(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 25 - தேவி

vizhikalile kadhal vizha

செழியனின் ஊர் தென்காசி அருகே இலஞ்சி ... கிராமும் இல்லாத நகரமும் இல்லாத ஊர். கிராமத்தை விட சற்று பெரிய ஊர். டவுன் வகையறாவை சேர்ந்தது. அழகான முருகன் கோவில் உண்டு. இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் விவசாயம்.

அருகிலே தென்காசி, குற்றாலம், மணிமுத்தாறு டேம் எல்லாம் இருப்பதால் தண்ணீர் பஞ்சம் கிடையாது. கடும் கோடை காலம் கூட இங்கே சற்று இதமாக இருக்கும்.

மக்களும் எளிமையான மக்கள். அங்கே உள்ளவர்கள் பெரும்பாலும் உறவினர்களே.. ஒன்றுக்குள் ஒன்று என்பது போலே..

செழியனின் அப்பாவிற்கு இந்த ஊரில் நிலம் உண்டு. சற்று பணக்காரரும் கூட. என்றாலும் அதற்காக கர்வம் கொண்டவர் கிடையாது.. பல பேரை வைத்து வேலை வாங்கும் நிலையில் இருப்பதால் இயல்பாக அவர் குரல் பெரிதாக இருக்கும். அதோடு நியாயவாதியும் கூட. அவரின் மகன் எனும்போது செழியனுக்கும் இயற்கையாகவே லீடர்ஷிப் க்வாலிட்டி இருந்தது..

சின்ன வயதில் லீவ் விடும் போதெல்லாம் வருபவன், பிறகு வருடம் ஒரு முறை வந்தாலும் அவனின் நண்பர்கள் மத்தியில் முதலாவதாகவே இருப்பான்.

இரவு செகண்ட் ஷோ சினிமா முடிந்து வந்தவர்கள், ஊர் பொது மண்டபத்தில் சற்று நேரம் சீட்டு விளையாடி விட்டு, அவன் நண்பன் சொன்னது போல் மூன்று மணி ஆகவும் ஊரில் ஒரு ஒரு தெருவாக சுற்ற ஆரம்பித்தனர்.

வயசுபசங்கள் எல்லாம் சேர்ந்து தங்கள் குழுவிற்கு நண்பர்கள் குழு என்று வைத்து இருந்தார்கள்.

இவர்கள் மூன்று மணிக்கு கிளம்பும்போதே ஊர் பொது மணடபத்தில் இருந்த மைக் செட்காரனை எழுப்பி பாட்டு போட சொல்ல , காலையில்

“விநாயகனே .. வினை தீர்ப்பவனே “

என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. அந்த காலை வேளையில் கேட்பதற்கு மிகவும் தெய்வீக காலையாக அமைந்தது.

ஊரில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே வீடு முழுதும் வெள்ளை அடித்து வேண்டாததை எல்லாம் ஒதுக்கி சுத்தபடுத்தி வைத்து இருப்பார்கள்.

காலையில் ஒரு சில வீடுகளில் வாசலில் காவி கோடு கோடாக அடிக்க ஆரம்பித்து இருந்தார்கள்.

அன்றைக்கு காலையில் கோலபோட்டி அறிவித்து இருப்பதால் அங்கே அங்கே கன்னி பெண்கள் வாசல் தெளித்து கோலம் போட ஆரம்பித்து இருந்தனர்.

ஒவ்வொரு தெருவாக சுற்றி வந்தவர்கள் அங்குள்ள பெண்களிடம் வம்பு வளர்த்து கொண்டே வர, அதில் ஒரு பெண்

“செழியன் அண்ணே.. நேத்தைக்கு பெரியம்மா கிட்டே கேட்டதுக்கு இன்னைக்கு காலை வண்டிலேதான் வருவீங்கன்னு சொன்னாக? எப்போ வந்தீங்க.. ?” என்று ஒரு பெண் வினவ,

இன்னொருவரோ ,

“எம்லே .. செழியா.. நீ வந்துருக்கன்னத அண்ணே சொல்லவே இல்லையே? மறந்துட்டாகளோ? இல்ல நீதான் ஒரு எட்டு வந்து இந்த சித்தப்பன பார்த்துட்டு போயிருக்க்லாமலே ?” என கேட்க, இருவருக்கும் பொதுவாக

“நேத்தைக்கு ராவுலே வந்தேன் தங்கச்சி.. சித்தப்பா , நான் வரும்போதே நம்ம பயலுவ என்னிய கூட்டிகிட்டு போயிட்டானுக... விடிய விடிய எல்லோரும் கூத்தடிச்சுட்டு இப்போதான் ஊருக்குள்ளே வாரேன் .. “

இவன் பதில் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே , உள்ளிருந்து வந்த அவர் மனைவி,

“ஆமாமா.. புள்ளைய சாப்பிட கூட விடாம கூப்பிட்டு போயடானுகலாம்.. மதினிய சித்த முன்னாடி பொங்க சாமான் இருக்கா.. வாச கோலம் போட உதவி செய்யலாமேன்னு கேட்க போனேன்.. சொன்னாக..”

“எலெய்.. நீங்க கூத்தடிச்சது காணாதுன்னு , ஊருலேர்ந்து வந்த புள்ளைய வேற இழுத்துட்டு போய்டீங்களாக்கும்.. கொஞ்ச நேரம் உறங்கி எழுந்த பொறவு அவன கூப்பிட்டுக்க வேண்டியதுதானே..’

“சித்தப்பா.. அவம் வாறதே வருஷத்துக்கு ஒரு வாட்டி.. இப்போ உறங்காட்டி என்ன..? உங்க அண்ணன் புள்ளைய யாரும் தூக்கிட்டு போகாம நாங்க பார்த்துக்குறோம்.. நீங்க பொங்க வைக்கிற சோலிய பாருங்க சித்தப்பு..”

என்றபடி அந்த தெருவில் இருந்து கிளம்பினர்.. வரும் தெருக்களிலும் இதே போல் விசாரணைக்கு பதில் சொன்னபடி சென்றார்கள்.

வழக்கமாக கோலம் போடும் பெண்களை பார்த்து ஆளாளுக்கு ஜொள்ளு விட்டுக் கொண்டு செல்வார்கள். செந்தில் இருந்தால் அத்தனை பேரும் நீந்தித்தான் வீட்டிற்கு செல்ல வேண்டும்..

ஆனால் இன்று ஏனோ செழியன் சற்று மௌனமாகவே வந்தான். அவன் எண்ணமெல்லாம் தன் மலரை நோக்கியே சென்றது. ஊருக்குள் வந்ததில் இருந்து, அடுத்த வருடம் மலரையும் அழைத்துக் கொண்டு இங்கே வரவேண்டும் என்ற நினைவே.

செழியனிற்கு அவனின் ஊர் மிக பிடித்தமானது. சுத்தமான காற்றும், மலை மேல் முருகனும், வெள்ளந்தியான மனிதர்களும் என அவன் விரும்பும் ஊர். அதனால் தான் அவன் அப்பாவின் முயற்சி புரிந்து வராமல் தவிர்க்க நினைத்தாலும், முடியாமல் ஊருக்கு வந்தவன் செழியன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.