(Reading time: 13 - 25 minutes)

ரு வாரத்திற்கு பின் அந்த வீட்டு பெரியவரான சென்பகம் பாட்டியும் தனது முதுமை காரணமாய் இவ்வுலகை பிரிந்தார்..

இறப்பு என்பது மனித வாழ்வில் ஓர் நிகழ்வு.. ஒரு வீட்டு பெரியவரின் இறப்பு என்பது விழுதுகள் இல்லா ஆலமரம் போல்... ஆலமரத்தின் விழுதுகள் எவ்வளவு பிடிப்பாய் பூமியில் ஊன்றி நிற்கின்றதோ அவ்வளவு வலிமையாய் அந்த ஆலமரம் பூமியை தாங்கி நிற்கும்.. அது போல் தான் வீட்டின் பெரியவர்களும்..

செண்பகம் பாட்டி இறந்த பின் முப்பதாக இருந்த பசுவின் எண்ணிக்கை படி படியாய் குறைய ஆரம்பித்தது... கூடவே அந்த ஊரில் விவசாயமும் அழிய ஆரம்பித்தது...

கிராமங்களில் உள்ள மக்கள் சாரை சாரையாக நகரங்களுக்கு குடி பெயர்ந்ததே இதற்கு முதன்மையான காரணம்.. நகரங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் போக அந்த கிராமத்தில் எஞ்சி இருந்தவர்கள் முதியவர்கள் மட்டுமே..

அவர்களால் எத்துணை நாள் விவசாயத்தை பார்க்க முடியும்...???

யோசித்து பார்க்கும் பொழுது விவசாயத்தை பார்த்து வளர்ந்த கடைசி தலைமுறையாக நாம் மாறிவிடுவோமோ என்ற சிறு பயமும் தோன்றுகின்றது... கூடவே பாரதியின் வரிகளும்..

காணி நிலம் வேண்டும் - பராசக்தி

காணி நிலம் வேண்டும், - அங்கு

தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்

துய்ய நிறத்தினதாய் - அந்தக்

காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை

கட்டித் தரவேண்டும் - அங்கு

கேணியருகினிலே - தென்னைமரம்

கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்

பக்கத்திலே வேணும் - நல்ல

முத்துச் சுடர்போலே - நிலாவொளி

முன்பு வரவேணும், அங்கு

கத்துங் குயிலோசை - சற்றே வந்து

காதிற் படவேணும், - என்றன்

சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்

தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு

பத்தினிப் பெண்வேணும் - எங்கள்

கூட்டுக் களியினிலே - கவிதைகள்

கொண்டுதர வேணும் - அந்தக்

காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்

காவலுற வேணும், - என்றன்

பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்

பாலித்திட வேணும்.

யாரிடம் இருக்கின்றது காணி நிலம்..?? காணி நிலம் தான் வீட்டு மனைகளாக மாறிவிட்டதே... ஏரியை கூட விடாமல் அதில் வீடு கட்டி குடியேறும் நாம் கிணறுகளையா விட்டு வைப்போம்..??

செழுமை நிறைந்த தென்னை மரத்தை யார் பராமரிப்பது என்று தானே நாம் நமது வீட்டில் அழகு செடிகளை வளர்க்கின்றோம்..

குயில்கள்...?? எங்கிருக்கின்றன அவை..?? கூண்டுகளிலா..?? அல்லது செல் போன் டவரில் இருந்து வெளிவரும் கதிர் வீச்சில் பட்டு இறந்த அதன் உடலையா..??

விஞ்ஞான வளர்ச்சி என்று நாம் இயற்கையை அழித்து விடுவோம் என்று முன்பே அறிந்து வைத்திருந்தானோ..?? அதனால் தான் அன்றே பாரதி இது வேண்டும் அது வேண்டும் என எழுதி வைத்தானோ..??

வெப்ப நிலை உயர உயர நிலத்தடி நீர் குறைந்து கொண்டே போனது.. கூடவே செழுமையாக வளரும் சின்னச் சின்ன புற்களும் காய்ந்து போய்விட்டது..

இயற்கையின் மாற்றத்தால் கால்நடைகளுக்கு இயற்கையாக கிடைக்கும் உணவு கிடைக்காமல் போனது.. அதனால் அதற்கான உணவை வெளியிலிருந்து வாங்க தொடங்கினர்..

மாட்டு தீவனங்களின் விலையும் உயர்ந்ததால் சாதாரண விவசாயியால் அதனை தாக்கு பிடிக்க முடியாமல் போய் விட்டது.. இதனால் விவசாயிகளுள் சிலர் நாட்டு மாடுகளை விற்று விலை குறைவான சிந்து மாடுகளை(ஜெர்ஸி மாடுகளை) வாங்க தொடங்கினர்..

காலை வேலை, காட்டிற்கு மேய போவதும் அந்தி சாயும் நேரம் பால் கொடுப்பதும் என தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தது செல்வி.. தனம் தான் இப்பொழுதும் வீட்டு கால்நடைகளை பராமரிப்பது..

காலம் அதன் போக்கில் மாறிக்கொண்டே போனது...மனிதனின் எண்ணங்களை போல...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.