(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று  - 04 - வத்ஸலா

Kannathil muthamondru

ன் அவுட்!!! விதிகளின் படி அவன் அவுட்தான். ஆனால் மனம் ஏனோ ஒப்புக்கொள்ள மறுத்தது. எதிர் முனையில் இருந்த அவன் பரமேஷ் அகர்வால்!!!

ஆம்!!! ஹெல்மெட்டை கழற்றிவிட்டு இதழோரம் தேங்கிய ஒரு கேலிப்புன்னகையுடன் இவனை பார்த்திருந்தான் அவன். இவனை வெளியேற்ற வேண்டுமென்றே அவன் நடத்தியது இந்த ரன் அவுட் என்பது ஹரிஷுக்கு நன்றாகவே புரிந்தது.. சுரீரென பொங்கியது இவனது கோபம்.

‘இல்லை இப்போது எதுவும் செய்ய முடியாது. நமது தேசம் மட்டுமில்லாமல் உலகமே இந்த ஆட்டத்தை கவனித்துக்கொண்டிருக்கும். இப்போது எல்லாவற்றையும் விட அணியின் வெற்றியே முக்கியம்’ ஒரு முறை அவனை தீர்கமாக பார்த்துவிட்டு தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு கொண்டே ஹெல்மெட்டை கழற்றியேபடியே நடந்தான் ஹரிஷ்

அடுத்ததாக களமிறங்க வேண்டியவன் ரகு!!! உள்ளே சென்றுக்கொண்டிருக்கும் இவனுக்கு எதிர்ப்பட்டான் அவன்.

‘பரம்!!! கேர்ஃபுல்!!! கிடைத்த அந்த இரண்டு நொடி இடைவெளியில் இவன் அவனை எச்சரிக்க, ஒரு முறை புருவங்கள் ஏறி இறங்க அவன் சொல்ல வந்ததை புரிந்துக்கொண்டவனாக தலை அசைத்துவிட்டு நடந்தான் ரகு.

அனுராதாவின்  மனம் கூட ஆறவில்லை. பல வருடங்களாக கிரிக்கெட் ஆட்டத்தை கவனிப்பவள் இவள். நடந்த அந்த ஆட்ட இழப்பு தனிச்சையாக நிகழவில்லை என்றுதான் தோன்றியது இவளுக்கும்.

இங்கே இவன் படிகளை கடக்கும் நேரத்தில் ஒரு முறை அவளை திரும்பி பார்த்து ஒரு புன்னகையை வீச எல்லாம் சரியாய் நடக்கும் என்பதை போல் ஒரு மயிலறகு புன்னகை அவளிடத்தில்.

சட்டென சமன் பட்டது மனது ‘என்ன மாயமிருக்கிறதாம் அவளிடத்தில்???’ புரியவில்லை அவனுக்கு. ஒரு ஆழமான சுவாசத்துடன் விறுவிறுவென மேலே ஏறினான் ஹரிஷ்.

‘அனு கூட அஞ்சே அஞ்சு நிமிஷம் பேசிட்டு இருந்தா போதும் மனசிலே இருக்கிற அழுத்தமெல்லாம் காணாம போயிடும். அவ்வளவு பாசிடிவ் எனெர்ஜி அவகிட்டே’ அவனது கல்லூரி நண்பர்கள்  அடிக்கடி சொல்வார்கள் அவனிடத்தில். இன்றைக்கு ஏனோ அது உண்மை என தோன்றியது அவனுக்கு.

கல்லூரியில் இருவரும் படித்தது ஒரே பிரிவு.. படிப்பில் அவர்களது பிரிவில் எல்லாருமே அனுராதாவின் நண்பர்கள். ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல் அனுவை எல்லாருக்கும் பிடிக்கும். இவன் மட்டும் அவளிடம் அத்தனை நெருங்கியதில்லை.

இவளிடம் மட்டுமென்றில்லை பொதுவாகவே பெண்களிடம் அவன் அத்தனை நட்பு பாராட்டியதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆண்களிலுமே வெகு சில நண்பர்களே அவனுக்கு.

படிப்பில் அவன் எப்போதுமே முதலிடம். கல்லூரி படிப்பின் இரண்டாம் ஆண்டை அடைந்தவுடனேயே  அந்த கல்லூரியின் கிரிக்கெட் அணியின் தலைவனாகி போனான். சரியாக சொல்ல வேண்டுமென்றால் அந்த கல்லூரியின் முடி சூடா மன்னனாக இவன் இருந்த காலமது  

இவன் கல்லூரிக்காக விளையாடும் ஒவ்வொரு கிரிக்கெட் மேட்சுக்கும் தவறாமல் ஆஜராவாள் அவள். மனம் திறந்து பாராட்டுவாள். முதலாண்டில் இவன் விளையாட்டை முதல் முறையாக அவள் பார்த்த போதே சொன்னாள் அனு.

‘கண்டிப்பா சொல்றேன். ஒரு நாள் இந்தியன் கிரிக்கெட் டீம்லே நீ விளையாடுவே ஹரிஷ். உன்கிட்டே நல்ல திறமை இருக்கு’ அன்றைக்கு அது அவனுக்கு பெரிதாய் தெரியவில்லை.

சின்னதாய் ஒரு ‘தேங்க்யூ’ வை உதிர்த்துவிட்டு நகர்ந்தான் அவன்.

‘அனுக்கு எப்பவுமே நீ கொஞ்சம் ஸ்பெஷல்தான்’ சொல்வார்கள் நண்பர்கள். அதனாலேயே அவளை விட்டு விலகி விலகி செல்வான் அவன்.

அவர்கள் சொல்வது மட்டுமில்லாமல் அவனுக்குமே அவள் மனம் புரிந்ததுதான். அவனது பிறந்தநாட்களில் அவனை விட அவளே மகிழ்ச்சியாக இருப்பாள். அவனது ஒவ்வொரு வெற்றிக்கும் சந்தோஷ கடலில் மூழ்கி திளைப்பாள்.

தன்னைத்தானே  ஒரு அரசனாக அவன் கற்பனை செய்து வைத்திருந்த காலமது. அங்கே இருந்த எந்த பெண்ணுமே தனக்கு நிகரானவள் இல்லை என்றுதான் தோன்றும் அவனுக்கு

‘இதென்ன பெரிய விஷயம். என்னை பார்த்தால் எல்லா பொண்ணுங்களுக்கும் பிடிக்கும்.’ சொல்லிக்கொள்வான் அடிக்கடி. அப்போதெல்லாம் அவனிருந்த மனநிலையில் அனுராதாவின் அன்பை சரியாக புரிந்துக்கொள்ள தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும்

கல்லூரிக்கு வரும் அவசரத்திலும் நண்பர்களுக்கென விதம்விதமாக சமைத்து எடுத்து வருவாள் அவள். அதற்காகவே அவளை சுற்றும் ஒரு கூட்டம். இவன் அவள் அருகில் கூட செல்ல மாட்டான்.

ஆனாலும் இவனும் அவளிடம் சென்று நிற்கும் ஒரு நாளும் வந்தது. அது இன்னமும் இருக்கிறது அவனது மனதில்.

அன்றைக்கு கல்லூரியில் ஏதோ ஒரு முக்கியமான தேர்வு. வீட்டில் காலை உணவு நேரத்துக்கு தயாராக இருக்கவில்லை. சாப்பிடாமல் கிளம்பி வந்தாகி விட்டது கல்லூரிக்கு. அன்றைக்கென்று கல்லூரி கேன்டீனும் விடுமுறை. வெளியில் சென்று சாப்பிட்டு வரவும் நேரமில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.