(Reading time: 11 - 22 minutes)

மலருக்கு இந்த ஊர் பிடிக்குமா? இதை எல்லாம் ரசிப்பாளா? அதோடு அவளிடம் பேசி கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஆகி விட்டது .அது வேறு அவனின் எண்ணத்தை அவளிடமே பிடித்து வைத்துக் கொண்டது.

அவன் நண்பனும், உறவினனுமான ஒருவன் “என்னவே செழியா .. கம்முன்னே வாறே..? மேலுக்கு சுவமில்லையோ ?” என கேட்டான்..

“ஒன்னும் இல்லபா.. ஏதோ யோசனை..”

“சரி .. சரி .. மணி அஞ்சாவ போகுது.. வீட்டுக்கு போய் குளிச்சு முழுகி. சாமி கும்பிட்டு மறுபடி ஒரு எட்டு மணிக்கா மண்டபத்துக்கு போவோம்லே.. “

“சரிதா. நானும் போய்ட்டு மண்டபத்துக்கு வந்துர்றேன்.. செந்திலும் வந்துருவான்லே..?”

“வாரேன்னுதான் சொல்லிருக்கான்.. பார்ப்போம் “ என்றபடி எல்லோரும் கிளம்பினர்.

வீட்டிற்கு சென்ற செழியன் , அவன் அம்மா பொங்கல் வைக்கும் வேலையில் இருப்பதை பார்த்து விட்டு உள்ளே செல்ல , அவன் அம்மாவோ

:செழியா .. காபிதண்ணி தரட்டுமா? ரா முழுதும் என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?”

“வேணாம்மா.. அங்கே நம்ம நாயர் கடையில் டீ குடிச்சுட்டுதான் வந்தேன்.. நீங்க வேலைய பாருங்க..”

“சரிய்யா.. நீ அப்பா வாரதுக்குள்ளே குளிச்சுட்டு வந்துடு.. உள்ளே சாமி மாடத்திலே புது வேட்டி சட்டை எடுத்து வச்சிருக்கேன்... அதை கட்டிக்கிட்டு வந்துடு.. “ என்று சொல்ல

“சரிம்மா” என்றபடி கிளம்பினான்.

“தம்பி சீக்கிரம் வந்துரு.. பானை வைக்க போறேன்.. “

தலையாட்டி விட்டு சென்றான். உள்ளே சென்றவனோ தன் போன் எடுத்து பார்த்தான்.. மலருக்கு மெசேஜ் அனுப்புவுமா, இல்லை கால் பண்ணலாமா என்று யோசித்துக் கொண்டு இருந்தான்.

இவ்ளோ காலையில் அழைத்தால், அவள் வீட்டில் பிரச்சினை ஆகி விடும்.. வாட்ஸ்அப்பில் ஸ்டேடஸ் பார்த்தல் ஆன்லைனில் இல்லை.. என்ன செய்ய என்று திணறினான்.. பிறகு வாட்சப்பில்

“ஹாய்.. விழிம்மா.. நான் ஊருக்கு வந்துட்டேன்.. “ என்ற மெசேஜ் மட்டும் கொடுத்து விட்டு குளிக்க சென்றான்.

குளித்து விட்டு அவன் அம்மா சொன்ன படி வேட்டி கட்டி கொண்டு வந்தவன், வாசலை நோக்கி போக, அங்கே எல்லாம் தயாராக இருந்தது.

வாசலில் செங்கல் வைத்து அடுப்பு மூட்டி, மண்பானைக்கு வெத்திலை, தேங்காய், பழம், கரும்பு எல்லாம் கட்டி அடுப்பில் ஏற்ற தயாராக வைத்து இருந்தார்கள்.

இவனும் வந்தவுடன் , கடவுளை வேண்டி பானையை அடுப்பில் ஏற்ற , அவனும் அவன் அப்பாவும், வருகிறவர்களுக்கு கொடுப்பதற்காக வெற்றிலை , பாக்கு பழம், சின்ன சினன் துண்டுகளாக கரும்பு அதோடு அவர்கள் நிலத்தில் வேலை செய்பவர்கள் குடும்பத்திற்கு வேட்டி , சேலை என எடுத்து வைத்தார்கள்.

அதே போல் அவர்களோடு வரும் குழந்தைகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் ரப்பர் அடங்கிய ஒரு பாக் இருந்தது. இது செழியனின் ஏற்பாடு.. அவன் அப்பா முதலில் எல்லாம் கூட வரும் குழந்தைகளுக்கு பணமாக வைத்துக் கொடுப்பார்.. செழியன் வேலைக்கு சென்ற பிறகு , இந்த வழக்கம் வைத்துக் கொண்டான்.

அவன் அப்பாவும் பணம் கொடுப்பார்.. என்றாலும் இது சின்ன பிள்ளைகளுக்கு உபயோகமாக இருக்கும் என்று எண்ணி செய்வான். அதோடு இன்னும் சிலர் மூன்று வயதுக்கு கீழ் உள்ள குழந்த்கைளும் எடுத்து வருவார்கள். அந்த குழந்தைகளுக்கு சின்ன விளையாட்டு பொருள் வயதுக்கேற்றவாறு வைத்து இருப்பான்.. இது எல்லாம் அவன் வெளியூர் சென்றால் கூட, இவர்கள் கடையில் இருந்து வாங்கி, மற்ற பொருட்கள் எடுத்து வரும்போது இதையும் சேர்த்து பாக் செய்து அனுப்ப செய்தான்.

எல்லாம் எடுத்து வைக்கவும், பொங்கல் பொங்கவும் சரியாக இருக்க, அவன் அம்மா மணி அடித்து “பொங்கலோ பொங்கல்” என குலவையிட்டு கூவினார்.. இவர்களும் அங்கே சென்று வணங்கினார்கள்.

எல்லாம் முடிந்து சரியாக ஆறுமணிக்கு சூரிய உதயத்தில் பொங்க பானையை இறக்கி, அப்படியே படைத்தனர்.

முதலில் மேளம் வாசிப்பவர்கள் வந்து நல்ல நாளில் இனிய ஆரம்பமாக இருக்கட்டும் என்று மேளம் வாசித்து செல்வார்கள். இவர்கள் வீட்டில் வாசிக்க, இவர்களும் வேட்டியோடு தாம்பூலமும், பணமும் வைத்துக் கொடுத்தார்கள்.

பிறகு வரிசையாக தங்கள் நிலத்தில் வேலை செய்பவர்கள் வர, வர அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தார்கள்.

இதனைகிடையில் செழியன் அவ்வப்போது தன் செல் போனை பார்த்துக் கொண்டான். மலரிடம் இருந்து தகவல் வந்ததா என்று..

எட்டு மணியாகும் முன், நண்பர்கள் பட்டாளம் வாசலில் கூடி விட, அவசரமாக டிபன் சாப்பிட்டு விட்டு, அவர்களுக்கு வாங்கிய சட்டைகளை எடுத்துக் கொண்டு அவர்களோடு சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.