(Reading time: 10 - 20 minutes)

என்ன இது, இவளை சமாளிக்க முடியாது போலிருக்கே? என்று எண்ணிய வண்ணம்  கல்பனா திகைக்க, சுமலதா கல்பனாவை நேராகப் பார்த்தாள்

 " நீ இப்போ எடுத்திருக்கற முடிவு உனக்கே சரின்னு படுதா?”

“ நீங்க என்ன கேக்கறீங்கன்னு புரியலை....” கண்களை விரித்து அப்பாவிபோல் கேட்டாள் கல்பனா.

“நீ புரியாத மாதிரி நடிக்கறேன்னு  எனக்குத் தெரியும். நீ எங்க மாமியார் கிட்ட பேசிக்கிட்டிருந்தததை  கேட்டுட்டுட்டு தான் வந்தேன். உன்கிட்ட கொஞ்சம்  பேசவேண்டியிருக்கு, நீ படிச்ச பொண்ணு  நல்லா யோசிச்சு சொல்லு, இரண்டே பேர் உள்ள உன்  குடும்பத்துக்கு ஒரு சமையல் ஆள் அவசியம்தானா?"

"இல்லக்கா .. இந்த தெருவுல எல்லா வீட்டுலயும்  சமையலுக்கு ஆள் இருக்கு, அதான்...." என்று இழுத்தாள் கல்பனா

"எல்லாருக்காகவும் நாம வாழ  முடியாது  கல்பனா. நீ வேலைக்குப் போற பெண் என்றாலும் பரவாயில்லை, வீட்டுல தான இருக்கே? கல்யாணமாகி ஆறு மாதம்தானே ஆவுது? உன் கையால் சமைச்சதை சாப்பிடனும்னு உன் கணவர் ஆசைப்பட மாட்டாரா? அவருக்கு விதம் விதமா சமைச்சு குடுக்கணும்ன்னு உனக்கும்தான் ஆசையில்லையா ? எனக்குத்தான் வீட்டிலே இருந்து கணவனுக்கு சமைத்துப்போட ரொம்ப ஆசை. ஆனா அதுக்கு  வாய்பில்லாம போச்சு. எவ்வளோ பணமிருந்தும் என் மாமியார் பேராசை கொண்டு போய் என்னை வேலைக்கு அனுப்பினாங்க. அதனாலதான் இரண்டு வேலை ஆள்  வைக்க வேண்டியதாப் போச்சு. நான் வாங்குற சம்பளத்துல பாதி  வேலைக்காரங்களுக்கே போயிடுது. ஆனா லீவு நாள்ல நானே தான் சமைப்பேன் , அதுதான் என் கணவருக்கும் பிடிக்கும் ." சுமலதா நிறுத்த  கல்பனாவுக்கு சுனிலின் ஆதங்கம் புரிந்தது. கல்யாணத்துக்கு முன்பு  ஓட்டலில்  சாப்பிட்டு  நாக்கே செத்துவிட்டதுன்னு அவன் அடிக்கடி சொல்வது நினைவில் வந்து வருத்தியது.

 “உன் கணவர் உன் கிட்டே ரொம்ப அன்பா இருக்கார்ன்னு எல்லோருக்கும் தெரியும். என் மாமியாருக்கு புருஷன் பொண்டாட்டி ஒற்றுமையா இருந்தா புடிக்காது. அதனாலதான் உன்னை வீட்டை விட்டு வெளியேற யோசனை சொல்லியிருக்காங்க. அவுங்க பொண்ணு விஷயத்திலயே  அவுங்களோட சின்ன புத்தியாலதான் இன்னும் விடிவு வராம இருக்கு. அதால நீ

அவுங்க யோசனையை கேட்டீனா உன் வாழ்க்கை அவ்வளோதான்” என்றபடி கல்பனாவின் முகத்தை நோக்கினாள் சுமலதா.

கல்பனாவுக்கு இப்போதுதான் நீராஜாவின் பித்தலாட்டம் புரிய ஆரம்பித்தது. அவள் முகம் தெளிவதைப் பார்த்துவிட்டு சுமலதா தொடர்ந்தாள்.

 ஒண்ணுமே இல்லாத இந்த சின்ன விஷயத்துக்காக நீ உன் பிறந்த வீட்டுக்குப் போயிட்டேன்னா சுனிலுக்கு உன் மேல கோபம் வராதா? ஒருவேளை அவர் சமையலுக்கு ஆள் வைக்கவேயில்லைன்னா நீ அவரைவிட்டு நிரந்தரமாவே பிரிஞ்சு போய்டுவியா ? இது உனக்கே பைத்தியக்காரத்தனமா படலை? அதனால கொஞ்ச நாளைக்கு நீயே எல்லா வேலையையும் பாத்துக்கோ. உனக்கு ஒரு குழந்தை உண்டானா தானாவே உன் கணவர் ஆள் வைப்பார். அதுவரைக்கும் பொறுத்துக்கோ”. அக்கறையுடம் சுமலதா பேசி முடிக்க, கல்பனாவின் மனம் நெகிழ்ந்தது. 

நன்றியுடன் சுமலதாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். "ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்  அக்கா....எவ்ளோ பெரிய பிரச்சனையில் விழ இருந்தேன். நல்லவேளை நீங்க வந்தீங்க, நான் தப்பிச்சேன்" என்றாள் நன்றியுடன்.

“இன்னிக்கு ஒரு முக்கியமான பைலை மறந்துட்டேன் அதை எடுக்கத்தான் திரும்பவும் வீட்டுக்கு வந்தேன். வந்தது நல்லதா போச்சு, இல்லைன்னா ஒரு குடும்பமே நாசமாப் போயிருக்கும். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். இனிமே என் வீட்டுக்கு நா இருக்கறப்ப மட்டும் வா. இல்லைன்னா மாமியார் மறுபடியும் அவுங்க வேலையை ஆரம்பிச்சிடுவாங்க.

நான் வரட்டுமா? கதவைத் தாழ் போட்டுக்கோ. " சுமலதா சென்ற பிறகு சற்று நேரம் நிம்மதிப் பெருமூச்சுடன் அமர்ந்திருந்தாள் கல்பனா .

பிறகு தெளிந்த மனதுடனும் மகிழ்ச்சியுடனும் கணவனுக்குப் பிடித்த  சமையலை செய்ய ஆரம்பித்தாள்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.