(Reading time: 38 - 76 minutes)

வீட்டிலிருந்து காரில் கிளம்பிய துஷ்யந்த் முதலில்  கங்காவுக்கு தான் அலைபேசி மூலமாக தொடர்புக் கொண்டான். ஆனால் கங்காவிற்கு அழைப்பு போகவே இல்லை.. நர்மதா சொன்னது போல, கங்கா நிஜமாகவே ஊரை விட்டு சென்றுவிட்டாளா? என்று மனதிற்குள் அச்சம் கொண்டான். எப்போதும் முக்கியமான மீட்டிங்கின் பொழுது கங்காவிடம் பேசிவிட்டு தான் அதில் கலந்துக் கொள்வான்.. இந்த முறையும் அப்படித்தான் டெல்லியிலிருந்து அவளுக்கு அழைப்பு விடுத்தான். அப்போதும் அவளுக்கு அழைப்பு போகவே இல்லை.. இரண்டு நாட்களாக அவளுடனே நேரத்தை  செலவழித்திருந்ததால், அவனுக்கும் அவளிடம் அப்போது பேசாதது பெரிய விஷயமாக தெரியவில்லை. அவளுடன் இருந்த இனிமை நினைவுகளே அவனுக்கு தேவையான ஊக்கத்தை கொடுத்திருந்தது. ஒருவேளை அப்போதே அவள் ஏன் பேசவில்லை என்று யோசித்திருந்தால், அவளை போகவிடாமல் தடுத்திருக்கலாமோ என்று நினைத்தான்.

“இல்லையில்லை.. கங்கா என்னை விட்டு போகமாட்டா.. நர்மதா சொன்னது போல நடந்திருக்காது..” என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டு, அடுத்து இளங்கோவிற்கு அலைபேசி மூலமாக அழைப்பு விடுத்தான். சில நொடிகளுக்குப் பிறகு அவனது அழைப்பு ஏற்கப்பட்டது. உடனே ப்ளுடூத்தை ஆன் செய்தான்.

“ஹலோ துஷ்யந்த்..”

“இளங்கோ இப்போ நீ எங்க இருக்க?”

“வீட்ல தான் துஷ்யந்த்.. காலையில் தான் ஊர்ல இருந்து வந்தோம்.. பஸ்ல சரியா தூங்க முடியல.. அதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கேன்.”

“ஊருக்கா? எந்த ஊருக்கு?”

“எங்க ஊருக்கு தான் துஷ்யந்த்..  ஊர்ல விருந்து ஏற்பாடு செஞ்சிருக்கோம்னு சொன்னேனே.. உங்களை கூட கூப்பிட்டேன்.. நீங்க தானே டெல்லிக்கு போகனும்னு சொன்னீங்க..”

“ஆமாம் மறந்துட்டேன்.. சரி கங்காவும் வாணி அக்காவும் உன்னோட வந்தாங்களா?”

“என்ன துஷ்யந்த்.. நம்ம கங்காவை பத்தி தெரியாதா? அவ வரலன்னு சொல்லிட்டா.. அதனால வாணிம்மாவையும் கூப்பிடல..”

“ஊருக்கு வரலையா? சரி அவக்கிட்ட போன் பேசினியா?”

“இல்ல துஷ்யந்த்.. கங்கா போன்க்கு லைன் போகல.. அதனால பேசல..”

“அப்போ வாணி அக்காக்கிட்ட??”

“அவங்கக்கிட்டேயும் பேசல துஷ்யந்த்.. ஈவ்னிங் தான் நேரா போய் பார்க்கனும்.. ஆமாம் எதுக்கு இதெல்லாம் கேக்கறீங்க..??”

“என்ன இளங்கோ.. இவ்வளவு கேர்லெஸ்ஸா இருக்க.. நீயும் வாணிம்மாவும் எப்பவும் கங்கா கூட இருக்கீங்கன்ற நம்பிக்கையில தானே! நான் அவளை விட்டு விலகி இருக்கேன்.. நீ இப்படி கேர்லெஸ்ஸா இருந்தா என்ன அர்த்தம்?”

“ஏன் என்னாச்சு துஷ்யந்த்..” கொஞ்சம் பதட்டத்தோடு இளங்கோ கேட்க, அதுவரை அவன் அருகில் படுத்துக் கொண்டிருந்த யமுனா, அவன் துஷ்யந்தோடு உரையாடிக் கொண்டிருந்ததை கவனித்தப்படி இருந்தவள், இப்போது எழுந்து உட்கார்ந்து, “என்னாச்சு இளன்..” என்று மெல்லிய குரலில் கேட்டாள். அவனோ கொஞ்சம் இரு என்று சைகையில் சொல்லியவன்,  துஷ்யந்த் சொல்வதை கேட்க ஆரம்பித்தான்.

“அதுவந்து இளங்கோ.. வந்து, கங்கா.. கங்கா ஊரை விட்டு போயிட்டதா, நர்மதா சொல்றா..” என்றவன், தன் வீட்டில் நடந்ததை சுருக்கமாக சொன்னான்.

