(Reading time: 38 - 76 minutes)

யாருக்கும் இந்த விஷயம் தெரியக் கூடாது என்று நினைத்திருந்தால், அதுவும் துஷ்யந்தை போல முக்கியமாக நர்மதாவிற்கும் இந்த விஷயம் தெரியவே கூடாது என்று நினைத்திருந்தால்.. இப்போது அவளுக்கு தெரிந்து விட்டதே! என்று மனதில் நினைத்தப்படியே,  நர்மதாவின் பார்வையை தவிர்த்து செல்வா அதிர்ச்சியோடு நின்றான்.

“ச்சே.. ஏன் இந்த மெசேஜை டெலீட் செய்யாமல் வைத்திருந்தோம்.. ஏன் மொபைல்ல வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றோம்.. என்னைக்கும் இல்லாம, இன்னைக்கு தானா, மது என்னோட மொபைல்ல எடுத்துப் பார்க்கனும்..” என்று மனதிற்குள் நொந்துக் கொண்டான். அலைபேசியை யாரும் எடுத்துப் பார்க்க கூடாதென்ற தனிப்பட்ட விஷயங்கள் எதுவுமில்லை.. அதிலும் நர்மதாவிற்கு அந்த தடைகள் எதுவுமில்லை.. அவனுடைய தனிப்பட்ட விஷயம் என்றால், அது அலுவலக ரகசியங்கள் தான், அதுவும் அவன் மட்டுமே உபயோகப்படுத்தும் கணிணியில் ரகசியமாக வைத்திருக்கிறான்.. அதனால் தான் தன் அலைபேசியை யாரும் உபயோகப்படுத்தக் கூடாது என்று, அதற்கான வழிமுறைகள் எதுவும் அவன் இதுவரையும் செய்ததில்லை.. ஆனாலும் யாரும் அனாவசியமாக அவனது அலைபேசியை தொடவும் போவதில்லை.. குறிப்பாக மனைவி என்னும் உரிமையில் நர்மதா நல்லதுக்காகவோ, கெட்டதுக்காகவோ, எதுக்காகவும் அவனின் அலைபேசியை எடுக்க மாட்டாள். அப்படியிருக்க, இன்று இப்படி ஒரு இக்கட்டு வரும் என்று செல்வா எதிர்பார்க்கவே இல்லை.

“இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் ரிஷப்.. இது கங்கா அக்கா நம்பர் தானே? அவங்க ஏன் உங்களுக்கு மெசேஜ் அனுப்பியிருக்காங்க..?? அதுவும் நாளைக்கு கிளம்பிடுவேன்னு எழுதியிருக்கு.. அதுக்கு என்ன அர்த்தம்.. ஏன் இப்படி ஒரு மெசேஜ் அவங்க உங்களுக்கு அனுப்பனும்?”

“என்னைக் கேட்டா.. எனக்கு என்ன தெரியும்? அந்த மெசேஜ் அனுப்பினது கங்கா தானே.. அதை நீ அவங்கக்கிட்ட தான் கேக்கனும்.. சொல்லப்போனா அந்த நம்பர் அவங்களோடதுன்னு கூட எனக்கு தெரியாது.. ஏதோ நம்பர்ல இருந்து தெரியாம மெசேஜ் வந்துருக்குன்னு பார்த்துட்டு விட்டுட்டேன்..” என்று சமாளித்தான்.

“பொய் சொல்லாதீங்க ரிஷப்.. யாரோ தெரியாம அனுப்பினா அதை கண்டுக்காம போறவரா நீங்க.. கோடிக்கணக்குல பிஸ்னஸ் செய்றீங்க.. அதுவும் எங்கேயும் எந்த தப்பும் நடந்துடக் கூடாதுன்னு கவனமா இருப்பீங்க.. நீங்க இப்படி கேர்லஸ்ஸா விட்றவர் இல்ல.. இது கங்கா அக்கா நம்பர்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு.. சொல்லுங்க, எதுக்கு அக்கா இப்படி ஒரு மெசேஜ உங்களுக்கு அனுப்பனும்.. அதுவும் ரெண்டு நாள் முன்னாடி அனுப்பியிருக்காங்க.. அவங்க எங்க கிளம்பினாங்க..?  நீங்க என்ன சொன்னீங்க..?” அவன் சமாளிப்பை நம்பாமல் அவள் கேட்க, செல்வாவோ கோபத்தோடு,

“என்ன சொன்னேனா.. என்னோட அண்ணனை விட்டு ஒரேடியா போன்னு சொன்னேன்.. கங்காவும் அதுக்கு ஒத்துக்கிட்டாங்க.. போதுமா?” என்று கத்தினான்.

