(Reading time: 38 - 76 minutes)

33. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

விடியற்காலையிலேயே அலுவலக வேலையாக வந்த செல்வா, வேலை முடிந்து கிளம்ப கிட்டத்தட்ட மதியம் மணி பனிரெண்டு ஆகியது.. காலை உணவு கூட சாப்பிட நேரமில்லாமல், வேலையில் மூழ்கியவன், இப்போதும் வீட்டுக்குச் சென்று சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று புறப்பட்டான்.. காரை ஓட்டியப்படியே, “என்ன? காலையிலேயே கிளம்பி வந்துட்டேன்.. எப்போ வருவேன்? சாப்ட்டேனா? இல்லையா? இந்நேரம் ரெண்டு மூனு முறை மது போன் செஞ்சுடுவாளே? ஆனா இவ்வளவு நேரம் போனே வரல..” என்று நினைத்தவன், தானே நர்மதாவின் அலைபேசிக்கு தொடர்புக் கொண்டு விஷயத்தை சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து, தன் அலைபேசியை எடுக்கப் போக, தன் அலைபேசி கையில் இல்லை என்பதை உணர்ந்தவன், எங்கேயாவது தொலைத்து விட்டோமா? என்று யோசித்து, பின் தன் அலைபேசியை சார்ஜ் போட்டு வைத்தவன், வீட்டிலிருந்து கிளம்பும் போதே, அதை எடுக்க மறந்ததை நினைவு கூர்ந்தான்.

“ஓ அதான் மதுக்கிட்ட இருந்து போன் வரலையா? எனக்கு போன் பண்ணி பார்த்துட்டு, போன் வீட்லயே இருக்கறதை தெரிஞ்சிக்கிட்டு இருப்பா..” என்பதை தெரிந்துக் கொண்டவனுக்கு, காலையிலிருந்து நர்மதாவிடம் பேசாதது ஒரு மாதிரி இருந்தது. சிறிது காலமாகவே அலுவலக வேலைகள் அதிகமாக இருக்க, இப்படி தான் நேரம் தவறி சாப்பிடும் நிலை வரும்.. சில நாட்கள் விடியற்காலையில் செல்பவன், வீட்டுக்கு வர இரவாகிவிடும்.. அப்போதெல்லாம் நர்மதா அவனை அலைபேசியில் தொடர்புக் கொண்டு நேரத்திற்கு சாப்பிடச் சொல்லி நினைவுப்படுத்துவாள்.. இரவு இவன் வீடு திரும்பும் வரை விழித்து சாப்பாடு பரிமாறுவாள்..

இன்னும் கூட தன் மனதில் உள்ளதை அவளிடம் வெளிப்படுத்தவில்லையென்றாலும், இருவருக்கு நடுவிலும் ஒரு புரிதல் உள்ளது.. ஆனால் இனி அவன் பொறுப்பிலிருந்த அதிகப்படியான வேலைகள் இன்றோடு முடிந்தது.. அடுத்து அவன் மதுவுக்கும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.. அவளிடம் தன் மனதில் இருப்பதை உடனே சொல்லிவிட வேண்டும்.. முடிந்தால் அவளை கூட்டிக் கொண்டு சில நாட்கள் குன்னூருக்கு போக வேண்டும்..

இதில் இன்னொரு நன்மையும் இருக்கிறது.. தன் வேலைகளையும் சேர்த்து அண்ணனிடம் கொடுத்தால், கண்டிப்பாக  கங்கா நினைவுகளிலிருந்து அண்ணன் மீண்டு வர அது உதவியாக இருக்கும் என்று நினைத்தான். அதைப்பற்றி யோசிக்கும் போதே, “அண்ணன் வந்ததும் கங்கா இல்லாததுக்கு என்ன மாதிரி ரியாக்‌ஷன் கொடுக்கப் போகிறானோ? என்று யோசித்தவன், என்னவாக இருந்தாலும், இனி கங்கா அண்ணனோட வாழ்க்கையில் வரவே கூடாது.. தன் அண்ணனோட பணம் அதுமட்டும் தான் கங்காவின் குறிக்கோள் என்று நினைத்தவனின் மனசாட்சியோ, உண்மையில் அவள் பணத்தை தான் எதிர்பார்த்தாளா? என்று கேள்விக் கேட்டது. அன்று அவள் கடைசியாக பேசிவிட்டு சென்றதை நினைத்துப் பார்த்தான்.. கங்காவின் செய்கையிலும் பார்வையிலும் தப்பு இருப்பதாக தோன்றவில்லை..

