(Reading time: 13 - 25 minutes)

இதுவரை இப்படி சாப்பிடாமல் வந்ததில்லை அவன். பசி என்ற ஒன்றே அவனுக்கு புதிதுதான். அதனோடு தலைவலியும் சேர்ந்துக்கொண்டது. இதோடு பரிட்சையில் கவனம் செலுத்த முடியுமா??? புதிதாக ஒரு கேள்வி முளைக்க அப்போது வகுப்புக்குள் வந்தாள் அனுராதா.

‘அனு..’ என்றைக்கும் இல்லாமல் அவன் அவளை அழைத்ததே அவளுக்கு மிகப்பெரிய சந்தோஷம்.

‘சொல்லு ஹரிஷ்..’

‘ரொம்ப பசிக்குது. ஏதாவது சாப்பிட வெச்சிருக்கியா???’

‘அய்யோ... பசிக்குதா. இதோ பூரி இருக்கு சாப்பிடறியா??? இன்னைக்கு நிறைய செய்ய டைம் இல்லை. நாலுதான் இருக்கு போதுமா உனக்கு’ கேட்டுக்கொண்டே அவசரமும், சந்தோஷ பரபரப்புமாக அவனிடம் கொடுத்தாள் அதை.

வகுப்பில் அவர்கள் இருவர் மட்டுமே இருக்க அவனருகில் அமர்ந்தாள் அவள். சட்டென டப்பாவை திறந்து அவசரமாக சாப்பிட ஆரம்பித்தான்.

சின்ன புன்னகையுடன் அவனையே பார்த்திருந்தாள் அனுராதா ‘பிடிச்சிருக்கா ஹரிஷ்??? நானே செஞ்சது’

ஹேய்...கம் ஆன்... அனு.. .இதெல்லாம் ஒரு சாப்பாடா??? நான் சாப்பாடு ஆறிப்போயிருந்தா கையாலேயே தொட மாட்டேன்... இன்னைக்கு வேறே வழி இல்லை. காலையிலே சாப்பிடலை எக்ஸாம் எழுதணும் அதான்.’ பட்டென முடித்திருந்தான். மொத்தமாக வாடித்தான் போனாள் அவள்.

‘ச.. சரி.. நீ சாப்பிடு...’ குரலின் ஸ்ருதி மெல்ல இறங்கியது.

‘சட்டென்று அவள் மனதை உடைத்துப்போட்டேனே!!! அப்படி என்ன திமிர் எனக்கு??? அன்று காலையில் அவள் சாப்பிடவென எடுத்து வந்த உணவைத்தானே எனக்கு கொடுத்திருக்க வேண்டுமவள். அதைக்கூட புரிந்துக்கொள்ள முடியாத திமிர் எனக்கு அப்போது’’

புரிந்தது!!! பின்னொரு நாளில் வாழ்க்கை முகத்தில் அறைந்து எல்லாவற்றையும் புரியவைத்தது அவனுக்கு. அதன் பிறகு அவன் அனுராதாவை நினைக்காத நாளென்று ஒன்று வந்ததில்லை.

னம் ஏதேதோ நினைவலைகளில் மிதந்துகொண்டிருக்க ரசிகர்களின் உற்சாக குரல் தரை இறக்கியது அவனை. ரகு அடித்த பந்து தொட்டிருந்தது பௌண்டரியை. சர்வ ஜாக்கிரதையாக விளையாடி முப்பது ஓட்டங்களை தொட்டிருந்தான் ரகு. இந்தியாவின் ஸ்கோர் நூற்றி எழுபதை தொட்டிருந்தது.

இப்போது பரம் சந்தித்தான் அந்த பந்தை.. முன்னால் சற்றே பாய்ந்து பந்தை சந்திக்க முற்பட பந்து கீப்பரின் கைக்கு செல்ல, அவன் திரும்புவதற்குள் ஸ்டம்பை தொட்டிருந்தது பந்து. எப்போதுமே பந்தை முன்னால் சென்று எதிர்க்கொள்ளும் போது நிறையவே கவனம் தேவை.

‘ஸ்டம்ப்டு’.

பரமின் கோபம் அவன் பேட்டால் தரையை ஓங்கி அடித்ததிலேயே புரிந்தது ரகுவுக்கு. ஆத்திரம் கொப்பளிக்க உள்நோக்கி நடந்தான் அவன். தொடர்ந்தது ஆட்டம்

இந்தியா இருநூற்றி இருபதை தொட்ட நிலையில் சரிந்திருந்தன அனைத்து விக்கெட்டுகளும். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது ரகு மட்டுமே

தென் ஆப்ரிக்க வீரர்களிடம் கொஞ்சம் தன்னபிக்கை கூடி இருந்தது. இந்திய ரசிகர்கள் சற்றே தளர்ந்திருந்தனர். பகலிரவு ஆட்டம். மெல்ல இருள் சூழ ஆரம்பித்த நேரத்தில் பந்து வீச களமிறங்கினர் இந்திய வீரர்கள் மைதானம் விளக்குகளின் ஒளியில் மின்னிக்கொண்டிருந்தது

பெரிய அதிரடிகள் இல்லாமல் நிதனாமாக துவங்கியது தென் ஆப்பரிக்க ஆட்டம். முதல் சில ஓவர்களில் இந்திய வீரர்களும் ரன்களை கொடுக்கவில்லை. பத்து ஓவர்களில் அவர்கள் ஐம்பது ரன்களை தொட்டிருக்க, மெல்ல பறக்க துவங்கியது பந்து. தொடர்ந்து பௌண்டரிகள் வர ஆரம்பித்த நேரத்தில், அவர்கள் எண்பது ரன்களை தொட்டிருந்த நேரத்தில் பந்து வந்தது ஹரிஷின் கைக்கு.

‘அவுட்!!!’ அவன் போட்ட முதல் பந்தில் விலகி தெறித்திருந்தன ஸ்டம்புகள். ‘

ஊ.ஊஊ........ஹூ.ஹூ......... அதிர்ந்தது அரங்கம். துள்ளி குதித்தாள் அவனவள்.

அடிப்படையில் அவனொரு நல்ல பந்து வீச்சாளன் என்பதை மிக அழகாக நிரூபிக்க ஆரம்பித்தான் அவன். அதிக ரன்கள் கொடுத்து விடாத, திட்டமிட்ட பந்து வீச்சில் தென்னாப்ரிக்காவை அவன் கட்டுக்குள் கொண்டு வர, அவனுக்கு துணை வரத்துவங்கினான் அடுத்து பந்து வீசிய ரகு.

அப்போது தான் நடந்தது அது. சற்றே மெதுவான பந்து. நடு பேட்டில் எதிர்க்கொள்ளப்பட பந்து எழும்பியது மேலே மேலே அதற்கு நேர் கீழே இருந்தது பரம்.

‘கேட்ச்!!!’ கூவினான் ஹரிஷ்.

என்ன செய்கிறான் அவன்??? மிக எளிதாக பிடிக்கக்கூடிய பந்து. அதை பிடிக்க போவதைப்பொன்ற பாவனையில் ஓடியவன் அதை இயல்பாக தவற விடுவதைப்போல் தவற விட பந்து தரையில் பட்டு பௌண்டரியை தொட நான்கு ரன்கள். அடுத்து இரண்டு பந்துகள் கடக்க மறுபடியும் பரம் இன்னொரு கேட்சை தவறவிட அது ஆறு ரன்களாக மாறி இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.