(Reading time: 23 - 46 minutes)

தூக்கம் தெளிஞ்சிருச்சுமா.. “ சொல்லிவிட்டு சங்கரன் வீட்டைப் பார்த்தேன். இருன்டிருந்தது. யாரும் இன்னும் எழவில்லை. எழாமலேயே இருந்தால் பரவாயில்லையெனத் தோன்றியது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் மூன்று பேரும் குளித்து முடித்து சாமி கும்பிட்டு முடித்துவிட்டோம்.

அப்பா என் நெற்றி நிறைய ஒரு பட்டை போட்டு விட்டார்.

அம்மா பரணில் வைத்திருந்த பெட்டியை இறக்கி அதிலிருந்து என் புதுத்துணியை எடுத்தாள். அதாவது அப்பா சொன்ன அந்த குமார் கல்யாணத்திற்காக எடுத்தது. இதுவரை இரண்டு தடவை போட்டிருக்கிறேன்.அந்த இரண்டு தடவையும் சங்கரன் என்னைப் பார்க்கவில்லை என்பது மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. புதுசு என்று சொன்னால் நம்ப வாய்ப்பிருக்கிறது.

கண்ணாடி முன்னால் நிறுத்தி அம்மா தலைவாரிவிட்டவாரே சொன்னாள்,”இந்த வெள்ள சட்டை,ப்ளூ டவுசர் உனக்கு அம்சமா இருக்கு. புதுசு மாறாம இருக்குடா”

நான் காலையிலிருந்து சரியாக பேசாமல் , முகத்தைத் தூகி வைத்துக்கொண்டிருப்பதைப் புரிந்து கொண்ட அம்மா,என் சோகத்தை குறைக்க எடுத்த முயற்சி அது. ஆனால் பலிக்கவில்லை. தொடர்ந்து மௌனமாகவே இருந்தேன்.

பொதுவாக பண்டிகை நாளென்றால் காலையில் இட்லி,தோசை தான் ஸ்பெஷல். அன்றைக்கும் அதான்.

ரெண்டு இட்லி எனக்கு பிடித்த தேங்காய்ச் சட்னியுடன் வைக்கப் பட்டது. என்னைத் தாஜா செய்வதற்காகவே அம்மா அறைத்திருக்கிறாள்.

‘இந்த ரெண்டு இட்லி சாப்புடு. ஒரு நெய் தோசை சுட்டுத் தர்ரேன்” அம்மா தோசைக்கல்லை கரித்துணியால் துடைத்துக்கொண்டே சொன்னாள்.

“வேண்டாமா”

“ஏன்டா? உனக்கு தா நெய் தோசை புடிக்குமே”

‘பசிக்கலமா”. எனக்கு பேசவே பிடிக்கவில்லை. நான் வருத்தப் படுவதை அவர்களுக்கு வெளிப்படையாகக் காட்டி ஒரு பரிதாபத்தை பெருவதில் ஒரு அற்ப ஆறுதல்.

சீக்கிரம் சாப்பிட்டு எழுந்த அப்பா வெளியில் எங்கோ சென்று விட்டார். நான் இரண்டாவது இட்லியில் கொஞ்சத்தை சாப்பிடாமல் வைத்து கையைக் கழுவினேன். என் அஹிம்சைப் போராட்டத்தின் அடுத்த கட்டம் அது.

“டேய்..வச்சதே ரெண்டு இட்லி..அதுலயும் மிச்சம் வெச்சிருக்க”

“போதும்மா” சொல்லிவிட்டு வாசற்படியில் போய் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து கொண்டேன்.

அம்மா பின்னால் வந்து தலையில் கைவைத்தாள்.

“இந்தா..இருவது ரூவ இருக்கு. கடைக்கு போய் எதாது வேணும்னாலும் வாங்கிக்கோடா” என்றாள் வாஞ்சையாக.

பட்டாசு என்ற வார்த்தைக் சொன்னாலே அழுகை வந்துவிடும் என்பது தெரிந்து தான் ‘எதாது’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறாள். என்ன வார்த்தைஜாலம்!!

அதை வேண்டாமென சொல்ல மனசில்லை.

ஆனாலும் மேலும் கொஞ்சம் பரிதாபத்தை உருவாக்க அதில் ஒரு பத்து ரூபாயை மட்டும் வாங்கிக்கொண்டேன்

“பத்து ரூவா இங்க் பேனா வாங்கிக்கிறேம்மா” என்று அதை மடித்து சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன்.

அம்மா ஏதோ சொல்ல முற்பட்டாள். ஆனால் சொல்லவில்லை. சமையலறைக்கு திரும்பிப் போய் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

சில நிமிடங்கள் கழிந்தன. சங்கரன் வீட்டில் பேச்சு சத்தம் கேட்டது.

எங்கள் வீட்டின் மூன்றடி கருங்கல் மதிலின் மேல் சாய்ந்துகொண்டு, அவர்கள் வீட்டை வேடிக்கை பார்த்தேன்.

சங்கரனும்,அவன் அப்பாவும் உடல் முழுக்க எண்ணெய் பூசிக்கொண்டிருந்தனர். எங்கள் வீட்டில் அம்மா சமையலுக்கே எண்ணை கொஞ்சமாக ஊற்றுவதை எண்ணிக்கொண்டேன்.