ஆனால் அதை உண்மை என்றும் நம்பி விடக் கூடாது.. இப்படிப்பட்ட பெண்கள் எல்லாம் நடிப்பில் கைத்தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.. என்னிடம் பணம் வேண்டாமென்று சொன்னதால், அவள் பணத்திற்கு ஆசைப்படாதவளாக ஆகிவிடுவாளா? இத்தனை வருடங்களில் அண்ணனிடம் இருந்து எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவு சுருட்டியிருப்பாள்.. அதனால் தான் பணம் வேண்டாமென்று சொல்கிறாள்.. அதை நம்பி விடக் கூடாது…

ஒருவேளை அப்படியே அவள் பணத்துக்கு ஆசைப்படதாவளாக இருந்தாலும், அண்ணனிடம் அதிக அன்பு வைத்திருப்பவளாக இருந்தாலும், அவர்களுக்குள் இருக்கும் இந்த உறவு இனியும் தொடரக்கூடாது.. அண்ணனுக்கு நல்லப்படியாக திருமணம் நடக்க வேண்டும்.. மனைவி என்ற உறவு தான் அவன் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கும் உறவாக இருக்கும்.. அம்மாவுக்கும் அதுதான் மகிழ்ச்சி.. அண்ணனுக்கு இப்படிப்பட்ட உறவு இருப்பது வெளியில் தெரிந்தால், வியாபார உலகில் கெட்டப்பேர் வந்துவிடாதா? இதுவரைக்குமே இது வெளி உலகத்திற்கு தெரியாமல் இருப்பதே அதிசயம் தான்.. அதனால் நான் அண்ணனுக்கு நல்லது தான் செய்திருக்கிறேன்..

கங்கா இங்கிருந்து கிளம்பி இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.. கண்டிப்பாக அண்ணன் வந்ததும் அவளை தேட முயற்சிப்பான்.. ஆனா அவனுக்கு  தோல்வி தான் கிடைக்க வேண்டும்.. அவனை அலுவலக வேலைகளில் திசை திருப்பி விட வேண்டும்..  அதன்பின் நர்மதாவோடு தேன்நிலவு செல்வதைப் பற்றி வீட்டில் பேச வேண்டும்.. புதிதாக திருமணம் ஆனவர்கள் என்பதை கருத்தில் கொண்டு, அண்ணனும் என் முடிவை ஏற்று அலுவலக வேலைகளில் கவனம் கொள்ள ஆரம்பிப்பான்..

இந்த நேரத்தில் அண்ணனோடு இல்லாமல் விலகிச் செல்வது சுயநலமாக தான் அவனுக்கே தோன்றுகிறது.. ஆனால் தனிமையில் இருந்தால் தான் கங்காவை பற்றி தன் அண்ணனாலும் யோசிக்க முடியும்.. கண்டிப்பாக அப்போது கங்காவிடம் இருக்கும் தவறுகளும் அவனுக்கு புரிய வரலாம்.. தனக்கென ஒரு நிரந்தர உறவு வேண்டுமென்ற ஒன்றை அவன் உணரவும் வாய்ப்பிருக்கிறது என்று அவனாகவே மனதில் ஒரு கணக்கு போட்டுக் கொண்டான்.. ஆனால் கங்கா என்ற ஒருத்தி தான் துஷ்யந்தை செயல்படவே வைக்கிறாள். அவள் தான் அவனுக்கு எல்லாமே, அவள் அருகில் இல்லையென்றாலும், அவளின் நினைவுள் வேண்டுமென்றால், அவனை இயக்க உதவி புரியுமே தவிர, வேறு எந்த உறவுக்கும், அவர்களின் அன்புக்கும் காதலுக்கும் துஷ்யந்தை கங்காவின் நினைவுகளில் இருந்து பிரிக்கும் சக்தியில்லை என்பது செல்வாவிற்கு தெரியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.