(Reading time: 38 - 76 minutes)

அறையில் கோபத்தோடு நர்மதா சோஃபாவில் அமர்ந்திருக்க, அவள் அருகே சென்று அமர்ந்தவன், “மது.. நீங்கல்லாம் கங்கா போனதால அடுத்து என்ன நடக்கும்னு மட்டும் யோசிக்கிறீங்க.. எதிர்காலத்துல என்ன நடக்கும்னு யோசிக்கிறீங்களா? என்ன இருந்தாலும் இது இல்லீகல் ரிலேஷன்ஷிப், இது தொடரப்போவதால யாருக்கும் எந்த நன்மையும் இல்லை..”

“அதுல சம்பந்தப்பட்டிருப்பது உங்க அண்ணனும் தானே? அப்போ கங்காவை மட்டும் ஏன் குற்றவாளியா பார்க்கிறீங்க.. கங்காவா உங்க அண்ணனோட வாழ்க்கையில குறுக்கிடல.. அவங்களை உங்க அண்ணன் வாழ்க்கையில் சம்பந்தப்படுத்தினது உங்க மாமா.. துஷ்யந்த் மாமா சரியாகற வரைக்கும் அவங்க தேவைப்பட்டாங்க.. இப்போ அவங்க உங்க அண்ணனோட வாழற வாழ்க்கை இல்லீகல் ரிலேஷன்ஷிப் அப்படித்தானே?

உங்க அத்தையும் அம்மாவும் கேட்டத மட்டும் வச்சு நீங்க இப்படி ஒரு முடிவு எடுத்துருக்கீங்க.. இந்த ஆறு வருசஷத்துல அவங்க ரெண்டுப்பேரும் எப்படி வாழ்ந்திருப்பாங்கன்னு யோசிச்சு பார்த்தீங்களா? அவங்களுக்குள்ள உண்மையிலேயே தப்பான தொடர்பு இருந்திருக்குமான்னு யோசிச்சீங்களா? கங்கா அக்காவை நேருக்கு நேரா பார்த்துக் கூட எப்படி உங்களுக்கு அவங்களுக்கு கெடுதல் செய்ய மனசு வந்துச்சு..

சரி அவங்க தப்பானவங்காளகவே இருக்கட்டும்.. ஆனா ஒருப் பொண்ணை ஊரை விட்டு அனுப்பியிருக்கீங்க.. அப்பா, அம்மா இல்லாம ரெண்டுப் பொண்ணுங்க இந்த உலகத்துல பாதுகாப்பு இல்லாம வாழறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? எவ்வளவோ இக்கட்டுக்களை கடந்து, ஏன் ஒருத்தருக்கொருத்தர் நல்லது செய்யறதா நினைச்சு, ஆறு வருஷமா பிரிஞ்சு, இப்போ தான் கங்கா அக்காவும் யமுனாவும் ஒன்னு சேர்ந்திருக்காங்க.. அவங்களுக்குன்னு ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக்கிட்டு, அவங்க வாழ்க்கையை வாழ இப்போ தான் ஆரம்பிச்சிருக்காங்க.. இப்போ எல்லாத்தையும் விட்டுட்டு போகச் சொல்லியிருக்கீங்க.. அவங்க எங்க போவாங்க? என்ன செய்வாங்க? ஏதாச்சும் யோசிச்சீங்களா?”

“நான் ஒன்னும் அவ்வளவு கல் மனசு உள்ளவன் கிடையாது மது.. கங்காவுக்கு பணம் கொடுக்க தயாரா இருந்தேன்.. ஆனா  அவங்க தான் வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டாங்க..”

“அப்போக் கூட கங்கா அக்கா பணத்துக்கு ஆசைப்படாதவங்கன்னு உங்களுக்கு புரியலையா? பணம் மட்டும் இருந்தா போதுமா? அது இருந்தா எல்லாமே கிடைச்சிடுமா? அதெல்லாம் உங்களுக்கு எங்க புரிய போகுது..”

“எனக்கு எல்லாமே புரியுது மது.. உனக்கு தான் புரியல.. அன்னைக்கு  சாருவா இருக்கட்டும்.. இன்னைக்கு கங்காவா இருக்கட்டும்.. அவங்க அண்ணன்கிட்ட எதிர்பார்ப்பது வெறும் பணம் மட்டும் தான்.. அதுக்காக தான் இவ்வளவும், பணம் மட்டுமே தேவைன்னு நினைக்கிறவங்க, எந்த ஊருக்கு போனாலும் எப்படியும் பணத்தை சம்பாதிச்சிப்பாங்க..

என்கிட்ட பணம் வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டா, அதுக்காக கங்காக்கிட்ட பணமே இல்லைன்னு அர்த்தம் இல்ல.. அண்ணன்கிட்ட கறந்த பணமெல்லாம் இருக்குமில்ல.. அதெல்லாம் வச்சு அவங்க பொழைச்சுக்குவாங்க.. இல்லன்னாலும் திரும்ப பணத்துக்காக இன்னொரு ஆள் கிடைக்காமயா போயிடும்” என்று அதை மட்டும் வாய்க்குள்ளேயே முனகியவன்,

“நீ அவங்களோட வெளிவேஷத்தை பார்த்து மட்டும் ஏமாந்து போயிருக்க மது.. எல்லாமே நடிப்பு, அன்னைக்கு கல்யாணத்துலயே பார்க்கல.. அந்த நகை விஷயத்துல அக்காவும் தங்கையும் எப்படியெல்லாம் நாடகம் போட்டாங்க.. இதுல அண்ணன் நல்லா ஏமாந்துப் போயிருக்கு.. இப்போ நீயும்..” என்றதும் அவளுக்கு கோபம் வந்து, “போதும் ரிஷப்..” என்று கத்தினாள்.

