(Reading time: 13 - 25 minutes)

சற்றே தடுமாறிப்போனான் ஹரிஷ். அவன் கவனமும் மெல்ல சிதற அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள். தென்னாப்பிரிக்க ரசிகர்களிடம் உற்சாகம். இந்திய வீரர்களிடம் சிறிதே இறுக்கம். கேப்டனின் முகத்தில் கொஞ்சம் மாற்றம். பந்து இப்போது ரகுவிடம் போனது.

‘தோற்றுவிடுமா இந்தியா??? என்னால் எதுவும் செய்ய முடியாதா??? கொஞ்சம் தளர்ந்து போனவனாக நின்ற ஹரிஷை தவிப்புடனே பார்த்திருந்தாள் அனுராதா.

‘ஜெயிக்க வேண்டும். இந்தியா ஜெயிக்க வேண்டும். ஹரிஷ் மிளிர வேண்டும் இப்போது என்ன செய்ய???’ யோசனை அவளிடம். அடுத்த சில நிமிடங்கள் கழித்து பந்து ஹரிஷின் கைக்கு மறுபடியும் வந்த அந்த நேரத்தில் அவள் கையில் இருந்தது அந்த அட்டை. அதிலிருந்தது  அந்த வாசகம்.

‘யூ கேன் டூ இட் ஹரிஷ்!!!’ உயர்த்தி காட்டிக்கொண்டிருந்தாள் அந்த அட்டையை. ‘உன்னால் முடியும் ஹரிஷ்’

பந்தை வாங்கிக்கொண்டு அவன் தயாராக திரும்ப அந்த பிரம்மாண்ட டிவியில் அந்த வாசக அட்டையுடன் அவள் முகம்  ‘யூ கேன் டூ இட் ஹரிஷ்!!!’

என்னவளா??? என்னவளா அது??? சரேலென புதிதாய் ஒரு உற்சாக ரத்தம் அவனுக்குள்ளே பாய அவனது கூர்மையான பார்வை ஸ்டம்புகளை குறி வைக்க அடுத்ததாக அங்கே கேட்ட சத்தம் ஸ்டம்புகளின் எகிரலில் எழுந்த சத்தம். அதை தாண்டி ரசிகர்களின் கூவல்.

‘கிளீன் பௌல்டு’

அடுத்த ஆட்டக்காரன் வர இப்போது ஹரிஷின் அடுத்த பந்து, அவனது தலையை தாண்டி பறந்து சென்றது பந்து. நான்கு ரன்கள் வந்தன எதிரணிக்கு. தளரவில்லை தென் ஆப்ரிக்கா.

‘நோ... நோ..’ தலை அசைத்துக்கொண்டான் ஹரிஷ். சொல்லிக்கொண்டான் அவன் தனக்குள்ளே. அடுத்த மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகள் எடுக்கிறேன் நான்.

‘ஐ.. வில் டூ இட் அனு..’ ‘ஜெயிக்கும்!!! இந்தியா ஜெயிக்கும்!!!

அடுத்த பந்து. போன பந்துக்கும் இந்த பந்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அதே போன்றே அடித்தான் அவன். அப்படித்தான் விளையாடுவான் என இவனுக்கும் தெரியும்.  நேரே இவன் தலைக்கு மேலே வந்தது பந்து இரு கால்களையும் உயர்த்தி ஒரு துள்ளல் பந்து சேர்ந்திருந்தது இவன் கைகளில்.

‘அவுட்!!!’

‘ஹரிஷ்.. ஹரிஷ்.. ஹரிஷ்..’ கூவ ஆரம்பித்திருந்தாள் அனு. அவளும், அவளது அட்டையும்  மறுபடியும் அந்த பிரம்மாண்ட டி.வியில்.

‘ஹரிஷ்... ஹரிஷ்... ஹரிஷ்...’  அவளுடனே சேர்ந்துகொண்டனர் இன்னும் பல ரசிகர்கள்.

‘எஸ்... எஸ்.. இதோ வரேன் அனும்மா ..’ சொல்லிக்கொண்டான் ஹரிஷ்.

