பெய்த மழைக்கு நன்றி சொல்லியபடி ஓடினேன்.

மனதைப் பீடித்திருந்த சோகமெல்லாம் பறந்து போக, ஆனந்தமாக குதித்து குதித்து ஓடினேன்,

பின்னால் சங்கரனின் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் என்னை நெருங்கியது

அடுத்த தீபாவளிக்கு எப்படியும் போலிஸ் ஆகிவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் இன்னும் வேகமாக ஓடினேன்...

டார் படார்” என சரவெடி காதைப் பிளந்தது. என் வீட்டுப் போர்டிகோவில் நின்றுகொண்டிருந்த நான் அந்தப் பழைய நினைவுகளிலிருந்து மீண்டேன். முப்பது ஆண்டுகள் எவ்வளவு சீக்கிரம் கடந்து விட்டது என்று எண்ணும் போது வியப்பாக இருந்தது.இன்று நான் சென்னையில் ஒரு பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக இருக்கிறேன்.

என் செல்ஃபோன் ஒலித்தது. “சங்கர் காலிங்” என்று காட்டியது. அந்த சங்கரன் இப்பொழுது சங்கர் ஆகியிருக்கிறான்.

“ஹாப்பி தீவாளி கார்த்தி” என்றான்.

“ஹய்,,,தேங்க்ஸ்டா சங்கர்..சேம் டூ யூ..ஹவ் ஆர் யூ?” எனத் தொடங்கி பத்து நிமிடம் பேசிவிட்டு  திரும்பி வந்தேன்.

ஹாலில் என் எட்டு வயது மகனும் ஆறு வயது மகளும் டி.வி பார்த்துக்கொண்டிருந்தனர்.

“இப்போ வரப்போறீங்களா? இல்ல நானே எல்லா க்ராக்கர்ஸையும் வெடிக்கவா?” என்று அவர்களை நோக்கி உரக்க கூப்பிட்டேன்.

“அடப் போங்க டாடி,, டி.வில ஐ பட ஆடியோ லான்ச் போட்ருக்காங்க. நாங்க வரல. க்ராக்கர்ஸ் எல்லாம் போர். வாங்க வேண்டானு சொன்னாக் கேக்காம வருஷ வருஷம் வாங்கிட்டு வந்து நீங்களே தான் வெடிக்கிறிங்க” என்று அலுத்துக் கொண்டான் மகன்.

“அடப் போங்கடா,,நீங்களும் உங்க டி.வியும்” என நினைத்துக்கொண்டு, வாசலுக்கு வந்து, ஒரு ராக்கெட்டை கொளுத்தினேன்.

‘ஸ்ஸ்ஸ்” என சீறிப்பாய்ந்து ,உயர உயரப் பறந்து பூக்கோலமாய் வெடித்துச் சிதறியது.

அதைக் கண்டு பூரித்தேன். எனக்குள் இருக்கும் அந்த மூன்றாம் வகுப்பு கார்த்தி, இந்த ராக்கெட் மூலமாக போலிஸைத் தாண்டி ஒரு மிலிட்டரி ஆஃபிஸர் ஆன சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.