(Reading time: 10 - 20 minutes)

விசும்பலுடன் பக்கத்து அறைக்குச் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.  காலையில் எழுந்து டிபனும் செய்யவில்லை.  

சுனிலுக்கு அவள் செய்கை சிரிப்புதான் வந்தது. இதற்கெல்லாம் பயந்து அவன் விட்டுக் கொடுத்துவிடுவானா என்ன.  அழுததால் அவள் கண்கள் வீங்கி இருப்பது தெரிந்தது.

 "என்னாச்சு கல்பனா...உடம்புக்கு ஒண்ணுமில்லையே? " கனிவுடன் வினவினான் சுனில்.

அவளிடமிருந்து பதிலில்லை.

"சரி சரி நீ பட்டினி கிடந்துடாதே. பழங்கள் வாங்கி வச்சிருக்கேன் சாப்பிடு" என்று கூறியவன் அதற்குமேல்  ஒன்றும் பேசாமல் வேலைக்குச் சென்று விட்டான்.

அவன் சாப்பிடாமல் சென்றது உள்ளூர வருத்த  அதற்கும் ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்  கல்பனா

தை மாமியிடம் சொன்னால்தான் மனம் ஆறும் என்று நினைத்தவள்  வழக்கம் போல பத்து மணிக்கு நீராஜா வீட்டுக்குச் சென்றாள். அழுது அழுது சிவந்த அவளது கண்களைக் கண்டதும் நீராஜாவுக்கு உள்ளூர  சந்தோஷம் தாங்க முடியவில்லை.

 “வாம்மா கல்பனா...என்னாச்சு உடம்பு கிடம்பு சரியில்லையா... ஏ பங்கஜம்.... ஒரு காபி கொண்டுவாடி” என்று வேலைக்காரியை ஏவிய வண்ணம் வரவேற்றாள் நீரஜா.

“உடம்புக்கு ஒண்ணுமில்லை மாமி. மனசுதான் சரியில்லை” என்று முதல் நாள் தன் வீட்டில் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் விவரித்தாள் கல்பனா.

“என்னை ஒரு வேலைக்காரியாவே நெனைச்சுட்டார் மாமி. வேலைக்காரிக்கு சம்பளம் கொடுக்கறதுக்கு பதில்  எனக்கு புடவை எடுத்துத் தர்றேன்றார். இதை விட என்னை கேவலப் படுத்த முடியுமா..நீங்களே சொல்லுங்க?” என்று நியாயம் கேட்டாள் கல்பனா.

"என்னத்தைடி  சொல்றது. இந்த ஆம்பளைங்களே  இப்படித்தான் . நீ ஏழைப்பொண்ணு. அவன் பணக்காரன், சம்பாதிக்கற திமிர் வேற. இல்லைன்னா உன்னை இப்படி கேவலப் படுத்தியிருக்க மாட்டான்” என்று வழக்கம்போல அவளது ஏழ்மையை ஒருதரம் குத்திக்காட்டிவிட்டு  “சரி, இப்போ  நீ என்ன பண்ணப் போறே?" என்று  கன அக்கறையாக  வினவினாள் நீரஜா.

"வேற என்ன செய்யறது, வழக்கம் போல சமையல் வேலையை நானே பாத்துக்க வேண்டியதுதான்".

"அடி அசடே, இப்பிடியா முடிவெடுப்பே? உன்னோட முக்கியத்துவத அவன் புரிஞ்சுக்க வேணாமா? "

"அதுக்கு என்ன செய்யறது மாமி?"

"நீ உடனே  உன்னோட பிறந்தககத்துக்குப் போயிடு, அவன் கிட்ட சொல்லக்கூட வேணாம். ஒரு லெட்டர்ல எழுதி வச்சுட்டு உடனே கிளம்பிடு. அப்போதான் அவனுக்கு புத்தி வரும் . ஒரே நாள்ல பதறிண்டு   ஓடி வருவான் பாரு " என்றாள்.

கல்பனாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இந்த சின்ன விஷயத்துக்காக அவனைப் பிரிந்து போவதா? கல்பனா தயங்க நீராஜாவே தொடர்ந்தாள் "நீ இப்போ விட்டுக் குடுத்தேன்னு வச்சிக்கோ, அப்புறம் எப்பவுமே நீ கேட்டது கிடைக்காது, உன் வார்த்தைக்கு உன் புருஷன் கிட்ட மதிப்பில்லாம  போயிடும், நீ காலத்துக்கும் அடுப்படியிலேயே கிடக்க வேண்டியதுதான். அதுனால உடனே புறப்படு, பஸ்ஸுக்கு காசு இருக்கு இல்லையா?" என்று கல்பனா மறுத்துக்கூற வாய்ப்பு தராமல் முடித்தாள். 

ல்பனாவுக்கும் வேகம் பிறந்தது. ‘இந்த சுனிலுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் . அம்மாவீட்டுக்கு போய் இருந்துட்டு வந்தாதான் அவருக்கு நம்மோட அருமை புரியும்’ என்று மனத்தில் நினைத்தபடி வீட்டை அடைந்த கல்பனா பெட்டியை அடுக்கத் தொடங்கினாள்.

ஆனால் சொல்லாமல் கொள்ளாமல் எப்படி போவது. அவன் தவித்துப் போய்விட மாட்டானா? ஒருவேளை அவனுக்கு கோபம் வந்துவிட்டால்   என்னசெய்வது ? குழப்பத்தில் அவளுக்கு தலைவலிப்பதுபோல் இருந்தது.

‘டிங்க்... டாங்…’ காலிங் பெல் ஒலிக்கேட்டது. இந்த நேரத்தில் யாராக இருக்கும், ஒருவேளை அவன்தானோ?  

ஆவலுடன் கதவைத் திறந்த கல்பனா அங்கே நீரஜா மாமியின் மருமகள் சுமலதாவைக் கண்டதும் திகைத்தாள்.

இவள் எப்போது ஆபீசிலிருந்து வந்தாள்? வியப்புடன் " வாங்க அக்கா..ஆபீசிலிருந்து சீக்கிரம் வந்துட்டீங்களா? இப்போதான் உங்க வீட்டிலிருந்து வர்றேன்.  உக்காருங்க”, என்று உபசரித்தாள் கல்பனா.

உள்ளே வந்த சுமலதா  சுற்றுமுற்றும் பார்த்தபடி “என்ன கல்பனா , எங்கேயோ கிளம்புற மாதிரி தெரியுதே? என்றாள்.

“ஆமாக்கா , எங்க பிறந்த வீட்டுக்கு போலாம்னு கிளம்பினேன்”. என்று சமாளித்தாள் கல்பனா.

“ஏன் தனியாவா போறே? சுனில் வரலையா? "

"அவருக்கு கொஞ்சம் வேலை அதிகம். அதான் நா மட்டும் போறேன், நீங்க உக்காருங்க காபி சாப்பிடறீங்களா?”  என்றாள் பேச்சை மாற்றும் விதமாக.

"அப்படியென்ன அவ்ளோ அவசரம்? அவருக்கு வேலைமுடிஞ்ச பிறகு ரண்டு பேருமே போலாமே?" என்று மடக்கினாள் சுமலதா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.