(Reading time: 10 - 20 minutes)

கேள்வி கேட்காமல் மனிதனால் இருக்க முடியுமா?

 (வாய்ப்பேயில்லை.அதுவும் என்னால்! ஆசிரியரைத் தவிர மற்ற அனைவரிடமும் கேள்வி கேட்காமல் இருக்கவே முடியாது.இப்படியும் கேள்வி கேட்பார்களா! என்று அதியசிக்கும் வண்ணம், இல்லை இல்லை... எரிச்சல் படும்படி கேள்வி கேட்பவள் நான்.மற்றவர்களை விட இதற்கு சற்று தலைக்கணம் அதிகம்தான்.[ஆமாம்.நிறையக் காய்களையும் கீற்றுக்களையும் கொண்டுள்ளதே!]மனிதரில் பெரும்பாலும் இது போன்ற குணமுடையவரை, சற்று சீண்டினால் நமக்கு தேவையானதை வென்றுவிடலாம்.அதனால்தான் பெரியோர்கள் சொல்வர் எது கொண்டாலும் தலைக்கணம் கொள்ளக்கூடாதென்றும், தலைக்கணம் அழிவுக்கும் தோல்விக்கும் வழி செய்யும் என்றும்!எனக்கு பதில் தெரிய வேண்டி இருந்ததால், நானும் அதை சீண்ட ஆரம்பித்தேன்.)

உனக்கு பதில் தெரியவில்லை என்றால் அதை ஒற்றுக்கொள்,வீணாக அலட்டிக்கொள்ளாதே! என்று சீண்டினேன்.

என் மொழிக் கேட்டு,அதன் தலையை மேலும் நன்றாக குலுக்கிக் கொண்டது.

என்ன? எனக்கா தெரியாது? ஏய் ! முட்டாளே உனக்கு ஒன்று கொடுத்தால்தான் சரி வருவாயென்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அழகாய் அவ்விடத்தை விட்டு ஓடினேன் நான்.சிறிது தொலைவு வந்தபின் தான் நிம்மதி உண்டாயிற்று. தேங்காய் மற்றும் அதன் மட்டைகள் விழுந்து பல பேர் அவதியுற்றதை அறிந்திருக்கிறேன். சாலைகளில் மரங்களை நடுவது நல்லதுதான்! ஆனால் சில மரங்களை சாலையில் நடக்கூடாது(பெரும்பாலும் காற்று சற்று அதிகம் அடித்தால் விழக்கூடிய மரங்கள்) என்று சொல்வார்கள் அதில் தென்னை மரமும் அடங்கும்.

சரியான பயம் பிடித்தவள் என்று நினைக்கிறீர்களா?

வேறு என்ன செய்ய! அவனின் தலைக்கனத்திற்காக என் தலையை அடைமானம் வைக்க முடியாதே!

சற்றே இயல்பு நிலைக்கு வந்த நான், கரையில் கால் வைத்தப்படி அமர்ந்து விட்டேன்.

சிறு வயதில் தாத்தா வீட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம், நான் அதிசயதித்த பல விஷயங்களில் இத்தென்னையும் உண்டு. கோடை விடுமுறையில் தென்னத் தோப்பில் விளையாடியது எதையும் என்னால் எப்பவும் மறக்க முடியாது. அது ஒரு மிகச்சிறிய தோப்பு , அங்கிருந்த மரங்களில் சில மரங்களே மிகமிக உயரமாக இருக்கும். அப்பொழுதெல்லாம் எனக்கு தோன்றும் ஒரே விஷயம் ,”இவ்வளோ பெரிய மரத்துல எப்படி ஏறிப் பறிப்பாங்க? இதப் பார்த்தாலே நமக்கு கழுத்து வலிக்குத்தே!” பிறகு என் மாமாக்கள் சகோதரர்கள் எறியதைப் பார்த்து கொஞ்சம் என் ஆச்சிரியத்தைக் குறைத்ததுண்டு, இருந்தாலும் அவர்கள் நான் சொன்ன மிகப்பெரிய மரங்களில் ஏறியிருப்பதை இதுவரையில் நான் பார்த்ததில்லை. என் மாமாக்கள் வேண்டுமானல் ஏறியிருக்கலாம்! ஆனால் என்னோட சகோதரர்கள் ஏறியிருக்க வழியேயில்லை.