“என்ன சொல்றீங்க ரிஷப்.. கங்காவை போன்னு சொல்ற உரிமையை உங்களுக்கு கொடுத்தது யாரு?? என்னமோ கங்கா அக்கா மட்டும் தான் தப்பு செஞ்சது போல, ஏன் உங்க குடும்பமே இப்படி அவங்களை கஷ்டப்படுத்திறீங்க.. இதுல உங்க அண்ணனுக்கும் தொடர்பு இருக்கு.. ஆனா அதை ஒதுக்கி வச்சிட்டு, கங்கா அக்காவையே நோகடிக்கிறீங்க.. அய்யோ அவங்க கிளம்பி ரெண்டு நாள் ஆகுதா..??” என்று வாய்விட்டு புலம்பியவள், உடனே தன் அலைபேசியை எடுத்து, அதில் கங்காவை தொடர்பு கொள்ள முயற்சித்தாள். ஆனால் அழைப்பு போகவே இல்லை..

“இந்த நேரம் இளங்கோ அண்ணாவும் யமுனாவும் கூட ஊரில் இல்லையே!! அக்கா எங்க போனாங்கன்னு தெரியலையே!!” என்று திரும்பவும் புலம்பியவள்,

“அக்காவை எங்க அனுப்பிச்சீங்க.. கௌரவமா ஒரு தொழில் பார்த்துக்கிட்டு அமைதியா வாழ்க்கை நடத்தினவங்களை இப்படி தொறத்தி விட்டுடீங்களே.. அவங்க எங்கப் போனாங்க..??” சத்தமாக கோபத்தோடு நர்மதா கேட்ட போது, இன்னும் வரவேற்பறையிலேயே உட்கார்ந்திருந்த கோமதிக்கு அவர்கள் பேசுவது சத்தமாகவே கேட்டது.. ஆனால் எந்த விஷயமாக இருவருக்கும் பிரச்சனை என்பது புரியாமல்,

“இப்போ தானே ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கிட்டு பேசி பழக ஆரம்பிச்சிருக்காங்க.. அதுக்குள்ள திரும்ப என்ன சண்டை..??” என்று மனதில் எழுந்த கேள்வியோடு கோமதி கீழிருந்தப்படியே “செல்வா.. செல்வா..” என்று கொஞ்சம் சத்தமாக அழைத்தார்.

“கோமதியின் சத்தம் கேட்டதும் நர்மதாவும் பதட்டத்துடன் கீழிறங்கி வந்து, “ அத்தை ரிஷப் என்ன செஞ்சு வச்சிருக்காரு பார்த்தீங்களா?” என்று அவனை குற்றவாளியாய் அவன் அன்னை முன் நிறுத்தினாள். அவள் பின்னாலேயே இறங்கி வந்த மகனை பார்த்தவரின் பார்வையில் என்ன விஷயம்? என்ற கேள்வி இருந்தது..

கோமதி கீழே இருந்தப்படியே குரல் கொடுத்ததும், உடனே நர்மதா கீழே வந்து ஏதோ பேசுவதும் அறையிலிருந்த விஜிக்கும் கேட்டது.. அதனால் அவரும் அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு விரைந்து வந்தார்.

“அத்தை.. கங்காவை உங்க பையன் மிரட்டிட்டு வந்திருக்காரு.. துஷ்யந்த மாமாவை விட்டு விலகனும்.. ஊரை விட்டே போகனும்னு சொல்லியிருக்காரு.. அதுவும் ரெண்டு நாள் முன்னாடியே.. கங்கா அக்காவும் ரெண்டு நாள் முன்னாடியே, நான் நாளைக்கு கிளம்பிடுவேன்னு இவருக்கு மெசேஜ் செஞ்சிருக்காங்க பாருங்க..” என்று அலைபேசியை காட்டினாள். அதில் இருப்பதை கவனித்து பார்க்க தோன்றவில்லை.. ஏனென்றால நர்மதாவின் பதட்டமும், செல்வாவின் அமைதியுமே, அது உண்மையாக இருக்கும் என்று சொல்லாமல் சொல்லியது. ஆனால் கங்கா விஷயம் செல்வாவிற்கு எப்படி தெரியும்? என்றுதான் அவருக்கு புரியவில்லை.. சரி எப்படியோ தெரிந்துவிட்டது.. ஆனால் அதற்கு இப்படி ஒரு முடிவெடுத்துவிட்டானே! என்று அவரும் அதிர்ச்சிக்குள்ளானார்..

அருகில் நின்றிருந்த விஜிக்கும் செல்வாவிற்கு இந்த விஷயம் எப்படி தெரிந்திருக்கும் என்ற கேள்வி மனதிற்குள் வந்தது.. ஆனால் செல்வா செய்த செயல் விஜிக்கும் நியாயமாக தான் பட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.