(Reading time: 11 - 22 minutes)

“அவன் இப்படிதான் புதிதாக யாரை பார்த்தாலும் பேசிக் கொண்டே இருப்பான்.” என்று அடுத்து தேவ சேனா ஆரம்பித்தாள். “நாங்கள் உங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் தான் இருக்கிறோம். உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேட்கலாம்.” என்று ஒரு மூத்த சகோதரியாக பேசினாள் தேவா.

புதிய இடத்தில்  இப்படி தமிழில் பேச அருகிலேயே ஒரு ஆள் இருப்பதை நினைத்து மகிழ்ச்சியாகவே இருந்தது உத்ராவிற்கு. 30 நிமிட பயணத்தில் வீட்டை அடைந்தனர். வெளியில் இருந்து பார்க்க வீடு மிக அழகாக இருந்தது. காரில் இருந்தே ரிமோட்டால் கராஜ் கதவை இயக்கி திறந்து காரை உள்ளே நிறுத்தினான் அபிமன்யு.

“காலையில் பார்க்கலாம்” என்ற படி தூங்கிய வருணை தூக்கியபடி, அவர்கள் வீட்டிற்கு சென்றனர் உத்தமனும், தேவாவும்.

காரஜில் இறங்கிய பின் வீட்டிற்குள் செல்லாமல் வெளியே வந்து வீட்டின் அழகை ரசித்தாள் உத்ரா. வீடு அழகாக இருந்தது.  இரண்டு கார்கள் நிறுத்த வசதியாக இரண்டு கராஜ் இருந்தது.  வீட்டை சுற்றி முழுவதும் புல்வெளியாக இருந்தது. சுற்று சுவர் இல்லாமல் குரோடன்ஸ் செடியால் வீட்டின் எல்லை வகுத்து இருந்தது. ஏர்போர்ட் வரும் பொழுது காரை எடுத்த பொழுதே வீட்டின் விளக்குகளை எரியவிட்டிருந்தாள் தேவா. அதனால் வீடு ஜகஜோதியாக காட்சி அளித்து. உத்ராவிற்கு மிகவும் பிடித்து இருந்தது. அவளும் அபியும் எப்படிப் பட்ட வீட்டில் வாழ வேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்தாளோ  அதை விட அழகாக இருந்தது.

“போதும் வீட்டை ரசித்தது. உள்ளே வந்து பெட்டிகளை எடுத்து வைக்க உதவு.” உள்ளிருந்து அபி குரல் கொடுக்க, உத்ரா உள்ளே நுழைந்தாள்.

கராஜ் வழியாக உள்ளே நுழைந்தால்,  முதலில் டைனிங் அறை வந்தது. அதில் பெரிய மேஜை போட்டு, எட்டு நாற்காலிகள் இருந்தது. அடுத்து சமையல் அறை சகல வசதிகளுடன் சுத்தமாக இருந்தது. இவை தவிர கீழ் தளத்தில், டிவி பார்க்க தனி அறையும், ஒரு படுக்கை அறையும், வரவேற்ப்பு அறையும்,  இருந்தது.

வரவேற்ப்பு அறையின் பக்கவாட்டு கதவை திறந்தால், அங்கு பால்கனி போன்ற அமைப்பும், அதில் புல் தரையும், அமர மூங்கிலால் ஆன சோபாவும் போடப்பட்டு இருந்தது. அங்கிருந்து பார்த்தால், அருகில் ஓடும் ஒரு சிறு ஓடையும் தெரிந்தது.

முன்பக்க கதவு வழியாக வந்திருந்தால்,  நடுவில் இருந்த அந்த அறை வந்திருக்கும், அதில் இருந்து எல்லா அறைகளுக்கும் செல்லும் படி பாதை அமைந்து இருந்தது. அதிலிருந்து மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளும் இருந்தது. அதில் ஏறிச் சென்றால், இரண்டு  படுக்கை அறைகளும், ஒரு கணினி அறையும்  இருந்தன.

பெரிய படுக்கை அறையில் தன்னுடைய பெட்டியை வைத்து விட்டு, எதிரில் இருந்த அறையில் உத்ராவின் பெட்டியை வைத்தான் அபிமன்யு.

“இந்த அறையை நீ உபயோகித்துக் கொள் உத்ரா” என அபி கூறிய பொழுது...

“முடியாது, முடியாது. எனக்கு தனி அறையில் இருக்க பயமா இருக்கும். நானும் உங்க அறையிலேயே இருந்து கொள்கிறேன்.” என பதறிய படி கூறினாள் உத்ரா. விட்டா நம்மை சாமியாராக்கி விடுவான் போலிருக்கே என்று  எண்ணியபடி.

“உங்க வீட்டில் எப்படி இருப்பாய் உத்ரா? “ என அபி வினவ...

“எங்க வீட்டில், அக்கா பூமிஜா உடன் இருப்பாள். அதுவும் இல்லாமல் இது புது இடம். எனக்கு பயமா இருக்காதா? “ என எதிர் கேள்வி எழுப்பினாள் உத்ரா.

“முதலில் கொஞ்ச நாள் நாம் நல்ல நண்பர்களாக பழகலாம் என்று எண்ணினேன். உனக்கும் அது வசதியாக இருக்கும் என்று எண்ணி தான் அப்படிக் கூறினேன்.” என்று தன்னிலை விளக்கம் அளித்தான் அபி.

“ஒரே அறையில் இருந்தாலும் நண்பர்களாக பழகலாம், அதுவும் வசதியாகத் தான் இருக்கும்.” என உத்ரா பதில் அளிக்க.

“உனக்கு வசதியா இருக்கும், எனக்கு” என்று வாய்க்குள் முனுமுனுத்தான் அபி.

“என்ன சொன்னாலும் கொஞ்சம் எனக்கும் கேட்கும் படி சொல்லுங்கள்” என்று உத்ரா கொஞ்சம் சத்தமாகவே கூறினாள்.

“சரி, நான் குளித்து விட்டு உறங்கப் போகிறேன். நீயும் உடை மாற்றி வந்து படு” என்று கூறியபடி துண்டை எடுத்துக் கொண்டு குளியல் அறையில் நுழைந்து கொண்டான் அபி.

உத்ராவும் எதிர் அறைக்கு சென்று பெட்டியை திறந்து இரவு உடை எடுத்து, அந்த அறையில் இருந்த குளியல் அறையில் நுழைந்து குளித்து வந்தாள். வீடு முழுவதும் ஹீட்டர் போட்டிருந்தாலும், உத்ராவிற்கு குளிரத் தான் செய்தது. இரவு உடை அணிந்து மேலே ஒரு சால்வையை போர்த்திய படி அபியின் அறைக்கு வந்தாள் உத்ரா.

“குளிருதா உத்ரா? ஹீட்டரில் கொஞ்சம் டெம்பரேச்சர் கூட்டவா?” என்று அக்கறையுடன் கேட்டான் அபி.

“வேண்டாம், உங்கள் வசதிக்கான டெம்பரேச்சர் தானே செட் செய்து இருபிங்க. நானும் இதையே பழகிக் கொள்கிறேன்.” என்றபடி அந்த பெரிய படுக்கையி ஒரு ஓரத்தில் படுத்தாள் உத்ரா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.