(Reading time: 11 - 22 minutes)

மறு ஓரத்தில் படுத்தபடி போனை எடுத்தான் அபி. அதில் ஊருக்கு அழைத்து அவனது பெற்றோரிடம் வந்து சேர்ந்ததை தெரிவித்து, அடுத்து உத்ராவின் பெற்றோரையும் அழைத்தான். விபரத்தை கூறிய பின் உத்ராவிடம் போனை நீட்டினான். போனை வாங்கிய உத்ரா அவள் அம்மாவிடம் கிளம்பியதில் இருந்து நடந்த அனைத்தையும் கூறி,

“நாளை போட்டோ அனுப்புகிறேன். என் போனில் தான் போட்டோ எடுத்தேன். அதற்கு சிம் கார்டு வாங்கிய பின் அனுப்புகிறேன்” என்று கூறி அரை மணி நேரம் பேசி முடித்து, போனை அபியிடம் நீட்டிய பொழுது அவன் உறங்கி இருந்தான்.

தூங்கும் அபியை அவ்வளவு அருகில் பார்த்த பொழுது, படத்தில் வரும் ஒரு வசனம் தான் நியாபகம் வந்தது. “இருக்கு, ஆனா இல்லை” என்பது தான். தான் ஆசைப்பட்ட அபி தனக்கு அருகில் இருந்தும், மனதால் தூரமாக இருப்பதாகவே தோன்றியது. போகப் போக சரியாகி விடும் என்றே தோன்றியது  உத்ராவிற்கு.

தூங்கும் அவன் முகத்தை பார்த்த படி மனதிற்குள்

“ பார்த்தேன், பார்த்தேன் , பார்த்தேன்,

சுடச் சுட ரசித்தேன், ரசித்தேன், ரசித்தேன்,

என்ற பாடலை மனதிற்குள் பாடிய படி உறங்கிப் போனாள் உத்ரா. 

காலையில் கண் விழித்த பொழுது நல்ல காபியின் மணம் காற்றில் தவழ்ந்து வந்தது. எழுந்து பல துலக்கி கீழே சென்றாள்.

“குட் மார்னிங் உத்ரா.” என்றபடி அவளுக்கு ஒரு கப் காபியை தந்தான் அபி. கனவில் கண்டது போலவே, இல்லை கற்பனையில் கண்டது போலவே அவன் காபி போட்டு கொடுத்தது, மகிழச்சியாக இருந்தது உத்ராவிற்கு. என்ன பெட் காபியாகத் தான் இல்லை. பரவாயில்லை, போக போக அவனை பழக்கி விடலாம் என்று எண்ணியவாறு .....

“குட் மார்னிங் அபி.” என்றபடி காபி கப்பை வாங்கிக் கொண்டாள் உத்ரா. டைனிங் சேரின் மேல் இருந்த அவளது ஷாலை எடுத்துக் கொள்ள சொன்னான் அபி. சமையல் அறை பின் பக்கம் ஒரு கதவு இருந்தது. அதை திறந்து வெளியே பார்த்தால் நான்கு படி இறங்கி  முழுவதும் புல் வெளியாக இருந்தது. அதன் கீழ்  படியில் அமர்ந்து காபியை பருக ஆரம்பித்தான் அபி. மேல் படியில் உத்ராவும் அமர்ந்து கொண்டாள்.

வெளியே நல்ல குளிராக இருந்தது. அந்த குளிரில் சூடான அந்த காபியை குடிப்பது அமிர்தமாக இருந்தது உத்ராவிற்கு.

“வாவ், இந்த லான் அருமையாக இருக்குங்க “ என்றாள் உத்ரா.

“இப்போ நீ சொன்ன வாவ், அடுத்த மாதம் நான் சொல்ல வேண்டும். இவ்வளவு நாள் நான் தான் இதை பராமறித்தேன். இனிமேல் நீ தான் இதனை பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணிர் ஊற்ற தேவை இல்லை. அந்த சுவிட்சை போட்டால், ஸ்பிரிங்குலர்ஸ் மேல் எழும்பி தண்ணிரை தெளிக்கும். ஆனால் புல் வளர்ந்து விட்டால் நாம் தான் அதனை வெட்ட வேண்டும். அதற்கு கிராஸ் கட்டர் இருக்கு, அதன் மூலம் எளிதாக கத்தரிக்கலாம். அது பேட்டரி மூலம் இயங்கும். பின்பு பாட்டரியை சார்ஜில் போட்டுக் கொள்ளலாம்.” என தெளிவாக விளக்கினான் அபி.

“உங்களுக்கு தோழியாவதற்கே, நான்  அதிகம் உழைக்க வேண்டும் போல் உள்ளதே.” என்று அலுத்துக் கொண்டாலும், உத்ராவிற்கு இதெல்லாம் பிடித்தே இருந்தது.

“உனக்கு கார் ஓட்ட தெரியுமா உத்ரா?” என அபி கேட்க

“நல்லா ஓட்டுவேன். ஆனா அப்பா தான் காரை ஓட்ட கொடுக்க மாட்டார். இருந்தாலும் அப்போ, அப்போ அவருக்கு தெரியாமல் எடுத்துட்டுப் போய் ஓட்டறது தான். இருந்தாலும் வந்தவுடன் உடனே கண்டு பிடித்து விடுவார்.” என உத்ரா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூற...

“அது எப்படி உடனே கண்டு பிடிப்பார் மாமா?” என அபி கேட்க

“வண்டியில் ஏதாவது கோடு போட்டு வைத்தால் சுலபம் தானே கண்டு பிடிக்க” என்று அதே பாவ முகத்தோடு பதில் அளித்தாள் உத்ரா.

“ஒழுங்காக வண்டி ஓட்டத் தெரியாது என்பதை இவ்வளவு சுற்றி வளைத்து சொல்லி இருக்கிறாய்” என்று சிறு முறுவலுடன் கூறியபடி எழுந்தான் அபி.

காபி குடித்து முடித்த பின், இருவரும் உள்ளே சென்றனர். சமையலறை, சாப்பாட்டு அறையுடன் சேர்ந்து பெரிய அறையாகவே இருந்தது. அங்கு எந்த எந்த சாமான் எங்கு உள்ளது என்பதை காட்டினான் அபி.

“இன்று ஒரு நாள் நான் வீட்டில் இருந்தே வேலை செய்ய ஏற்ப்பாடு செய்துள்ளேன். உனக்கு வீடு பழகுவதற்கும் , ஏதாவது சந்தேகம் இருந்தாலும் நீ என்னிடம் கேட்டுக் கொள்வதற்கும் உதவும்  உத்ரா. உனக்கு சமையல் தெரியும் தானே? ” என சந்தேகமாக கேட்டான்  அபி.

“சமையலா? அப்படினா!!! என்று திரும்பி அவனையே கேட்டாள் உத்ரா.

En arugil nee irunthum

தொடரும்...

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1170}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.