[பின் அவர்கள் இருப்பதிலே குட்டியான மரத்தைத் தேடிக் கண்டுப்பிடித்துதான் எப்பொழுதும் ஏறுவார்கள்.அதில் வருத்தம் அடைவது நான்தான்,ஆனால் வெளியில் சொல்லியதில்லை (அம்மரங்களில் சிறிய அளவிலான இளநீரே இருக்கும் அதுவும் எண்ணிக்கையில் குறைவே! இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்னுடைய வருத்தத்திற்கானக் காரணம்! வெளியே சொல்லியிருந்தால் எனக்கு அடிகள் கிடைக்குதோ இல்லையோ திட்டு கண்டிப்பாக கிடைத்திருக்கும்,பின் பறித்து அதை வெட்டித் தரும் சகோதரர்களிடம் சாப்பிடுவதை மட்டும் வேலையாக கொண்ட நான் சொன்னால்! )அதனால் சர்வ நிச்சயம் அவர்கள் அம்மரங்களில் ஏறியிருக்க வாய்ப்பேயில்லை]

பொதுவாக காய்கள் அதிகம் இருக்கும் சமயங்களில் இளநீர் ஏறுபவர் வந்து பறித்து வாங்கி செல்வதுண்டு. ஒரு விடுமுறை சமயத்தில் அதைப் பார்க்க நேர்ந்தது. அவர் என்னை அதிசயக்கச் செய்த மிகவும் பிடித்த மரத்தில் ஏறினார்.நீங்கள் தென்னை மரம் ஏறுபவர்களை பார்த்திருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.இருகாலையும் சேர்த்து ஒரு வளையம் போல் [எனக்கு அதன் பெயர் தெரியவில்லை-ரப்பர் டியுப் மாதிரி(மோசமான உதாரணம்தான் மன்னிக்கவும் நண்பர்களே ) ]இருப்பதில் மாட்டி சர் சரென்று ஏறி, இடுப்பில் உள்ள கத்தியை எடுத்து தென்னங்கொலையை வெட்டித் தள்ளுவார்கள்.

தென்னங்காயை அவரே பல சமயங்களில் வாங்கிக் கொள்வார். எனக்குத் தெரிந்து தற்பொழுது இளநீர் ஒரு காய்க்கு 3-6 ரூபாயென்று வாங்கி செல்வார்.(இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம்,இங்கு நான் வசிக்கும் இடத்தில் ஒரு இளநீர் 25 ரூபாயிலிருந்து அதற்கு மேல் விற்கிறது! உற்பத்தியில் இருந்து விற்பனைக்கு வருவதில் உள்ள இடைப்பட்டதை அறிந்து அதிர்ந்த விஷயம் என்பதால் உங்களிடம் பகிருகிறேன்)

இப்பொழுது முக்கிய விஷயம் , நீங்கள் தென்னஞ்சோறு என்ற வார்த்தையைக் கேட்டிருக்கிறீர்களா?

எனக்கும் தெரியாதிருந்தது என் தாத்தா சில மரங்களை வெட்டும்வரை! அன்று சில மரங்களை வெட்டினார்கள். காரணம் கேட்டதற்கு அவர் கூறிய பதில், அவைகளுக்கு வயது ஆகிவிட்டதென்றும் தேரை மற்றும் பூச்சிகளால் பாதிக்கப்பட்டதால் வெட்டியாதாக உரைத்தார். அன்றுதான் நானும் தென்னஞ்சோறு என்னும் வார்த்தையைக் கேட்டேன். அதனை உண்டதும் அன்றுதான் முதல்முறை, அதன்பிறகு நான் உண்ணவில்லை இன்றுவரை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.