(Reading time: 38 - 76 minutes)

வீட்டிற்குள் நுழையும்போதே, “மது.. மது..” என்று செல்வா குரல் கொடுத்தப்படியே வந்தான்.. வரவேற்பறையிலேயே உட்கார்ந்திருந்த கோமதி தான் அவனை வரவேற்றார்..

“வா செல்வா.. விடியக்காலையிலேயே வேலை இருக்கறதா போனேன்னு நர்மதா சொன்னா.. வேலை முடிஞ்சுதா.. காலையில சாப்பிட்டியாப்பா..”

“இன்னும் இல்லம்மா.. வீட்டுக்கு தான் வரோமே.. இங்க வந்து சாப்டுக்கலாம்னு இருந்துட்டேன்ம்மா..”

“என்னடா.. மதிய சாப்பாடுக்கான நேரமாயிடுச்சு.. இன்னும் சாப்பிடலையா?” என்று கவலைக் கொண்டவர், “நர்மதா..” என்று சத்தமாக குரல் கொடுத்ததும், நர்மதா மாடியில் உள்ள தனது அறையிலிருந்து வந்தாள்.

செல்வாவே நர்மதாவை சத்தமாக கூப்பிட்டப்படி தான் வந்தான்.. அந்த சத்தம் கேட்டே அவள் வந்திருக்க வேண்டுமே! என்று சிந்தித்தவன், ஒருவேளை வேறு வேலையில் கவனம் வைத்திருந்திருக்கலாம் என்று தனக்கு தானே பதில் கூறிக் கொண்டான்.

நர்மதா அவர்கள் அருகே வந்ததும், “செல்வா காலை சாப்பாடே இன்னும் சாப்பிடலையாம்மா.. போய் அவனுக்கு சாப்பாடு எடுத்து வை..” என்று கோமதி சொன்னதும், சரி என்று தலையாட்டியவள், சமயலறைக்கு சென்று உணவு பண்டங்களை எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்தாள். செல்வாவிற்கும் மிகவும் பசித்ததால், வெறும் கை மட்டும் கழுவி விட்டு வந்து சாப்பிட ஆரம்பித்தான்.

உணவு பரிமாறும் வேலையை நர்மதா கருமமே கண்ணாக செய்துக் கொண்டிருந்தாள். “போனை வீட்லயே வச்சிட்டு போயிட்டேனே! எனக்கு போன் பண்ணி பார்த்தியா மது.. இங்கயே போனை வச்சிட்டு போனது தெரியாம நான் வேற உன்னோட போன்க்கு எதிர்பார்த்திருந்தேன் தெரியுமா? செல்வா பேசிக் கொண்டிருக்க, அவள் அதையெல்லாம் காதில் வாங்குவதாக தெரியவில்லை.. “என்னாச்சு ஏதாச்சும் மூட் அப்செட்டா.. இல்லை என்மேல ஏதாவது கோபமா? என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன், “சரி அறைக்கு போனதும் பேசிக் கொள்ளலாம்..” என்று நினைத்து அமைதியாகிவிட்டான்.

அவன் சாப்பிட்டு முடித்ததும் நர்மதா தன் அறைக்குச் சென்றுவிட, கோமதி இன்னும் வரவேற்பறையிலேயே இருந்ததால், செல்வாவும் சிறிதுநேரம் தன் அன்னையுடன் பேசிக் கொண்டிருந்தான்.. அதன்பிறகு,

“சரிம்மா.. இதோட நான் ஆஃபிஸ்க்கு சாயந்திரம் போனா போதும்.. அதனால் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்.. அண்ணன் இன்னைக்கு டெல்லியிலிருந்து வருதுல்ல.. எப்படியோ, நான் கிளம்பறதுக்குள்ள வந்துடும்.. பார்த்துட்டே போறேன்..” என்று கோமதியிடம் சொல்லிவிட்டு சென்றவனுக்கு.. தன் அண்ணனை நேருக்கு நேராக பார்க்க முடியுமா என்பது சந்தேகமாக இருந்தது.. கங்கா இந்த ஊரை விட்டு சென்றதற்கு தான் தான் காரணம் என்பது அண்ணனுக்கு தெரியவே கூடாது.. கங்கா அதை வெளியே சொல்லமாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தது.. அதேபோல் அவள் இருக்கும் இடமும்  அண்ணனுக்கு தெரியாமலேயே போய்விட வேண்டும் என்று நினைத்தப்படியே தன் அறைக்கு செல்ல, அங்கே அவன் முகத்துக்கு நேராக அவனது அலைபேசியை நீட்டிய நர்மதா..

“இது என்ன..??” என்று கோபத்தோடு கேட்டாள். அதில் கங்கா செல்வாவிற்கு அனுப்பிய குறுஞ்செய்தி இருந்தது.

செல்வா நினைத்தது போலவே, காலை சாப்பாடு நேரம் வந்ததுமே, அவன் சாப்பிட்டானா? இல்லை சப்பாட்டிற்கு வீட்டுக்கு வருவானா? இல்லை வருவதற்கு தாமதமாகுமா? என்று கவலை கொண்டவள், அவனது அலைபேசிக்கு தொடர்புக் கொண்டாள். ஆனால் அலைபேசி ஒன்றுக்கு மூன்று முறை மணி அடித்து நின்றுப் போனது.. அவள் கீழே வேலையில் ஈடுபட்டப்படியே அவனுக்கு தொடர்பு கொண்டதால், மேலே அறையிலியிருந்து அலைபேசியில் சத்தம் வந்ததை நர்மதா அறியவில்லை.. அவன் அலைபேசியை சைலண்ட் மோடில் போட்டுவிட்டு வேலை செய்கிறான் போல, என்று நினைத்துக் கொண்டாள்..

