(Reading time: 8 - 16 minutes)

“இவனை படிக்க வெளிநாட்டுக்கு அனுப்பினோமா, இல்லை இப்படி திருட்டு கல்யாணம் பண்ணிட்டு வர வெளிநாட்டுக்கு அனுப்பினோமா?... பாருப்பா, இவன் பண்ணிட்டு வந்த காரியத்தை?...”

பெற்றவள் மனம் தாங்காது கேட்டிட, ரஞ்சித்தோ அமைதியாக தலைகவிழ்ந்து நின்றான்…

“செய்யுறதை எல்லாம் செஞ்சிட்டு இப்போ தலைகுனிந்து நின்னா என்னடா அர்த்தம்?... பாருடா உனக்கும் மூத்தவன் தான இவன்?... படிச்சு முடிச்சு உத்தியோகத்துல இருக்குற அவனுக்கு இந்த எண்ணம் இல்லை… அவனை விட நாலு வயசு சின்னவன் நீ… உன் புத்தி ஏண்டா இப்படி போச்சு?...”

அவர் கலங்கி பேசிட, ரஞ்சித்தோ தாயை சமாதானப்படுத்த விழைந்தான்…

“அவனை என் பக்கத்துல வரவேண்டாம்னு சொல்லுங்க…” என கணவரை தஞ்சம் புகுந்தார் அவர்…

“இனி அழுது என்ன செய்ய பிரயோஜனம்… நீ அழுது தேவையில்லாம உன் உடம்பை கெடுத்துக்காத…”

கணவரின் அறிவுரை காதில் விழுந்தும், அதை செய்ய முடியாத மன நிலையில் இருந்தார் அவர்…

இன்று தான் மகனையே திட்டியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்…

கல்விக்கு பெயர் போன கலைவாணியின் பெயரை நாமகரணமாக கொண்டவர், மருந்துக்கும் தனது புதல்வர்களை திட்டியோ, கோபமாகவோ பேசியதில்லை இதுவரை… பார்த்த்துமே அனைவருக்கும் பிடித்துப்போகும் கலையான முகம் அவருடையது… லட்சுமி கடாட்சம் என்று சொல்வார்களே… அப்படி ஒரு பெண்மணி அவர்…

அவரின் அந்த அமைதி நிறைந்த அழகு முகமும், அற்புத குணமுமே ராஜேஷ்வரனை, ஈர்த்து கலைவாணியை கைப்பிடிக்க வைத்தது…

இருவரின் காதலுக்கு சாட்சியாய் இரு புதல்வர்களை ஈன்றெடுத்தார் கலைவாணி…

மூத்தவன் ப்ரசன்ஜித்… இளையவன் ரஞ்சித்…

இருவருமே படிப்பில் கெட்டிக்காரர்கள்… அதிலும் மூத்தவன் தன் முடிப்பினை முடித்த கையோடு வேலையினையும் வாங்கிக்கொண்டான் வங்கியில்…

சின்னவனும் அண்ணனைப் போலவே, நன்றாக படித்தான்… எனினும் அவன் ஆசைப்பட்ட படிப்பினை படிக்க, வெளிநாடு அனுப்பி வைத்தனர்… அவனோ படிப்பை விட்டு, திருமணம் முடித்துக்கொண்டு வந்தால், பெற்றவர்களின் நிலையை கேட்டிடவா வேண்டும்?...

அதுவும் வெளிநாட்டு பெண்… அது வேறு எரிகிற தீயில் எண்ணையை ஊற்றியது…

மகனை திட்டினாரே தவிர, அவளை ஒருவார்த்தைக்கூட பேசவில்லை கலைவாணி…

“நீ படிக்க போய் ஒரு வருஷம் கூட ஆகலை… அதுக்குள்ள என்னடா இது?...”

