(Reading time: 12 - 23 minutes)

“சார்… நீங்க இங்க எப்படி?...”

விக்கி வினவிட, அவனுக்கு விளக்கினான் தீபன்…

“என்ன சாப்பிடுறீங்க சார்?...”

தீபன் இயல்பாய் கேட்டிட,

“நீங்க எது ஆர்டர் பண்ணியிருக்கீங்களோ அதுவே எனக்கும் ஓகே…” சட்டென வந்தது கௌஷிக்கின் பதில்…

“அப்படி இல்ல சார்… ஃபர்ஸ்ட் டைம் எல்லாரும் சேர்ந்து சாப்பிடுறோம்… எங்க மூணுபேருக்கும் பிடிச்சதை தான் ஆர்டர் செய்திருக்கோம்… உங்களுக்கும் என்ன பிடிக்கும்னு சொல்லிட்டீங்கன்னா…”

தீபன் இழுத்திட, “பிடிச்சதுன்னு சரியா சொல்லத்தெரியலை… கொடுக்குறது எதுன்னாலும் சாப்பிட்ருவேன்… எதையும் ஒதுக்கமாட்டேன்னு அம்மா சொல்வாங்க…” என்றான் கௌஷிக் சிரித்துக்கொண்டே…

அவன் சொன்னதுமே, “அவ்வளவு நல்லபையனா சார் நீங்க… ஆச்சரியமா இருக்கு… நான் கூட முதல்ல உங்களைப் பார்த்தப்போ, உங்களை இப்படி ஒரு குழந்தைப்பையனா நினைச்சேப் பார்க்கலை…” என்ற விக்கி,

“என்ன சொன்னாலும் சார்… தீபன் அளவுக்கு யாருமே எதையும் ஒதுக்கிடமுடியாது… என்ன கொடுத்தாலும் தின்னு தீர்த்திடுவான்…”

சொல்லிவிட்டு அவன் சிரித்திட, தீபனோ விக்கியை முறைத்தான்…

கௌஷிக்கோ, “ஆனா தீபனைப் பார்த்தா நீங்க சொல்லுற மாதிரி எதுவுமே தெரியலையே… ஹீ இஸ் வெரி ஃபிட் அண்ட் ஸ்மார்ட் டூ…” என கூறிட,

“நீங்க சொல்லுறது சரிதான் சார்… இவன் எல்லாத்தையும் அவன் எலும்புக்குள்ள சேர்த்து வச்சிப்பான்… சரியான சாப்பாட்டுராமன்னு சாருக்கா தான் அவனை கிண்டல்பண்ணிட்டே இருப்பாங்க… இல்லையா சாருக்கா?...”

விக்கி சாருவிடம் வெகுஇயல்பாய் கேட்டிட, அவளோ பேச திராணியில்லாது தலையை மட்டும் ஆட்டினாள்…

அவளின் செய்கை கௌஷிக்கை யோசிக்க வைத்திட, “இவங்க இப்படித்தான் சார்… நீங்க சொல்லுங்க… என்ன சாப்பிடுறீங்க?...” தீபன் மீண்டும் கௌஷிக்கிடம் வினவிட,

“ம்ம்ம்… தயிர்சாதம்…” என்றான் கௌஷிக்…

“சார்…….” என விக்கி அதிர்ந்தே விட, தீபனுக்கோ இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை…

“என்ன விக்கி என்னாச்சு?...”

கௌஷிக் தன்மையாய் கேட்டிட,

“வெறும் தயிர்சாசம் போதும்னு சொல்லுறீங்களே சார்… அதான் நம்ப முடியலை…”

“இதுல என்ன இருக்கு விக்கி?... அது ஒன்னு தான் கொஞ்சம் நல்லா சாப்பிடுவேன்னு அம்மா சொல்லுவாங்க…”

“ஆச்சர்யமா இருக்கு சார்… நீங்க வெளிய வந்தாலும் இதுதான் சாப்பிடுவீங்களா?...”

“நான் வெளிய எப்பவுமே சாப்பிடமாட்டேன்… பிசினஸ் விஷயமா வெளிய போக நேர்ந்தாலும் வீட்டுக்குப் போய் தான் சாப்பிடுவேன்… வெளியூர்ன்னா, அங்க ப்ரெட் & ஜாம்… அவ்வளவுதான்…”

“லாங்க் ட்ரிப்பா இருக்குறப்போ?...”

விக்கி ஆர்வத்துடன் கேட்டிட,

“ஒன் ஆர் டூ டேஸ் மேல நான் அங்க இருக்கமாட்டேன்… அதையும் மீறி இருக்க நேர்ந்தா, அம்மாவையும் கூட்டிட்டு போயிடுவேன்…”

“ஏன் சார்… உங்க அம்மாவை விட்டு இருந்துக்க மாட்டீங்களா?...”

“உண்மையை சொல்லணும்னா, கண்டிப்பா என்னால அது முடியாது… எனக்கு என் அம்மா பக்கத்துல இருக்குறது தான் சந்தோஷமும் கூட…”

அவன் சிரித்துக்கொண்டே வெகு இலகுவாக கூறிட, விக்கிக்கோ அவனது அந்த அசாத்திய எளிமை மிகவும் பிடித்துப்போனது…

எத்தனை மனிதர்கள் இப்படி இருக்கக்கூடும்?... ஓரளவு வளர்ந்துவிட்டாலே, தாயின் கையணைப்பிலிருந்து வெளியே வர நினைத்திடும் இவ்வுலகத்தில், இன்னமும் தாயின் அருகாமையினை விரும்பும் ஓருவன், இந்த இளம் வயதிலேயே பல சிகரம் தொட்டுவிட்ட சாதனையாளனின் இந்தப்பாசமே அவனை இந்த உயரத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறதோ என வியந்து போனான் விக்கி…

அந்நேரம் அவர்கள் ஆர்டர் செய்திருந்த சாப்பாடும் வந்துவிட, தீபனும் விக்கியும் தங்களுக்குப் பிடித்த பிரியாணியினை எடுத்துக்கொள்ள, சாருவின் முன்னாலும் ஒரு உணவு இருந்திட,

அவள் அதனை எடுத்து கௌஷிக்கின் முன் வைத்தாள்… வைத்த கையோடு, “இன்னொரு பிளேட் தயிர்சாதம் கொண்டு வாங்க…” என வந்தவனிடம் அவள் சொல்லி அனுப்ப, அவனும் அதனைக்கொண்டு வர செல்ல,

கௌஷிக்கோ அவளையேப் பார்த்திட்டான்…

“நீங்க எங்களோட விருந்தாளி… உங்களுக்கு கொடுத்துட்டு சாப்பிடுறது தான முறை… அதான்…” என மிக மென்மையாக்க்கூறிவிட்டு அவள் கௌஷிக்கினைப் பார்த்திட, அவனும் அந்நேரம் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.