இதுவரைக்கும் கங்கா பற்றி பேசும்போது கூட அவள் துஷ்யந்த் வாழ்க்கையில் சம்பந்தப்பட்டிருப்பதால், அமைதியாக பொறுத்துக் கொண்டு இருந்தவள், அவன் யமுனா பற்றி பேசியதும் கோபம் கொண்டாள். அன்று அந்த நகை விஷயத்தை நேருக்கு நேராக பார்த்தபோது, யமுனாவை நினைத்து பெருமை கொண்டிருந்தாள். கல்யாணப் பரிசாக அந்த நகையை வாங்கினால் கூட, அதனால் தன் சகோதரிக்கு ஏதாவது அவப்பெயர் வந்துவிடுமோ! என்று சிந்தித்து அந்த பரிசை யமுனா வாங்க மறுத்ததை நினைத்து, இவளே எத்தனை மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் அதைக்கூட எந்த கண்ணோட்டத்தில் பார்த்திருக்கிறான் என்று நினைக்கும் போதே, கோபம் அதிகமாக வந்தது.

“யாரோ ஒரு சாரு.. அவ பணத்துக்காக உங்க குடும்பத்தை ஏமாத்தினதை வச்சு இன்னும் எத்தனை பேரை நீங்க நோகடிக்க போறீங்க ரிஷப்.. அன்னைக்கு நான் உங்க பணத்துக்கு ஆசைப்பட்டு தான் உங்களை காதலிக்கிறேன்னு சொன்னீங்க.. இப்போ கங்காவும் யமுனாவும் உங்க அண்ணனோட பணத்துக்காக நடிக்கிறாங்கன்னு சொல்றீங்க.. சாரு பணத்துக்கு ஆசைப்பட்டவளா இருந்தா.. மிடில் கிளாஸ் பொண்ணுங்க எல்லோருமே அப்படித்தானா? சாருவால ஏமாற்றம் அடைஞ்ச உங்க அண்ணனே, அன்னைக்கு அவளை நேர்ல பார்த்ததாகவும், அவ மன்னிப்பு கேட்டதுக்கு அவளை அவர் மன்னிச்சிட்டதாகவும் சொன்னார். ஆனா நீங்க இன்னும் சாரு ஒருத்தி ஏமாத்தினதுக்கு எல்லாம் பொண்ணுங்களும் அப்படின்னே முடிவுக்கு வந்துட்டீங்களா?

அப்போ இருந்த உங்க குடும்ப சூழ்நிலை தான் என்கிட்ட நீங்க அன்னைக்கு அப்படி பேசினீங்கன்னு நினைச்சேன்.. அப்போ என்மேல இருந்த காதலை, உங்க குடும்ப சூழ்நிலை காரணமா ஒதுக்கிட்டீங்கன்னு நினைச்சேன்.. இப்போ அது கொஞ்சம் கொஞ்சமா வெளிப்பட ஆரம்பிச்சிருக்குன்னு சந்தோஷப்பட்டேன்.. ஆனா அது அப்படியில்ல.. ஏதோ நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு அப்படிங்கிறதால தான் நீங்க உங்க மனசை மாத்த முயற்சி செஞ்சுருக்கீங்க.. மத்தப்படி பண விஷயத்துல, உங்க எண்ணம் அப்படியே தான் இருக்கு.. நாளைக்கு இந்த வீட்டு மருமகளா ஏதாவது ஒரு தேவைக்காக உரிமையா இந்த வீட்டிலிருந்து நான் பணம் எடுத்தாக் கூட, நான் அதுக்காக தான் உங்களை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்னு சொல்ல மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?” என்று கண்களில் கண்ணீரோடு நர்மதா கேட்க,

“மது.. உன்கிட்ட நான் அப்படி நடந்துப்பேனா?” என்று அவள் அருகில் சென்று அவன் அணைக்க போக,

“பணம்னு வந்தா நீங்க எப்படி வேணும்னாலும் மாறுவீங்க.. உங்களை நம்பமுடியாது.. உங்களுக்கு என்மேல காதலெல்லாம் ஒன்னுமே இல்லை..” என்றவள், அதற்கு மேல் அங்கே நிற்காமல் திரும்பவும் அறையிலிருந்து கீழே சென்றுவிட்டாள்.

செல்வாவோ, “நான் உன்னை எந்த அளவுக்கு காதலிக்கிறேன்னு உனக்கு தெரியாது மது.. அன்னைக்கு நான் பேசினதுக்கு இன்னும் எவ்வளவு நாள் உன்னை விட்டு விலகி இருக்கப் போறேனோ??” என்று புலம்பியப்படி உட்கார்ந்திருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.