(Reading time: 10 - 20 minutes)

வளும் இதே போன்று சில காட்சிகளை படத்தில் பார்த்து பதறிப்போயிருக்கிறாள்.

இன்னொரு நிகழ்ச்சி என்னவென்றால் சங்கிலி சரியாக அறுபடாமல் கீழே விழுந்த பெண்ணையும் சங்கிலியோடு இழுத்துக்கொண்டு போனது.

அப்போதைக்கு அதை செய்தியாக கேட்டபோது பாதிக்கப்பட்டவர்களை நினைத்து பரிதாபப்பட்டதோடு சரி. ஆனால் இது ஏன் இப்போது நினைவில் வந்து தொலைத்தது.

அதுவும் இன்று அமாவாசை. கும்மிருட்டாக இருந்தது. கணவனிடம் இதை சொன்னால் அவன் இருக்கும் கோபத்தில் என்ன செய்வானோ என்று அமைதியாகிவிட்டாள்.

‘இனி இப்படி நேரம் தாழ்த்திக் கிளம்புவதே கூடாது. வெளிச்சத்திலேயே கிளம்பிவிட வேண்டும்.’ மனதில் உறுதியெடுத்துக்கொண்டாள்.

எப்போதுமே அவள் அப்படித்தான். முன்கூட்டியே யோசித்து செய்யமாட்டாள். பாதிப்பு வரும்போது நாளையில் இருந்து இப்படி செய்யக் கூடாது. என்று உறுதியெடுப்பாள். ஆனால் அப்படி உறுதி எடுத்ததை மறந்துவிட்டு மீண்டும் அதே தப்பை செய்வாள். நாளையில் இருந்து செய்யக்கூடாது என்று மனதை தேற்றிக்கொள்வாள்.

நாளை பார்க்கலாம்… என்று நாம் தள்ளிப்போடும் ஒவ்வொரு விசயமும் நமக்கு வினையாகதான் முடியும். காலத்தே பயிர் செய் என்று பெரியவங்க சொல்லியிருக்காங்க. ஆனால் அது எல்லோருக்கும் புரிந்துவிடுவதில்லை. அதில் சீதாவும் ஒருத்தி. இப்ப என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.

கும்மிருட்டில் கடந்து போகும் வாகனங்களின் வெளிச்சம் மட்டுமே தெரிந்தது. அதில் பயணித்தவர்கள் யார் என்று பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது.

அப்போதுதான் சீதா கவனித்தாள். நீண்ட நேரம் ஒரு வண்டி இவர்கள் பின்னாடியே வந்தது. வண்டியின் ஹெட்லைட் இவள் முகத்தில் மோதியது. அந்த வண்டி இவர்களை கடந்து செல்ல முயற்சிக்கவில்லை. அதில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்க்க முயன்றாள். பின்னாடி யாரோ அமர்ந்திருப்பது போல் தோன்றியது.

மனம் படபடக்க ஆரம்பித்துவிட்டது. எப்பெப்போதே நடந்த வழிப்பறிக் கொள்ளை எல்லாம் நினைவுக்கு வந்தது. அவளின் இதயத்துடிப்பை அவளே கேட்டாள். சுற்றிலும் எதுவுமே இல்லாத மாதிரி அவளுக்கு கண்களை கட்டிக்கொண்டு வந்தது.

கணவனிடம் சொல்லி அவனை கொஞ்சம் பின்தங்க சொல்லலாமா? என்று யோசித்தாள்.

ஏன் என்று அவன் கேட்டால் காரணம் சொல்ல வேண்டும். கேட்டுவிட்டு ஒன்று இவளின் முட்டாள்தனம் என்று எண்ணி சிரிப்பான். அல்லது தாமதப்படுத்தியதற்காக சீறுவான்.

 மீண்டும் அவளுள் ஒரு யோசனை வண்டியை நிறுத்தினால் திருடர்களுக்கு வசதியாகப் போய்விட்டால் என்ன செய்வது? இந்த எண்ணம் தோன்றியதுமே அவளுள் நடுக்கம் பரவியது.

சங்கிலியை மட்டும் அறுத்துக்கொண்டு போனால் பரவாயில்லை. கையில் கத்தி வைத்திருந்து ஏதாவது செய்துவிட்டான் என்றால்?

வண்டியில் போகும் போது அறுக்க முயற்சி செய்தால் கண்டிப்பாக வண்டி தடுமாறும். குழந்தைகளோடு அனைவருமே கீழேதான் விழ வேண்டும். அப்படி விழும்போது யாருக்காவது தாறுமாறாக அடிபட்டுவிட்டால் என்ன செய்வது?

என்னவோ கடவுள் என்னும் இயக்குனர் “சீதா! உனக்கு அடுத்த காட்சி இதுதான்மா.” என்று விளக்கி சொல்லிவிட்டது போல் பின்னே வருபவன் சங்கிலியை அறுக்கப் போகும் தருணத்தை எதிர்பார்த்து திடுக் திடுக் என்ற மனதோடு அமர்ந்திருந்தாள்.

 உண்மையில் அப்படி ஒரு காட்சியில் நடிக்கும் நடிகை கூட சீதா அளவிற்கு தத்ரூபமாய் உணர்ச்சிகளை காட்டியிருக்க முடியாது.

பின்னே வண்டி ஓட்டி வந்தவனுக்கு என்ன அவசரமோ? இவர்களை தாண்டி சென்றான். அவன் பின்னாடி பார்த்த சீதாவுக்கு தன்னையும் மீறி சிரிப்பு வந்தது. தனது சங்கிலியை அறுப்பதற்காகவே பின்னாடி வரும் வண்டியின் பின்சீட்டில் அமர்ந்திருக்கும் திருடனை கற்பனை செய்திருந்த இடத்தில் ஒரு பால்கேன் இருந்தால் சிரிப்பு வராதா? அதன்பிறகுதான் அவர் ஒரு பால்காரர் என்று புரிந்தது.

எப்படியும் வண்டி ஓட்டும்போது சங்கிலி அறுக்க வேண்டுமானால் இரண்டு பேர் வேண்டும். வண்டியோட்ட ஒருத்தன். அந்த வேகத்தையும் தன் கைக்குள் கொண்டுவந்து மற்றவர் சங்கிலியை அறுக்க ஒருத்தன். அவன் பின்னாடிதான் அமர்ந்திருப்பான் என்ற அளவுக்கு அவள் யோசித்திருந்தாள்.

எப்போதுமே சீதாவுக்கு த்ரில், திகில் நிறைந்த படங்கள் பார்ப்பது பிடிக்கும். கொஞ்சம் பயமாக இருந்தால் சிறுகுழந்தை போன்று முகத்தை கைகளால் மூடி கையிடுக்கு வழியாக பார்ப்பாள்.

அதுவும் இது போன்ற படங்கள் எல்லாம் இரவு நேரங்களில்தான் அதிகம் போடுவார்கள். எல்லோரும் உறங்கிய பின்னரும் தனியே அமர்ந்து பார்ப்பாள்.

பார்ப்பதோடு நில்லாமல் நடித்தவர்களுக்கு ஆலோசனையும் சொல்ல மறக்கமாட்டாள்.

“ஐயய்யோ! இவ ஏன் ஊரை விட்டுட்டு காட்டுக்குள் ஓடுறா. ஈசியா மாட்டிக்கிறதுக்கா? இவன் ஏன் தான் இருக்கிறதை காண்பிச்சிக்கிறான். சைலண்டா போனா வில்லனை போலீசில் மாட்டிவிடலாம்ல. அதை விட்டுட்டு அவன்கிட்ட போய் சவால் விட்டுக்கறான்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.