அதுவரை சாய்ந்தப்படியே பேசிக் கொண்டிருந்த இளங்கோ, துஷ்யந்த் சொன்ன விஷயத்தில் அதிர்ச்சியாகி நிமிர்ந்து உட்கார்ந்தான்.. செல்வா இப்படி ஒரு காரியத்தை செய்திருப்பான் என்று அவனால் நம்ப முடியவில்லை.. “ஏன் துஷ்யந்த் வீட்டில் உள்ளவங்க, அவளை இப்படி கஷ்டப்படுத்தி பார்க்கிறாங்க..” என்று தனக்குள்ளேயே வருந்தியவன், என்ன விஷயமோ!! என்று அருகில் பதட்டத்தோடு உட்கார்ந்திருந்த யமுனாவை பார்த்தப்படி,

“அப்படில்லாம் எதுவும் நடந்திருக்காது துஷ்யந்த்.. நம்ம கங்காவை பத்தி உங்களுக்கு தெரியாதா? இப்படி எத்தனை முறை நம்மல அவ மிரட்டியிருப்பா.. ஆனா ஒருதடவையாவது அப்படி அவ செஞ்சிருக்காளா? அவளால நம்மல விட்டு பிரிஞ்சிருக்க முடியாது துஷ்யந்த்.. நமக்காக இல்லன்னாலும், யமுனாவுக்காக அவ யோசிப்பா” என்று சமாதானம் கூறியவனுக்கு, அப்போது தான் ஒரு விஷயம் உறுத்தியது.. இதுவரை யமுனாவின் திருமணம் என்கிற விஷயம் தான் அவளை கட்டிப்போட்டு வைத்திருந்தது.. இப்போது யமுனாவின் திருமணம் முடிந்துவிட்ட நிலையில் அவள் இந்த முடிவை எடுத்துவிட்டாளா? என்று யோசித்தான்.

துஷ்யந்திற்கும் அது புரிந்ததால், “நான் கங்கா வீட்டுக்கு தான் போயிட்ருக்கேன் இளங்கோ.. நீயும் அங்க வா..” என்று உத்தரவு போட்டுவிட்டு அலைபேசி அழைப்பை துண்டித்தான்.

யமுனாவோ கங்காவை பற்றி பேசியதைக் கேட்டதும், “என்னாச்சு இளன்..??” என்று அவனை உலுக்கினாள். துஷ்யந்த் கூறியதை அவன் சுருக்கமாக சொல்லவும்,

“என்ன இளன்.. ஊர்ல இருந்து வந்ததும் வாணிம்மாக்கிட்ட பேசி எல்லாம் சரி செய்யலாம்னு நினைச்சா, அக்கா இப்படி செஞ்சுட்டாளே!! அக்கா எங்க போய் என்ன கஷ்டப்பட்றாளோ? எனக்கு பயமா இருக்கு..” என்று அழுதாள்.

“ஹேய் அழாத.. கங்கா அப்படியெல்லாம் செஞ்சிருக்க மாட்டா..” என்றவன், தன் அலைபேசியை எடுத்து வாணியின் எண்ணுக்கு தொடர்புக் கொண்டான். அவர் வேறொருவரோடு பேசிக் கொண்டிருப்பதாக பதில் வந்தது..

இளங்கோவிடம் பேசி முடித்ததும் துஷ்யந்த் வாணிக்கு தான் தொடர்புக் கொண்டிருந்தான். முதலில் முழுவதுமாக மணி அடித்து நின்று, பின் அடுத்த அழைப்பை தான் வாணி ஏற்றார். ஹலோ என்ற வாணியின் குரல் கேட்டதும்,

“அக்கா எங்க இருக்கீங்க..?” என்று அவன் பதட்டத்தோடு கேட்டான்.

“நான் இப்போ வேன்ல வந்துக்கிட்டு இருக்கேன் தம்பி..”

“வேன்லயா?? எங்க போனீங்க?”

“தங்கச்சி வீட்டுக்கு தம்பி.. அவ சொந்தக்காரங்க இங்க இருந்து வேன்ல கிளம்பினாங்க.. அவங்க கூட போயிட்டு திரும்பி வந்துக்கிட்டு இருக்கோம்.. சென்னைக்கு வந்துட்டோம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்குப் போயிடுவேன்..”  வாணி பேச்சிலேயே அவன் நம்பிக்கை குறைய ஆரம்பித்திருந்தது.

“நீங்க ஏன் ஊருக்கு போக இருந்ததை சொல்லல.. வேதனையில் அவன் குரல் கூட சத்தமாக பேச அனுமதி தரவில்லை..

“அது கங்கா சொல்லிக்கிறேன்னு சொல்லுச்சு தம்பி..”

“நீங்க கங்காவை தனியா விட்டுட்டா போனீங்க..??”

“இல்ல தம்பி.. அவ இளங்கோ கூட ஊருக்கு போறதா சொன்னா.. அதான் நான் கிளம்பினேன்..”

“என்ன அக்கா.. அவ அப்படி போக கூடியவளா? அவ சொன்னதை நம்பி நீங்க.. என்று சில நொடிகள் பேச்சை நிறுத்தியவன், “ இப்போ கங்கா ஊர்லயே இல்லை.. அவ நம்மளல்லாம் விட்டுட்டுப் போயிட்டா.. நான் இப்போ வீட்டுக்கு தான் போறேன்.. நீங்களும் வாங்க..” என்றவன் தன் அழைப்பை துண்டித்திருந்தான்.

வாணிக்கு சில நிமிடங்கள் ஒன்றும் புரியவில்லை. பின்பு தான் துஷ்யந்த் சொன்ன விஷயம் புரிய ஆரம்பித்தது.. “இந்த பொண்ணு என்ன செஞ்சு வச்சிருக்கு.. ஊருக்கு போயிட்டு வந்து எல்லாம் சரி செஞ்சுடலாம்னு பார்த்தா, கங்கா இப்படி செஞ்சு வச்சிருக்காளே!! என்று கவலை கொண்டவர், வேன் டிரைவரிடம் கொஞ்சம் வேகமாக வீட்டுக்கு போகச் சொன்னார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.