(Reading time: 21 - 42 minutes)

ஒரு வாரத்தில் வரும் என் அக்காவின் வளைகாப்பிற்காய் அவளுக்கு வளையல் புடைவைன்னு நெறைய வீட்ல வாங்கி வெச்சிருந்தாங்க..

அதையெல்லாம் பார்க்கப் பார்க்க இதை நாம போட்டால் எப்படி இருக்கும்னு மனசில் ஒரு விபரீத ஆசை மனசில் உதிச்சுது..

ஒவ்வொரு பொருளா எடுத்து எனக்கு நானே போட்டு கண்ணாடியில் அழகு பார்த்திட்டு இருந்தேன்..

எத்தேசையா அதைப் பார்த்த என் அக்காவின் மாமியார் கத்தி ஊரைக் கூட்டிட்டாங்க..

எல்லார் முன்னாடியும் அவங்க பேசுன வார்த்தைகளில் கூனிக்குறுகி போயி நின்னேன்..அவ்ளோ நாள் வீட்ல தலையில் தூக்கி வெச்சிருந்த அம்மா அப்பா அந்த நிமிஷம் என்னை வெறுத்துட்டாங்க போல..

என் அக்கா மாமியார் என்னை அசிங்கமா பேசினப்போ என்னை ஒரு ஜந்துவைப் பார்ப்பது போல் பார்த்தாங்க..

அப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா..??

அப்படியே அந்த நிமிஷம் நான் வெடிச்சு சாம்பலா காதோட காத்தா போயிறணும்னு தோனுச்சு..

அவ்ளோ வலி..அவ்ளோ அவமானம்..

அப்பா மாதிரி அவ்ளோ வருஷம் என்னைப் பார்த்துக்கிட்ட என் அண்ணா என்னிடம் வந்து சில இலட்சங்கள் கையில் கொடுத்து ஒரு வெத்துப் பேப்பரில் கையெழுத்து வாங்கும் பொழுது அத்தனையும் வெறுத்துப்போச்சு..

என்னை வீட்டை விட்டு வெளியே கழுத்தை பிடித்து தள்ளாத குறைதான்..

இதெல்லாம் மொத்தம்மா ஒரு அஞ்சாறு மணி நேரத்தில் நடந்து முடிஞ்சிருச்சு..

அதுக்கு அப்புறம் எங்கெங்கோ சுற்றி சில திருநங்கைகளுடன் சேர்ந்து அவங்க உதவியால் அறுவை சிகிச்சை பண்ணிக்கிட்டேன்..

சாப்பாடு துணி அறுவை சிகிச்சைன்னு செலவு பண்ணதுல காசெல்லாம் கரைஞ்சு ஒண்ணுமே இல்லாத நிலைக்கு வந்தேன்..

பிச்சை எடுக்க ஆரம்பிச்சேன்..ஒரு கட்டத்துல அதுவும் கிடைக்கல..

நான்கைந்து நாள் பட்டினி..பசி தாங்க முடியலை..செத்து போகவும் துணிவில்லை..

ஒரு பாலியல் தொழிலாளி உதவியோடு சிவப்பு விளக்கு ஏரியாவிற்கு போனேன்..நல்லா சோறு போட்டவள் கொஞ்சம் நேரம் காத்திருன்னு சொல்லிட்டு வெளியில் போனாள்..

பசி போய் தெளிவு வந்ததுக்கு அப்புறம் தான் நான் பெரிய தப்பு செய்யத் துணிந்து விட்டது தெரிந்தது..

என்னை அங்கு கூட்டிச் சென்ற பெண்ணிடம் சொல்லாமல் கொள்ளாமல் அவசரவசரமாக எதிரில் வரும் ஆட்டோவை கவனிக்காமல் வந்து அதில் அடிபட்டு நடு ரோட்டில் கிடந்தேன்..

ஒரு கை பிராக்ச்சர்..கை கால் எல்லாம் சிராய்ப்பு வேறு..சுற்றியும் ஒரு பத்திருபது பேர் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தனர்..

நான் ஒரு திருநங்கை என்பதால் தண்ணீர் கொடுக்கக் கூட யாரும் அருகில் வரவில்லை..

தட்டித் தடுமாறி எழுந்து நானே அருகில் இருக்கும் சிறியதொரு மருத்துவமனைக்குச் சென்றேன்..

அங்கும் அதே நிலை..அந்த மருத்துவமனை நர்ஸ் என்னை விரட்டாத குறைதான்..

நான் எப்பொழுது செய்த புண்ணியமோ டாக்டர் பூங்குழலியின் கண்ணில் சிக்கினேன்..

டாக்டர் பூங்குழலி அம்மருத்துவமனையின் தலைமை மருத்துவர்..அதன் உரிமையாளரும் கூட..

எனக்கு சிகிச்சை பார்த்து..எனக்கு குணமாகும் வரை கவனித்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் அவரது வீட்டில் வேலையும் கொடுத்து இப்பொழுது வரை என்னை பார்த்துக்கொள்கிறார்..

இன்னொன்னு தெரியுமா..என் சுருட்டை முடியைப் பார்த்திட்டு எனக்கு குழல்மொழி என்று எனக்குப் பெயர் வைத்ததும் அவர்தான்..”,என அழகாக சிரித்தாள் மொழி..

அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த சமுத்திராவைப் பார்த்து என்னவென்பது போல் தலையசைத்தாள் மொழி..

“இவ்ளோ கஷ்டத்தை வெச்சுக்கிட்டு உங்களால எப்படி சிரிக்க முடியுது..??”,என்று கேட்டாள் வியப்பாக..

“அந்த கஷ்டம் எல்லாம் அந்த நிமிஷத்தோட மறைஞ்சு போச்சு சமூ..இப்போ இந்த நிமிஷம் மட்டும் தான் நிஜம்..நிஜத்தில வாழும் பொழுது நிழலோட அதாவது பழைய நினைவுகளோட வாழ்ந்தோம்னா வாழ்க்கை நரகமாகிவிடும்..”

சமுத்திராவின் முகத்தில் இன்னும் கேள்விகள் நிறைந்திருப்பதைக் கண்டு..

“சமூ..இங்க பாரு..நீ இப்போ ஒரு சுதந்திரப் பறவை..அதை மட்டும் மனதில் நிறுத்திக்கொள்..இந்த நிமிஷம் வாழக்கையை வாழ்ந்து பழகு எல்லாம் சரியா போயிடும்..”,என்றவள்,”சரி இப்போ அதை விடு..இனி என்ன பண்ண போற..??”,என்று கேட்டாள்..

“அம்மா அப்பாவை பார்க்கப் போகனும்..”

“குட்..அவங்களை போய் பாரு..எனக்கென்னமோ உனக்காக அவங்க காத்திருப்பாங்கன்னு தோணுது..”,என்றாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.