வந்து நின்ற அந்த பேட்ஸ்மேனை நோக்கி ஒரு முழு நீள பந்து, அவன் அதை எதிர்க்கொள்ள சற்றே தாமதிக்க தெறித்து இரண்டு துண்டாகி கதறிக்கொண்டு சென்று விழுந்தது ஒரு ஸ்டம்ப்.

‘ஊ... ஹூ....’ ரசிகர்களின் உற்சாக கத்தலில் அதிர்ந்தது அரங்கம். ‘வீ வான்ட் ஹேட்ரிக்..’

‘யூ கேன் டூ இட்..’  ‘யூ கேன் டூ இட்..’ ஹ...ர்ர்ர்ர்... ரிஷ் ஹ...ர்ர்ர்ர்...ரிஷ்’ அவளது வாசகம் இப்போது பல ரசிகர்களின் உற்சாக கூவலில் சேர்ந்திருந்தது.

கரம் கூப்பி கண் மூடி இருந்தாள் அனு ‘இறைவா சக்தி கொடு. என்னவனுக்கு சக்தி கொடு..’ 

இதற்கெல்லாம் நடுவில் அங்கே முகத்தில் கோபக்கோடுகள் ஓடிக்கொண்டிருக்க நின்றிருந்தான் அவன் பரம் அகர்வால். ‘இவன் மூன்றாவது விக்கெட்டை வீழ்த்தக்கூடாது!!!’

கண்களை மூடி மூச்செடுத்து தன்னை நிதானப்படுத்திக்கொண்டான் ஹரிஷ். ‘யூ கேன் டூ இட்..’  ‘யூ கேன் டூ இட்..’ அரங்கமே அதிரும் சத்தம் அப்படியே அவனுக்குள் இறங்க, பந்தை எடுத்துக்கொண்டு ஓடி வந்தான் அவன்

சின்னதாய் ஒரு கணக்குடன் எறிந்தான் ஒரு மெதுவான பந்தை. நினைத்தபடி பேட்டில் பட்டு மேலே எழும்பியது பந்து ஆனால் அவன் நினைக்காதவாறு அதை நோக்கி நகர்ந்தான் பரம்.

விட்டு விடுவான் இவன்!!! நிச்சயமாக விட்டு விடுவான்!!! புரிந்தது ஹரிஷுக்கு. அங்கே லாங் ஆனில் நின்றிருந்தான் ரகு.

‘ரகு கேட்ச்..’ தன்னை மறந்து கூவினான் இவன்.

எப்படி வந்தானோ??? அடுத்த இரண்டாவது நொடியில் அவனும் பரமும் அருகருகே.!!! பந்து இருவரையும் நோக்கி கீழே வர பரமை தோளால் இடித்து சற்றே நகர்த்தி தள்ளிய ரகுவின் கைகளில் தஞ்சமடைந்தது பந்து

‘ஏ... ஹே... ஊ...ஊ... ஊ...’ அரங்கமென்ன??? இந்தியாவின் பல மூலைகளில் இருந்த மக்களும் துள்ளிக்கொண்டிருக்க பரமை தவிர அத்தனை இந்திய வீரர்களும் ஓடி வந்து ஹரீஷை சூழ்ந்துக்கொள்ள, ரகு அவனை தூக்கியே விட சந்தோஷமாய் சிரித்தவனின் பார்வை டி.வி.யில் தேடியது அவள் முகத்தை. 

இப்போது டி.வியில் தெரியவில்லை அவள். இன்னும் நிறையவே முக்கிய புள்ளிகள் அங்கே வந்திருக்க அவர்கள் அரங்கத்தின் முன் பகுதிக்கு வந்திருந்தனர். காமெராக்களும் அவர்களை கவனிக்க துவங்கி இருந்தன.

இப்போது பந்து வீசுவது ரகுவின் முறை. ஃபீல்டிங் செய்வதற்கு இவன் லாங் ஆனை அடைய பார்வை மட்டும் அடிக்கடி அவளை தேடிக்கொண்டே இருந்தது.

‘யூ கேன் டூ இட் ஹரிஷ்’ இன்னமும் அவனுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. எல்லாம் அவளால்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.