சங்கரனை அவனது அம்மா தூக்கி துணிதுவைக்கிற கல் மீது நிற்க வைத்து குளிப்பாட்டத் துவங்கினார். சின்ன வயதிலிருந்தே தலைக்கு குளிப்பாட்டும் போது அழுவது எங்களுக்கு வழக்கம். அதற்கு காரணமெல்லாம் தெரியாது. சங்கரனும் “கண் எரியுதுமா. விடுமா” எனக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினான்.

இன்னும் ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் தான். புது சட்டையை மாட்டிக்கொண்டு பட்டாசுப் பையோடு வந்துவிடுவான். என்ன செய்யப்போகிறேன்? என்ன ஆனாலும் சரி அவன் முன்னால் அழுதுவிடக் கூடாது என உறுதி பூன்டேன்.

தூரத்தில் பிள்ளையார் கோவிலில் பூஜை நடந்துகொண்டிருக்கிறது. மணி சத்தம் கேட்டது. எனக்கு பிள்ளையார் மேல் கோபம் பொத்துக்கொண்டது. ’எனக்கு மட்டும் ஒன்னுமே கெடைக்குறதில்ல. தினமும் தா சாமி கும்புடுறேன். அவனுக்கு மட்டும் எப்போமெ புது ட்ரெஸ், வெளையாட்டு பொருளு, பட்டாசெல்லாம் கெடைக்குது. அவங்கப்பாவுக்கும் காசு நெறையா குடுக்குற. எங்கப்பா அம்மா நானெல்லாம் பாவம்..எதுமே வாங்குனதில்ல” நினைக்கும் போதே என் கண்ணில் நீர் பொங்கி வழிந்துவிட்டது. மூக்கும் சேர்ந்து ஒழுகிக்கொண்டது. அதை உரிஞ்சியபடியே விசும்பி அழத்துவங்கினேன்.

“கார்த்தி..இங்க வா” அம்மா அழைத்துக்கொண்டே வெளியே வரும் ஓசை கேட்டது.

அவசர அவசரமாக கண்களைத் துடைத்தேன். ஒரு துளி கண்ணீர் என் மணிக்கட்டின் மேல் விழுந்தது. அதை துடைக்கும் முன்னே ,அதனருகில் இன்னொரு பெரிய துளி விழ, மேலே பார்த்தேன். கருமையான மேகங்கள் திரண்டு நின்றிருந்தன. பளீர் பளீரென மின்னல் வெட்ட, டமாரென ஒரு பெரிய இடிச் சத்தம். சடசடவென ஒரு நொடியில் மழை கொட்ட ஆரம்பித்தது. சங்கரன் குடும்பம் வீடுக்குள் ஓடுவதைப்பார்த்தபடியே நானும் வீட்டுக்குள் ஓடினேன். அப்போது முகத்தில் விழுந்த சில துளிகள் என் கண்ணீரைக் கச்சிதமாய் மறைத்துவிட்டன.

எனது எட்டு வருட வாழ்க்கையில் அப்படி ஒரு மழையைப் பார்த்ததேயில்லை. அடேங்கப்பா!! அது மழையே இல்லை. வானத்திற்கு மேலே ஒரு கடல் இருக்கிறதென்று சங்கரன் சொல்லுவானே அந்தக் கடலே கீழே வந்து ஊற்றுவது போல இருந்தது. பயமுறுத்தும் இடியும் மின்னலும் வேறு சேர்ந்துகொண்டன. அந்த நன்கு விடிந்திருந்த காலைப் பொழுதில் வானம் இருட்டிக் கொண்டது. எஃப்.எம்மில் வங்கக் கடலில் புயல் சின்னம் தோன்றியிருப்பதால் இன்னும் நாற்பத்தெட்டு மணிநேரம் கனமழை பெய்யும் என அறிவித்துக்கொண்டிருந்தார் ஒருவர்.

“அம்மா..நாப்பத்தியெட்டு மணி நேரம்னா எவ்ளோ நாளு?”

“ரெண்டு நாளுக்கிட்ட வரும்டா’

“ஒ..அப்புடினா நாளானிக்கும் லீவா..ஜாலி” ஒரு சின்ன சந்தோசம் தோன்றி மறைந்தது.

அடுத்த ஒரு மணி நேரம் கழித்து அம்மா முறுக்கு சுட, அதை சாப்பிட்டுக்கொண்டே மழையை ரசித்துக்கொண்டிருந்தேன். சுற்றுவட்டாரத்தில் ஒரு வெடிச்சத்தமும் கேட்க்கவில்லை. மனது குளிர்ந்தது.

ஒரு மணிக்கு அப்பா மழையில் நனைந்தபடியே வீடு திரும்பினார்.

“ஊரையே தூக்கிட்டுப் போற மாதிரி மழ கொட்டுது. அதுல தான் நீங்க ஊரு சுத்தப் போவிங்க. துணிய மாத்துங்க. சோறு ஆயிடுச்சு”

“மழ வரும்னு எனக்கென்ன தெரியும். சோத்தப் போடு” தலை துவட்டிக்கொண்டே சொன்னார் அப்பா.

அப்புறம் மதிய சாப்பாடு பருப்புக் குழம்பு,ரசம்,வெண்டைக்காய்,அப்பளம் என எனக்கு ஒரு பெரிய விருந்து போலத் தெரிந்தது. முகத்தை சோகமாக வைத்துக் கொண்டே கொஞ்சம் நிறைய சாப்பிட்டுக்கொண்டேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.