ப்ரசன் சற்றே கோபமாய் கேட்டிட, “சாரிண்ணா, எனக்கு வேற வழி தெரியலை… இவளுக்கு அம்மா கிடையாது… அப்பா மட்டும் தான்… அவரும் பணத்துக்கு ஆசைப்பட்டு இவளை ஒரு பணக்காரனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க முடிவெடுத்துட்டார்… நானும் எவ்வளவோ பேசி பார்த்தேன்… படிப்பு முடிஞ்சதும் கை நிறைய சம்பாதிச்சு உங்க பொண்ணை நல்லா பார்த்துப்பேன்னு சொன்னேன்… நம்ம வீட்டுல இருந்து பேசவும் வர சொல்லுறேன்னு சொன்னேன்… ஆனா அவர் எனக்கு கட்டிக்கொடுக்க சம்மதம் இல்லன்னு சொல்லிட்டார்… அதுவும் இல்லாம நீ அமெரிக்கன் இல்லைன்னு சொல்லி மறுத்துட்டார்… அவளையும் மிரட்டி வீட்டுல அடைச்சி வச்சிருந்தார்… கடைசியில வேற வழியில்லாம இங்க கூட்டிட்டு வந்துட்டேண்ணா… அதுவும் இல்லாம அவ இங்க வந்த்தும் டூரிஸ்ட் விசா… அதான் அவளும் நானும் கல்யாணம் பண்ணிகிட்டா சட்டப்படி எங்க கல்யாணத்துக்கு இங்க அங்கீகாரம் கிடைக்கும்… அவளுக்கும் இங்க தங்க உரிமை கிடைக்கும்…” என பொறுமையாக கூறியவன்,

“அதுக்காக நான் பண்ணினது தப்பில்லைன்னு சொல்லவரலைண்ணா… தப்பு தான்… நானும் படிப்பு முடிஞ்சதும், வீட்டுல எல்லார்கிட்டயும் பேசி தான் இவளை கல்யாணம் பண்ணனும்னு நினைச்சேன்… ஆனா அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லாம போச்சுண்ணா… சாரிண்ணா… அம்மாகிட்ட நீ சொல்லுண்ணா… நீ சொன்னா அம்மா கேட்பாங்க…” என தமையனிடம் கெஞ்சலுடன் கேட்டுவிட்டு, தாயின் அருகே செல்ல, அவரோ அவனை ஏறெடுத்தும் பார்த்திடவில்லை…

“அம்மா………” அவன் பேச முனைவதற்குள், அவர் தனது அறைக்குள் சென்றுவிட்டார்…

“அண்ணா….” என ரஞ்சித் பாவமாக தமையனைப் பார்த்திட, “அம்மா பேசிடுவாங்கடா… நீ கவலைப்படாத… நான் அம்மாகிட்ட பேசுறேன்… நீ கொஞ்சம் பொறுமையா இருடா…” என தைரியம் அளித்து தம்பியுடன் அவன் பேசிக்கொண்டிருக்க,

சில மணி நேரம் கழித்து, அறையை விட்டு வெளியே வந்த கலைவாணி, நேரே சமையலறைக்குள் சென்று அனைத்தையும் எடுத்துவைத்து விட்டு குரல் கொடுத்தார்… “ “ப்ரசன்… நேரமாச்சு… வா… சாப்பிடலாம்… அப்பாவையும் வர சொல்லு…” என்றவர், சில நொடி மௌனத்திற்குப் பிறகு, “அந்த பொண்ணையும் வர சொல்லு…” என கூற, ராஜேஷ்வரனுக்கோ மனைவியின் கனிவு புரிந்து புன்னகை வந்தது…

ப்ரசனும் ரஞ்சித்தும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைக்க, ரஞ்சித்தோ, ப்ரசனை அணைத்துக்கொண்டான் சட்டென…

“தேங்க்ஸ்ண்ணா…”

“ஹே… எனக்கு எதுக்குடா தேங்க்ஸ்?...”

“அம்மாகிட்ட பேசி எங்களை ஏத்துக்க வச்சதுக்கு...”

ரஞ்சித் கண்கள் கலங்கியபடி கூறிட, “டேய்… அதெல்லாம் எதுவுமில்லடா…” என்றான் ப்ரசன் வேகமாய்…

“இல்லண்ணா… எனக்கு தெரியும்… நீ தான் அம்மாகிட்ட பேசியிருக்க… நீ ஒத்துக்கலைன்னாலும் உண்மை அதுதான்… தேங்க்ஸ்ண்ணா…”

“லூசு நான் உன் அண்ணன்டா… தேங்க்ஸ் எல்லாம் எனக்கெதுக்கு?...”

புன்னகையுடன் கூறிய ப்ரசனை மன நிறைவுடன் ரஞ்சித் அணைத்துக்கொள்ள, தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த கலைவாணியின் கண்களும் நிறைந்து தழும்பிட, ராஜேஷ்வர் மனைவியின் தோள் தொட்டு சமாதானப்படுத்த, கணவரின் தோள் சாய்ந்தார் அவர் அழுகையோடு….

எழில் பூக்கும்...!

Episode # 14

Episode # 16

{kunena_discuss:1122}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.