(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 15 - மீரா ராம்

thaaba poovum naan thaane... poovin thagam nee thaane

திகாலை எப்பொழுது விடியும் என்று காத்திருந்த தீபன், வெளிச்சத்தின் கீற்று உலகமெங்கும் பிரதிபலித்திட, தாமதிக்காது சாருவின் அறைக்கதவில் தட்டி சப்தம் எழுப்பினான் அவன்…

“சாரு….”

சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த சாருவின் செவிகளில் தீபனின் அழைப்பு கேட்டிட, அதுவரை அவள் இருந்த, அவளுடைய உலகத்திலிருந்து விடுபட்டவள், நிகழ்காலத்தினை எதிர்கொள்ள சற்றே சிரமப்பட்டாள்…

“தீபா….”

அவளின் உதட்டிலிருந்து பெயர் வெளிபட, சட்டென எழுந்து கொண்டவள், வேகமாக கதவை நோக்கி செல்ல, ஓர் நொடி ஓரே நொடி அவள் மனது நிதானம் கொள்ள, உடனேயே தன் நடையை நிறுத்து கண்களை அழுந்த துடைத்தவளாய், உதட்டில் புன்னகையை படரவிட்டு கதவினைத் திறந்தாள்…

“என்னடா?.. இந்த தட்டு தட்டுற?... கதவை திறக்கமாட்டேனா?...”

கோபம் பாதி, கேலி பாதியாய் அவள் கதவைத் திறந்தபடி கேட்க, அவள் முகத்தினை ஆராய்ந்தான் தீபன்…

புன்னகை மயமாய் இருக்கும் அவள் முகம், கண்களில் எந்த சோகமும் தென்படாத அவளது கருவிழிகள்…

அவன் நினைத்து வந்தது வேறு… இங்கே அவன் கண் முன்னே நின்றிருப்பவளின் இத்தோற்றம் வேறாக இருக்கிறதே…

எண்ணங்களின் மத்தியில் அவன் அகப்பட்ட நேரத்தில், தோற்றம் என்ற ஒன்று அவன் மூளையினை விழித்துக்கொள்ள செய்ய, அவளைப் பார்த்திட்டான் அக்கணமே…

நேற்று இரவு அணிந்திருந்த அதே உடை… அந்தப்புடவையை மாற்றிடாது அவள் அப்படியே இருந்திட்டாள்…

அணிந்திருந்த வளையல், தலையில் சூடியிருந்த பூ… வைத்திருந்த நெற்றிப்பொட்டு… என எதுவுமே மாறிடாது அப்படியே இருந்திட்டது அவளிடம்…

அவன் எண்ண ஓட்டங்களை உணர்ந்தவளாய், “என்னடா தீபா… நான் உன் அக்காதான்… எதுக்கு இப்படி பேயை பார்த்த மாதிரி நிக்குற?...” என கேட்டிட,

“பேயை பார்த்தா கூட பயந்துருக்கமாட்டேன்…. உன்னை இப்படி பார்க்குறேனே… அதான் பயமாயிருக்கு…”

அவனும் சட்டென ஒளிவுமறைவு இல்லாது கூறிட, அவள் புருவங்களுக்கு மத்தியில் லேசான முடிச்சு விழ, அவள் அதனை மறைத்து,

“என்னடா பசி வந்துட்டா?.. காலையிலேயே உளறிட்டிருக்குற?...” என அவன் பக்கம் அவள் கேள்வியினை திருப்பிட

“யாரு நான் உளருறேனா?... நேரம் தான்…” என நொந்து கொண்டான் அவன்…

“டேய்… ஏண்டா… காலங்கார்த்தாலயே இப்படி நொந்து போகுற?...” என்றவள், அடுத்து பேசும் முன்பே அவன் கேட்டிட்டான் அக்கேள்வியை….

“நடிக்கிறாயா சாரு… ??”

ஒருகணம் திகைத்த அவளது மனம் உடனேயே அதிலிருந்து மீண்டிட, அவனை பார்த்து புன்னகைத்தாள் அவள்…

“எதுக்குடி சிரிக்குற?... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு…”

அவன் முறைத்தபடி கேட்டிட,

“பின்ன நீ கேட்குற கேள்வி உனக்கே காமெடியா இல்லையாடா தீபா?...”

சொன்னவள் மேலும் சிரித்திட,

“அப்போ இதுக்கு என்ன அர்த்தம்?...” என தன் போனைத் தூக்கி காட்டிட, அவளின் விழிகளில் ஓர் விநாடி தெரிந்திட்ட அக்கலவரத்தினை அவன் அறிந்திடும் முன்பே, அவள் தன் மெத்தையில் அமர்ந்து மேலும் சிரிக்கத் தொடங்கிட அவன் கடுப்பானான்…

“ஏண்டா இதுகூடவா உனக்குத் தெரியலை… வரவர ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் ஆகிடுச்சா உனக்கு?...”

“லாஸ் ஆகிடக்கூடாதுன்னு தான் உங்கிட்ட இப்படி வந்து பேசிட்டிருக்குறேன்…”

அவன் குரலில் தெரிந்திட்ட உறுதியானது அவளின் சிரிப்பை நிறுத்திட, அத்தருணத்தை பயன்படுத்திக்கொண்டவன்,

“நேத்து யாரு போன் பண்ணினா?...” என நேரே விஷயத்திற்கு வந்திட, அவள் பதில் பேசிடவில்லை..

“சொல்லு சாரு… யாரு பேசினா?...”

அவள் மீண்டும் மௌனமாகவே இருந்திட,

“கேட்குறேன்ல… நீ இப்படி சிலையா இருந்தா என்ன அர்த்தம்?... என்ன சொன்னாங்க அவங்க போன்ல?...”

அவன் கேட்டதும், விரக்தியாக புன்னகைத்தவள், “என்ன சொல்லணுமோ அதை சொன்னாங்க…” என்றாள் இயல்பாக…

“மண்ணாங்கட்டி…” என வெடித்தவன்,

“நீ என்ன வாயில கொழுக்கட்டை வச்சிருந்தீயா?....” அவளை எதிர்த்து கேள்வி கேட்டபடி, “அவங்க சொன்னாங்களாம்… இவ கேட்டாளாம்…” என குமுறினான் அவன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.