இதில் அவன் வீட்டுக்கு வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தான், மதிய சமயலையும் செய்து முடித்தவள், கோமதியும் விஜியும் சாப்பிட இன்னும் நேரமிருப்பதால், சிறிது நேரம் அறையில் இருக்கலாம் என்று நினைத்து மாடிக்குச் சென்றாள்.. அப்படியே மறுபடியும் செல்வாவிற்கு இன்னொரு முறை தொடர்புக் கொள்ள நினைத்து முயற்சித்துப் பார்க்க, அந்த அறையிலேயே பாட்டுச் சத்தம் கேட்டது..

அறையிலேயே அலைபேசி அடித்தாலும், அதில் பாடல் ரிங்டோன் இருப்பதால், “இது ரிஷ்ப் வைத்திருக்கும் ரிங்டோன் இல்லையே? என்று யோசித்தவள், மீண்டும் அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.

என்னவளே அடி என்னவளே

என் இதயத்தை தொலைத்துவிட்டேன்

எந்த இடம் அது தொலைந்த இடம்

அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்

உன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று

உந்தன் காலடி தேடி வந்தேன்

காதலென்றால் பெரும் அவஸ்தையென்று

உன்னை கண்டதும் அறிந்துக் கொண்டேன்

என் கழுத்து வரை இந்த காதல் வந்து

இரு கண் வழி பிதுங்கி நின்றேன்

என்று அந்த பாடல் தெளிவாக கேட்டது.. இன்னொரு முறையும் அழைப்பு விடுத்து அந்த பாடலை திரும்ப கேட்டப்படியே, அலைபேசி வைத்திருக்கும் இடத்திற்கு அருகில் சென்றாள். அதில் மை லவ் காலிங் என்று ஆங்கில வார்த்தைகள் மிளிர்ந்தது. இவளது அழைப்புக்காக ப்ரத்யேகமாக இந்த ரிங்டோன் வைத்திருக்கிறான் என்று புரிந்துக் கொண்டாள்.

“மை லவ்..” என்று ஒருமுறை அந்த வார்த்தையை உச்சரித்து தனக்குள்ளேயே புன்னகைத்துக் கொண்டாள். “காதல்னா அவஸ்தையா.. நீ நேரா என்கிட்ட உன்னோட காதல் சொல்லுவ இல்ல.. அப்போ இருக்குடா உனக்கு..” என்று அருகில் இல்லாதவனை நினைத்து செல்லமாக மிரட்டினாள். மை லவ் என்ற வார்த்தையும், அவளுக்காக வைத்திருந்த பாடலும் அவளை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது.. அந்த மகிழ்ச்சியின் ஆயுட்காலம் சில நிமிடங்கள் தான் என தெரியாமல், மீண்டும் மீண்டும் அவனுக்கு அழைப்பு விடுத்து அந்த பாடலை கேட்டப்படி நின்றிருந்தாள்.

பிறகு தான் நினைவு வந்தவளாக, “அய்யோ.. ரிஷப் போனை இங்கேயே வச்சிட்டு போயிட்டாரே! இப்போ அவர் சாப்ட்டாரா? இல்லையான்னு கூட தெரியல..” என்று கவலைக் கொண்டவள், அலைபேசி நீண்ட நேரமாக சார்ஜில் இருப்பதால் அதை அணைத்தவள், திரும்ப திரும்ப அவனுக்கு அழைப்பு விடுத்ததை அவன் அறிந்துக் கொள்ள போகிறான்.. என்று நினைத்து வெட்கத்தோடு புன்னகைத்தவள், இவள் அழைத்தது அவனுக்கு தெரியக் கூடாது என்று, காலர் ஹிஸ்ட்ரிக்குச் சென்று தன் எண்ணை அழிப்பதற்காக அலைப்பேசியின் உள்ளே சென்றபோது, அந்த அலைபேசியின் குறுஞ்செய்தி பகுதியை கடைசியாக பார்வையிட்டுவிட்டு, செல்வா அப்படியே தன் அலைப்பேசியை சார்ஜில் போட்டுவிட்டு சென்றதால், நர்மதா அலைப்பேசியின் உள்ளே நுழைந்த போதே, அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பியவர்களின் பட்டியல் தான் தெரிந்தது.. அதில் நான் நாளை கிளம்பிடுவேன் என்ற கங்காவின் குறுஞ்செய்தி தான் அவளது கண்ணுக்கு முதலில் தெரிந்தது.

அதில் அவளது பெயர் இல்லாமல் வெறும் எண் மட்டும் தான் இருந்தது.. இருந்தாலும் கங்காவின் எண் நர்மதாவிற்கு நன்றாகவே ஞாபகம் இருந்ததால், அது கங்காவின் குறுஞ்செய்தி என்பதை அறிந்துக் கொண்டவள், “கங்கா அக்கா ஏன் ரிஷப் இன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறாள். அதுவும் எங்கேயோ கிளம்ப போவதாக குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறாளே! என்று யோசனையோடு நின்றிருந்த போது தான், செல்வா அவளை அழைத்தப்படியே உள்ளே வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.